விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

2019-08-13 by விருபா - Viruba | 0 கருத்துகள்


மீள்பதிப்பின் முன்னுரை

‘‘திருட்டாந்த சங்கிரகம்” என்ற தமிழ்த் தலைப்புடனும் ‘‘A Collection of Proverbs in Tamil  with Their Translation In English” என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது. திருட்டாந்த சங்கிரகம் என்பதைச் சுருக்கமான எடுத்துக்காட்டு என்று பொருள் கொள்ளலாம்.  அதுவரை காலமும் வாய்மொழி இலக்கியமாக தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு, முதல்முறையாக அச்சுவாகனமேறி நூல்வடிவம் பெற்றுள்ளது.

பேர்சிவல் பாதிரியார் தனது மறைதிருப்பணியை 1826ம் ஆண்டில் (Findlay, George G, Holdsworth William West,  1924, The history of the Wesleyan Methodist Missionary Society) திருகோணமலையில் தொடங்கியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் 1826இல் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வந்துள்ளதாகத் தனது முன்னுரையில்(1874) குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண அமெரிக்கன் மிஷனரியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பேர்சிவல் பாதிரியார், அமெரிக்கன் மிஷனறியைச் சேர்ந்த ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் துணையுடன் நிறைவு செய்யப்பட்ட A manual dictionary of the Tamil language என்ற கையகராதித்(மானிப்பாய் அகராதி/யாழ்ப்பாண அகராதி) தொகுப்பிலும் பங்குபற்றியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் ஈழத்திற்கு வந்து பத்தாண்டுகளிற்குள்  தமிழ் மொழியில் நிறைந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவரால் கையகராதித் தொகுப்புப் பணியிலும், திருட்டாந்த சங்கிரகம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடமுடிந்துள்ளது. 

1830-1832 இடைப்பட்ட காலத்தில் கல்கத்தாவில் பணியாற்றிய மூவாண்டு காலம் தவிர்த்து, 1826-1851 வரையில் அவர் ஈழத்தியிலேயே நிலைகொண்டிருந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படக் காரணமானவர் பேர்சிவல் பாதிரியார். இக்கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களில் இவர் பற்றிய குறிப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. 1842இல் யாழ்ப்பாணத்தில் கையகராதி வெளியிடப்பட்டது. அம்முயற்சியில் பேர்சிவலின் பங்களிப்பைப் பற்றிய பதிவுகள் American Board of Commissioners for Foreign Missions மூவாண்டுக் குறிப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலை (இன்றைய யாழ்.போதனா வைத்தியசாலை) தோன்றுவதற்குக் காரணமான ஆபத்துதவிகள் சங்கத்தின் (Frind-in-need Society) தோற்றம் தொடர்பில் உதயதாரகைப் பத்திரிகைச் செய்தியிலும் பேர்சிவல் குறிப்பிடப்படுகிறார். John H Martyn அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட Notes on Jaffna என்ற நூலிலும் பேர்சிவல் பற்றிய செய்திகள் உள்ளன. இவை யாவும் பீற்றர் பேர்சிவல் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட கல்விப்பணிகளைப் பற்றி  ஜெ.இராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
“கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது, உயர்வானது எனப் பெர்சிவல் கருதினார். இதனால் தமது சபையினருடன் ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முறித்துக்கொண்டு இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த கல்விப்பணி தலைமுறை கடந்தும் பயன்தந்தது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இலங்கையில்(1948) சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையான சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில் இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும் டாக்டர் பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”  (பக்கம் - 152)  
“மதம் பரப்புவதற்காக வந்து, இந்திய-தமிழ் இலக்கியங்களில், பண்பாட்டில் தங்களைத் தொலைத்த பல்வேறு ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் டாக்டர் பீட்டர் பெர்சிவல், பல நிலைகளில் தமிழியலில் தனது இருப்பை ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் அறிந்தோ அறியாமலோ அவர் செய்த நன்மைகளில் குறிப்பிடத்தக்கது, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தமிழக வருகைக்குக் காரணமாக இருந்தமை. அவர்களிருவரின் ஆரம்பகால ஆளுமை உருவாக்கத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈழ அறிஞர்களின் மீதான மதிப்பு தமிழகத்தில் இவர் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டது. 
பிற்காலத்தில் மேற்படி இருவரின் பதிப்புப் பணிகளுக்கும், ஆறுமுகநாவலரின் சமயப்பரப்புரைக்கும் பெர்சிவலே ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளார்.”
(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு. பக்கம் - 159, 160) 

பேர்சிவல் பாதிரியாரின் கல்விப்பணிகளால் நிரந்தர நன்மைகளைப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தவர்களாவர். நாம் அவரது வழியில் தமிழியலுக்கு பணியாற்றவேண்டிய பாத்தியதையுள்ளவர்களாக இருக்கிறோம்.

1854 தொடக்கம் 1882இல் இறக்கும் வரை பீற்றர் பேர்சிவல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே  வாழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் இவரே. மாநிலக்கல்லூரியின் கீழைத்தேய மொழியியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அன்றைய சென்னை மாகாண பொதுக்கல்வித்துறையின் ஆலோசகராகப் பணியாற்றுகையில்  பொதுக்கல்வித்துறைக்கு பாடத்திட்டங்கள், வரைபடங்கள் தயாரித்துள்ளார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளையும் உருவாக்கியவர். சதுரகராதி 1860ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.  தினவர்த்தமானியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அவர் புரிந்த பணிகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் உள்ளன. 

திருட்டாந்த சங்கிரகம் தொகுத்தல் பணியை பீற்றர் பேர்சிவல் ஈழத்தில் வாழ்ந்தபோதே நிறைவேற்றினார். இதில் காணப்படும் பழமொழிகளில் பெரும்பான்மையானவை ஈழத்தில் வழக்கில் இருந்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். 1870 பழமொழிகளுடன் வெளியிடப்பட்டஇந்த முதற் பதிப்பானது அதன் பின்னர் மீளவும் அதேவடிவில் அச்சில் கொண்டுவரப்படவில்லை. 

1851இல் ஈழத்தில் இருந்து இலண்டன் திரும்பிய பேர்சிவல் பாதிரியார் 1854இல் தமிழகம் சென்று தனது மறைதிருப்பணியைத் தொடர்ந்துள்ளார். சென்னையில் 1855இல் ஆரம்பிக்கப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர்ப்பணி, மறைதிருப்பணி என்பனவற்றோடு பழமொழிகளைத் திரட்டும் வேலையை மீண்டும் தொடர்ந்துள்ளார். தினவர்த்தமானி பத்திரிகை அறிவிப்பினூடாக பொதுமக்களிடம் இருந்து பழமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.

‘‘Tamil Proverbs with their English Translation” என்ற ஆங்கிலத் தலைப்புடன்  தமிழ்ப் பழமொழித் தொகுப்பு பேர்சிவல் பாதிரியாரால் தினவர்த்தமானி வெளியீடாக 1874இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 6156 பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1843 பதிப்பிற்கும் 1874 பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் இதுவரையில் எந்தவொரு ஆய்வாளராலும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. 

பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த குறைபாடுகள், விடுபடல்கள் பற்றிய தகவல்களை அவர் முன்னுரையில் (1874) சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கில விளக்கம் சிலவிடங்களில் மூலத்தின் உண்மைக்கருக்களிற்கு மிகவும் நெருங்கி வரவில்லையென்பதை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பழமொழிகளைப் போன்றே தோற்றம் தரும் நீதிவாசகங்கள், உவமைகள், திருக்குறளின் பகுதிகள், விடுகதைகள், வழக்காறுகள் இன்னபிறவற்றையும் அவர் பழமொழிகளாகக் கருதித் தொகுப்பில் இணைத்துள்ளார். 1850களில் நிலவிய அறிவார்ந்த நிலையை(intellectual level) எண்ணிப் பார்க்கும்போது, இதனை ஒரு குறையாக இன்று நாம் சொல்லமுடியாது, இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திப் பாதுகாத்தமைக்கு பேர்சிவல் பாதிரியாருக்கு நாம் நன்றி கூறவேண்டும். 

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்தம் ஐரோப்பியர் தமிழ்ப்பணி (2003, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற நூலில் பீற்றர் பேர்சிவல் கூறியவற்றின் நீட்சியாக அமையும் மேலதிக விளக்கங்களைத் தந்துள்ளார். சி.இளங்கோவின் பழமொழித் தொகுப்புகள் 1842-2000 என்ற நூலும்(2003, பல்கலைப் பதிப்பகம்), ஜெ.இராதாகிருஷ்ணனின் டாக்டர் பீட்டர் பெர்சிவல் என்ற தலைப்பிலான கட்டுரையும்(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு) எமது கவனிப்பிற்குரியவை. இம்மூன்று ஆய்வாளர்களும் கூறியவற்றை மீளவும் கூறுவதைத் தவிர்த்து அவர்கள் மூவராலும் பேசப்படாதனவற்றையும் அவர்களுடைய தவறுகளையுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘‘Almost immediatly after my arrival in this country in 1826...”  என்று பேர்சிவல் பாதிரியார் 1874இல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுவதை, பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரமும்(2003, பக்கம் 88), சி.இளங்கோவும்(2003, பக்கம் 31) மேற்கோள் காட்டியுள்ளனர். அம்மேற்கோள் தொடரை ‘‘பேர்சிவல் பாதிரியார் 1826இல் சென்னை வந்தடைந்தார்.” என இருவரும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் பீற்றர் பேர்சிவல் ‘‘this country” எனக் குறிப்பது இலங்கையையே ஆகும். 1874இல், பிரிட்டிஷ் இந்தியாவின் பாகமாகவே இலங்கையும் கருதப்பட்டது. இதனை உணராதவர்களாய் இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர். 

மேலும், பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003) அவர்கள் 1843இல் வெளியான முதற்பதிப்பைப் பார்வையிடவில்லை என்றே நாம் கருதுகிறோம், 1874இல் வெளியான இரண்டாவது பதிப்பைத்தான் அவர் பார்வையிட்டுள்ளார். ஏனெனில் 1874 பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் குறிப்பிடும் விடயங்களையே அச்சொட்டாக மீளவும் குறிப்பிடுகிறார். 1843 பதிப்பில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் 1870, ஆனால் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘nearly nineteen hundred”  என்றே குறிப்பிடுகிறார், இதனைப்  பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003, பக். 88) ‘‘... அவர் 1900 பழமொழிகளைத் திரட்டி...” என்று கூறுகிறார்.

அடுத்ததாக மேற்கூறிய மூவரும் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசையில்(நெடுங்கணக்கு) தந்துள்ளார் என்று மட்டுமே சொல்கிறார்கள், ஆனால் அகரவரிசையின் தன்மையை இவர்கள் நுணுகிக் கவனிக்கவில்லை. 1843இல் வெளியான பதிப்பில் பழமொழிகளின் முதல் எழுத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க பின்னிணைப்பு - 2C, 2D), 1874இல் வெளியான இரண்டாம் பதிப்பில் பழமொழியின் முதற்சொல்லின் அனைத்து எழுத்துகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு அகரவரிசைப்படுத்த முயன்றுள்ளார் (பார்க்க பின்னிணைப்பு - 3C, 3D).  ஆனாலும் பல இடங்களில் வரிசைப்படுத்தலில் தவறுகள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக உள்ளது. 

மேனாட்டவர்களாற் தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழித்தொகுப்புகள் மூன்றை ஒப்பிட்டு, அவற்றின் பரிணாமவளர்ச்சியைக் காட்டும் அட்டவணை ஒன்றை ஆய்வாளர் சி.இளங்கோ தனது நூலின் 50ஆம் பக்கத்தில் தந்துள்ளார். இதில் பேர்சிவல் பாதிரியாரின் 1843பதிப்பில் இருமுறை வந்த பழமொழிகள் எதுவும் இல்லை என்பதாக அவரது அட்டவணை சொல்கிறது. ஆனால் உண்மையில் பேர்சிவல் பாதிரியார்  ‘‘ஏதாகுதல் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.(325, 409)”, ‘‘குருடனுக்கு வேண்டியது கண்.(676, 713)” ஆகிய இரண்டு பழமொழிகளைத் தனது 1843பதிப்பில் இரு இடங்களில் இணைத்துள்ளார். ஆய்வாளர் சி.இளங்கோ அவர்களினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியாமற் போனமைக்குக் காரணம் அவர் அகரவரிசைப்படுத்தலை நுணுகி ஆராயாது விட்டமையே. இவ்விரு பழமொழிகளும் அருகருகாக வரிசைப்படுத்தப்படாமல் வெவ்வேறு பக்கங்களில் இடம்பெற்றமையினால் சி.இளங்கோவின் பறவைப் பார்வைக்கு அகப்படவில்லை.  

மேலும் பேர்சிவல் பாதிரியார் பயன்படுத்திய அகரவரிசை என்பது, முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதியில் காணப்படும், வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார் என்ற மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகரவரிசை. இது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்றவாறு உள்ள ஒரு வரிசைப்படுத்தல். இது தமிழ் மொழியின் மரபான அகரவரிசையல்ல, எனவே பேர்சிவல் பாதிரியாரால் 1843இல் யாழ்ப்பாணத்திலும், 1874இல் சென்னையிலும் வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டையும் ஒன்றிணைத்து, மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுடன் (பார்க்க - தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும். பக்கம் XXIX) நாம் இப்பதிப்பினை உருவாக்கியுள்ளோம்.  

இவ்விடத்தில் பேர்சிவல் பாதிரியார் தொகுத்துப் பதிப்பித்தவற்றை, பிறிதானதொரு அகரவரிசைப்படுத்தலுடன் மீளவும் பதிப்பித்தல் மரபுமீறல் ஆகாதோ என்றும், ஏன் இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைக்கவேண்டும் எனும் கேள்வியும் சிலருக்குத் தோன்றலாம். 

இதற்கான விடை - நோக்குநூல்கள் பல வகைப்படும். அகராதிகள், ஆய்வடங்கல்கள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், தொகுப்புகள் ஆகியன நோக்குநூல்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்நோக்குநூல்களில் தரவுகள் பொருண்மையின் அடிப்படையில், காலவரிசையில், எண்வரிசையில் அல்லது அகரவரிசையில் அடுக்கப்படும். ஏன் இவ்வாறு அடுக்கப்படுகின்றன என்பதற்குக் காரணம், நோக்குநூல்களில் அடுத்தடுத்துக் காணப்படும் தரவுகள் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. 

நோக்குநூலான பழமொழித் தொகுப்பில், பழமொழிகளை அகரவரிசையில் அமைத்துத் தந்துள்ளார் பேர்சிவல் பாதிரியார். இது பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று. நூலில் அடுத்தடுத்துக் காணப்படும் பழமொழிகளும் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. இவற்றை மரபார்ந்த தமிழகரவரிசையில் அடுக்கித் தருவதில் எந்தவித பொருள் இழப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒருவரால் சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட தரவுகள் வேறொருவரால் பிறிதொரு ஒழுங்கில் வரிசைப்படுத்தியமைக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டபோது,  ஓலைச்சுவடியில் தொகுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து முன்னேற்றங்கண்டு இன்று அச்சில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. அச்சில் வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் தங்களுடைய தமிழ் அறிவின் துணைகொண்டு சதுரகராதியின் அச்சுப்பதிப்பில்  மேம்படுத்தலைச் செய்துள்ளார்கள். இதனைத் தமிழ் லெக்சிகன் முன்னுரையில் (1936) எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்
‘‘In these editions, the several meanings of a word are arranged in alphabetical order; but the manuscripts do not support this arrangement.” (பக்கம் XXXVII) 

என்று பதிவு செய்துள்ளார். தமிழ் அகராதிக்கலை(1965) என்னும் நூலில் பேராசிரியர் சுந்தரசண்முகனார்
‘‘ஆசிரியரால் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.” (பக்கம் 379) 

என்று பதிவு செய்துள்ளார்.சதுரகராதியின் ஓலைச்சுவடிப் பதிப்பு, அச்சுப் பதிப்பு ஆகியவற்றில் இருந்து தாரம், வரி என்ற இரண்டு சொற்களையும் அவற்றிற்கான பொருள்விளக்கச் சொற்களையும் எடுத்துக்காட்டாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுந்தரசண்முகனார் ஆகிய இருவரும் தந்துள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தமிழியல் ஆய்விதழின் 45வது இதழில் (June 1994) தமிழ் அகராதிகளின் அகர வரிசையும் அமைப்பும் - முதல் மூன்று ஒரு மொழி அகராதிகள் என்ற தலைப்பில் முத்துசண்முகன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில்
‘‘இதனால் அடிகளார் தொகுத்த அகராதியின் உண்மை வடிவினைக் காண இயலாமற்போயிற்று” 

என்று ஆதங்கப்படுகிறார். இவ்வாறு ஆதங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை, ஏனெனில் குறைபாடுகள் உள்ள ஒரு பதிப்பைவிட முன்னேற்றமான தவறில்லாத பதிப்பே பெரும்பயன்தரும் ஒன்றாகுமல்லவா.

மேற்கூறப்பட்டவாறு சதுரகராதி அச்சுப் பதிப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்று இப்பதிப்பில் நாம் மரபார்ந்த தமிழ் அகரவரிசையில் பழமொழிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். இது எந்தவிதத்திலும் மரபு மீறல் ஆகாது. அகரவரிசைப்படுத்தலில் பேர்சிவல் பாதிரியாரின் முதற் பதிப்பைவிட இரண்டாம் பதிப்பு முன்னேற்றமுடையது, அதுபோன்று இப்பதிப்பு 1874 பதிப்பைவிட முன்னேற்றமுடையது.

பேர்சிவல் பாதிரியாரின் பதிப்புகளில் பழமொழி ஒவ்வொன்றிற்கும்  வழங்கப்பட்ட எண்ணும், அப்பழமொழி எந்தப் பக்கத்தில் இடம்பெற்றதென்பதும், பதிப்பாண்டும் இப்பதிப்பில் பகர அடைப்பினுள் தரப்பட்டுள்ளது. பேர்சிவல் பாதிரியாரின் பதிப்பு உண்மை வடிவினைக் காண விரும்புவோர், பகர அடைப்பினுள் குறிப்பிடப்படும் எண்களின் அடிப்படையில் பழமொழிகளை வரிசையாக அடுக்குவதன்மூலம் கண்டடையலாம். 1843பதிப்பில் இருமுறை இடம்பெற்ற பழமொழிகள் இரண்டு. 1333, 1536 ஆகிய இரு எண்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, 637 என்ற எண் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது, இவ்வகையில் 1843 பதிப்பில் இடம்பெற்ற பழமொழிகள் 1870 ஆகும். 

அடுத்து,  இரண்டு பதிப்புகளையும் ஏன் ஒன்றிணைத்தோம் என்பதற்கான விளக்கம். ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874 பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற்பதிப்புகளாகவும் இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ்நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிரவும் முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார் பேர்சிவல் பாதிரியார், இதனால் இருவேறுவிதமான மொழிபெயர்ப்பையும் ஓரிடமாகப் பார்க்கலாம். 

இப்புதிய பதிப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்ற 90 விழுக்காடு பழமொழிகளுக்குப் பேர்சிவல் பாதிரியார் ஏன் மீண்டும் புதிய மொழிபெயர்ப்புகளைச் செய்தார் என்ற விடயம் எமக்குக் குழப்பம் தருவதாகவே இருந்தது. இந்நிலையில் பேர்சிவல் பாதிரியார் தொடர்பில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிந்து அவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினோம். பேர்சிவல் பாதிரியார் சேகரித்த தமிழ்ப் பழமொழிகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்திருந்ததாகவும், அவ்வோலைச் சுவடியை மதுரை இறையியல் கல்லூரியின் ஆவணக்காப்பகத்தில் இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்மூலம் அறிந்துகொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்று தமிழகம் திரும்பிய பேர்சிவல் பாதிரியாரிடம் 1843இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருட்டாந்த சங்கிரகம் புத்தக வடிவில் இருந்திருக்கவில்லைப் போலும், தமிழ் ஓலைச் சுவடியையே பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இதனாற்றான் அவரால் 1874பதிப்பு முன்னுரையில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்றிருந்த பழமொழிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லமுடியவில்லை, புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது.  

பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தந்துள்ளார், ஆனால் சென்னைப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தருகிறார். 1874 பதிப்பில் உள்ள 6156 பழமொழிகளில் இருந்து 412 பழமொழிகளுக்கு மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தந்துள்ளார், இதில் 232 பழமொழிகள் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் உள்ளவை. ஈழத்தில் அவர் முதன்முதலாக இறைபணி தொடங்கிய இடம் திருகோணமலை என்பது 1072ஆம் இலக்கப் பழமொழிக்குத் தரும் கூடுதல் விளக்கத்தில் உள்ளது.
பேர்சிவல் பாதிரியாரினால் 1874இல் வெளியிடப்பட்ட பதிப்பு இதுவரையில் 6 தடவைகள் இந்தியாவில் மீளவும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ள விபரத்தைக் கீழே தரப்பட்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. 1877  Tamil Proverbs with their English Translation. Higginbotham and Co, Madras.
2. 1996 Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) Asian Educational Services, New Delhi.
3. 2001 Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint) Asian Educational Services, New Delhi.
4. 2002 Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint) Asian Educational Services, New Delhi.
5. 2010 தமிழ்ப் பழமொழிகள் வசந்தா பதிப்பகம், சென்னை.
6. (2019) Tamil Proverbs with their English Translation. The Asian Publications,Royapettah, Chennai.

மேற்காட்டப்பட்டுள்ள பதிப்புகளில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் காணப்பட்ட வடிவத்திலான பழமொழிகள் இடம்பெறவில்லை. ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுவோம்,

சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him. 
[1874 Edition - Number:3057 / Page:287]
சங்காயிரங்கொண்டு வங்காளம்போனாலுந் தன்பாவந் தன்னோடே.
Though one freights his vessel with a thousand Chanks and sails to Bengal his own crimes will accompany him.
[1843 Edition - Number:827 / Page:116]

இது நேரடிப்பொருள் தரும் ஒரு பழமொழி. யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள ‘வங்காளம்’ என்பது சென்னைப் பதிப்பில் ‘காசி’என்பதாக மாறுகிறது. ‘வங்காளம்’ ஏன் ‘காசி’யாக மாறியதென்பதற்குப் பின்னால் சுவைமிகு சமூக வரலாறு ஒன்று உள்ளது.

உதயதாரகைப் பத்திரிகையில் 1841ம் ஆண்டு வெளியான புதினச் செய்திகளைக் கொண்டு இதனை விளக்கலாம். 

1841ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வெளியான உதயதாரகையில்
“காரதீவிலிருந்து கற்பிட்டிக்குப் போகவெண்ணின பயணக்காரர் மூன்றுபேரும் தவால்காரனுந் தோணி ஏறிப்போகையிலே காற்று எதிர்த்தடிக்க அந்த நாலுபேர்களுந் தொணியைப் பலனாகப் பிடித்திருந்தும் காற்றில் தோணி உலைவுகொண்டு அங்குமிங்கும் போகத் திரை எழும்பத் தவாற்காரன் கைவிட்டமிழ்ந்திறந்தான்.” 

என்ற புதினச் செய்தி பிரசுரமாகியுள்ளது.  அன்றைய நாட்களில் நீண்ட தூரப் பயணம் என்பது கடற்பயணம் ஆகும் என்பதை இச்செய்தியின் மூலம் நாம் ஊகிக்கலாம். இலங்கையின் கிழக்குக்கரைக் காரைதீவில் இருந்து மேற்குக்கரைக் கற்பிட்டிக்குச் செல்வதற்கான பிரயாண வழியென்பதே கடல் மார்க்கமாகவே இருந்துள்ளபோது, இந்தியாவில் உள்ள காசிக்குப் போவதென்பதும் கடற்பயணமாகவே இருந்திருக்கும். காசிக்கு அண்மித்ததான கப்பல் வழியென்பது வங்காள தேசத்தினூடகவே அமையும்.
“பருத்தித்துறைக்கு அருகான வல்லுவட்டித்துறையிற் செய்யப்பட்டும், சங்கேற்றிக்கொண்டு வங்காளத்திற்கு முதற் பயணம் போனதும், (௨௱௫௰) தொன் (Ton) பாரங்கொண்டதுமான படவொன்று சிறிதுநாட்களுக்குமுன் அடித்த புசலினாற் சென்னபட்டணத்திற் செதப்பட்டுப்போயிற்று.” 

ஈழத்தில் இருந்து வங்காளத்திற்கு கப்பல் மூலம் சங்கு வாணிபம் செய்யப்படுகிற ஒரு நிலையும் இருந்துள்ளதை 1841ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி உதயதாரகையில் வெளியான இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவ்விரு செய்திகளினூடாக யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள மேற்குறித்த பழமொழியில் ‘வங்காளம்’ என்ற சொல் இடம்பெற்றது இயல்பானதென அறிந்துகொள்ளலாம். 

முதலிரு பதிப்புகளிலும் இடம்பெற்றவாறே பழமொழிகள் இப்பதிப்பிலும் இடம்பெறுகின்றன, அதாவது முதலிரு பதிப்புகளிலும் காணப்படுகிற தவறுகள் எதையும் திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இதனை நாம் ஒரு ஆவணப் பதிப்பாகவே செய்துள்ளோம், ஆய்வுப் பதிப்பல்ல. 

பேர்சிவல் பாதிரியார் பழமொழிகளைத் தொகுத்தது வெளியிட்டது போன்று, ஈழத்தவர்கள் சிலரும் பிற்காலத்தில் பழமொழி நூல்களை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை சி.இளங்கோ தனது நூலில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் வெளியீடுகள் பின்வருமாறு, 
  1. 1914 - பழமொழிப் போதனை - சி.ஆர்.சாஸ்திரி (பாடல் வடிவில்)
  2. 1916 - பழமொழித் தீபிகை - நாவலர் அச்சுக்கூடம் - பருத்தித்துறை வே.ஆ.சிதம்பரப்பிள்ளை (160 பழமொழிகளுக்கு விளக்கம்)
  3. 1932 - விவசாயம் பற்றிய பழமொழிகள் - சபாரத்தினசிங்கம்
தமிழில் வெளியான மிக முக்கியமான சில அகராதிகளின் தொகுப்பு முயற்சிகளிலும், பதிப்பு முயற்சிகளிலும் தோன்றாத்துணையாக உடன் நின்றவர் பேர்சிவல் பாதிரியார். ஆயினும் அவர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டும் அவரது சுயமுயற்சியின் அறுவடை. எனவே அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழித் தொகுப்புகளை இணைத்து மீளவும் வெளியிடும் நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறோம். 

இம்முன்னுரையில் தொகுப்பியல், அகராதியியல் நோக்கில் எமது கருத்துக்கள் சிலவற்றைக் கூறியுள்ளோம். இம் மீள்பதிப்பு முயற்சியில் எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர் அ.சிவஞானசீலன் பழமொழிகள் தொடர்பில் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்புப் பணியில் உதவிய நண்பர் முத்தையா வெள்ளையன் அவர்களுக்கும், ஆங்கிலப் பகுதியைச் செவ்வை பார்த்து உதவிய ஹாட்லிக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான ச. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பக்க வடிவமைப்பில் உதவிய கலைச்செல்வன், சிறீனிராஜ், சடகோபன் ஆகியோருக்கும், பேர்சிவல் பாதிரியார் கோட்டோவியத்தினை வரைந்து தந்த சௌந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

விருபா குமரேசன்
13.11.2018
t.kumaresan@viruba.com

அகராதி, பழமொழிகள், பேர்சிவல், Rev. Peter Percival

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (1)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For