பல இனத்தாரும் பல மொழிகளும் உள்ள நாட்டில் ஒரு மொழி பேசும், ஒரு சாதி அரசாங்கத்தை அமைப்பது கொடுமையான தீமைகளை விளைவித்தே தீரும்? அந்நாடுகளில் ஒற்றுமையும் அமைதியும் எங்ஙனம் நிலைபெறும்? நடந்தேறிய இரு பெரும் போர்களின் பயனாகவும் அவற்றின் பின் ஏற்பட்ட உடன்படிக்கைகளின் பயனாகவும் இன்று பல இனத்தாரும் பல மொழி பேசுபவரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழவேண்டுமாயின் பன்மொழி பல்லின (multilingual multinational) அரசை நிறுவுவதே முறையாகுமென்பது அரசியற்றுறை அறிஞரின் துணிவாகும். எனவே இன்று அக்ரன் பிரபு, அரசியல் அமைப்புப் பற்றிக் கூறிய மொழிகள்;
''பல்வேறு இனத்தார் எவ்விதமாகவேனும் நசுக்கப்படாமல் எல்லாவித உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நாடே முன்னேற்றமுள்ள நாடாகும். எல்லா இனத்தாரும் சமநிலையுடன் பங்குபற்றாத அரசு பூரண அரசன்று. எல்லா வகுப்பினரும் தத்தம் பண்பாட்டினை வளர்ப்பதற்கு வாய்ப்புகள் அளியாத அரசாங்கம் சீர்குலைந்த அரசாங்கமாகும். ஏனைய இனத்தாரை முற்றாக நீர்மூலமாக்கி அழிக்க அல்லது அவரைத் தம்முட் பலவந்தமாகச் சேர்த்துவிட, அல்லது அவரை நாட்டினைவிட்டு ஓட்டிவிட எத்தனிக்கும் அரசாங்கம் சக்தி குன்றி மடிந்துவிடும். மேலும் இத்தகைய அரசாங்கம் ஏனைய வகுப்பினரை தம்முடன் சேர்த்துச் சமனாக நடத்த வல்லமை அற்றாயிருப்பதாற் குடியாட்சியின் அடிப்படைக்கல்லே அற்ற அரசாங்கமாகச் சீரழியும்.''
வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம்.
வளம்பொருந்திய பண்பாட்டையும் பண்டுதட்டு இலங்கையின் வரலாற்றுச் சிறப்பையும் கொண்ட தமிழ் பேசும் இனத்தாரைச் சட்டத்தால் அழிக்கவோ சிங்கள மக்களாக மாற்றவோ அரசாங்கத்திற்கு வலிமையில்லை. எங்கே மொழியுரிமை கொடுங்கோன்மையால் அடக்கி ஒடுக்கப்பட்டதோ அங்கே அடக்க்ப்பட்ட மக்கள் புத்துணர்ச்சியுடனும் புத்தாற்றலுடனும் தம் உரிமைகளுக்காகப் போராட எழுந்தனர். 'ஒக்ஸ்போர்ட்' பல்கலைக்கழகத்திற் சரித்திரப் போதகாசிரியராகும் வின்செற் ஹார்லோ என்பவர் இலங்கை வந்து திரும்பியபொழிது எழுதியதாவது
''நானும் எனது மனைவியாரும் யாழ்ப்பாணஞ் சென்று பூர்வீக இலங்கைத் தமிழர் வசிக்கும் இவ்வரண்ட பிரதேசத்திற் சுற்றுப்பயணம் செய்தோம். இங்கு வசிக்கும் திடகாத்திரமும் விவேகமுமுள்ள மக்கள் தங்களுடைய நசித்துச் சிங்களத்தை அரசகரும மொழியாக்க முயற்சி செய்யும் இரசினர் மீது எவ்வளவு ஆத்திரமும் வெறுப்புமுடையவராய் இருக்கிறார்களென்பதைக் கண்டோம். சிங்களர் காலகதியில் தமது மொழியை மாத்திரமல்ல; புத்த சமயத்தையும் அரசாங்க மதமாகக் கொள்ளவுங்கூடும். இதுவும் மிகவும் துவேஷத்தை உண்டுபண்ணியுள்ளது.''
சாதியினரின் அம்சங்கள் அருஞ்செல்வங்கள்
சிங்களர் தமது புராதன பெருமைகளை நிலைநாட்ட எத்தனிப்பதை எவரும் ஆட்சேபிக்கமாட்டார். எவருக்கும் தமது சாதியினரின் அம்சங்கள் அருஞ் செல்வங்களே. ஆனால் சிங்களரும் தமிழரும் சமநிலையைப் பெற்று அரசியல் நடத்தினாற்றான் இலங்கை உண்மையில் நல்விருத்தியடையும். இல்லையாயின் வேற்றுமையும் அழுக்காறும் ஏற்பட்டுச் சுதந்திர அரசாங்கம் பெலங்குன்றி எதிர் காலத்திற் கீழ்நிலையடைய வேண்டியதாகும்.
"சமீபத்தில் ஒரு சிங்கள மாணவருடன் நான் பேச நேர்ந்தது. இலங்கையின் அரச கருமமொழி ஒன்றாக மாத்திரம் இருந்தாற்றான் இலங்கை மக்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுமென்று அவர் வாதித்தனர். பிரிட்டிஷ் அரசினரே இவ்விஷயத்திற் பலமுறை இப்பெரிய பிழையைச் செய்ததை வரலாற்றிற் காணலாம் என்று நான் அவருக்கு நினைவூட்டி னேன்.''
இலங்கையில் வாழும் தமிழர் சிறுபான்மையரென்று கூறிவிடவியலாது. இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் தொகை, அவர்கள் இலங்கையின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு நிகழ்த்திய தொண்டு, இலங்கையின் பண்பாட்டிற்கும் செல்வாக்கிற்கும் தமிழ் மொழி அளித்த சேவை, தமிழ் பேசும் மக்கள் சிங்களம் பேசும் மக்களுக்கு ஆற்றிய நன்மைகள், இலங்கை சுதந்திரம் அடைவதற்குழைத்த தமிழ்த் தலைவர்களின் தொண்டு இன்னோரன்ன பல காரணங்களை முன்னிட்டே தமிழ்மொழிக்குச் சமநிலை அளித்தல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர் சிங்களத் தலைவர் சிலர். நாட்டின் ஒற்றுமை மொழியால் வருவதன்று; சமயத் தால் வருவதுமன்று. ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு நாட்டை அமைத்தல் வேண்டுமெனின் ஆங்கிலத்தைப் பேசும் மக்கள் அனைவரும் ஆங்கிலேயர், அமெரிக்கர், தென்னாபிரிக்கர், அவுஸ்திரேலியர் என்று பிரிந்திராது, ஒரே யொரு அரசினை நிறுவுதல் வேண்டும். இந்திய மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர்; பல மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், ஆயினும் இமயமலையைச் சேர்ந்தவர்களும் குமரிமுனையைச் சேர்ந்தவர்களும் தாம் அனைவரும் இந்தியரென்ற ஒற்றுமை உணர்ச்சியைப் பாராட்டிவருகின்றனர். எனவே மொழியால் வருவதன்று ஒற்றுமை. மக்களின் ஒற்றுமை அவர்களின் மனப்பான்மையிலும் சிந்தையிலும் குடிகொண்டிருக்கின்றது. இலங்கை நாட்டிற்கு ஒற்றுமை வேண்டுமெனின் பல சமயங்களையும், பல வகுப்புக்களையும் சமமாகக் கொண்டு இத் தீவின் நிலப்பரப்பில் ஒரே குடையின் கீழ் வாழ உரிமைகள் கொடுப்பதாற்றான் வரும்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக