நாள் : 1968.01.10 பேட்டி கண்டவர் : கோவிந்தன்
இலங்கையிலே ஒரு சின்னஞ்சிறு தீவிலே பிறந்த தனிநாயகம் அவர்கள் கல்வி, கேள்விகளில் திறம்பட விளங்கிப் பட்டங்கள் பல பெற்று உலக பந்தங்களையும் சொந்தங்களையும் துறந்து அடிகளாக ஆனார்கள். பந்தத்தையும் பாசத்தையும் துறந்த தனிநாயகம் ஒரு தமிழ் நாயகம் ஆவார். தமிழைத் துறக்காத இந்தத் தனிநாயகம் இலங்கை, அண்ணாமலை நகர், இலண்டன் போன்ற இடங்களில் படித்து எம். ஏ., டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். இலங்கையிலே பிறந்த இவர் இன்று மலேயாவிலே தமிழ் மணம் பரப்பி வருகிறார். அகில உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டில் முக்கியப் பொறுப் பேற்றுத் தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரவச் செய்யும் இவரைத் தமிழத்திரு தனிநாயக அடிகள் என்று நமக்கு அழைக்கத் தோன்றுகிறது. முழுக்கையுள்ள நீண்ட வெள்ளை அங்கியும், ஒளி வீசும் கண்களும், சாந்தமான முகத் தோற்றமும், இனிய தமிழும், சரளமான ஆங்கிலமும் பேசுகின்ற தனிநாயகம் தமிழ் பேசும் மக்களின் இதயங்களிலே நிற்கிறார் என்று கூறினால் மிகையாகாது.
உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிச் சென்னைக்கு வந்திருந்த தனிநாயகம் அவர்களிடம் 'தீபத்'திற்கு பேட்டி வேண்டி இரண்டு மூன்று முறை கேட்டபோது. "நேரமில்லை; பார்க்கலாம்" என்று கூறிவந்தார்கள். 10-1-68 ந்தேதி காலையிலே பேட்டி பற்றிக் கேட்டபோது, ''நாளையே விமானம் மூலம் புறப்படுகிறேன்'' என்றார். 11-1-68 இரவு சென்னை முதலமைச்சர் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது விருந்தினர்கள் தங்கியிருந்த புதிய சட்டமன்ற விடுதிக்குச் சென்றபோது, தனிநாயகம் அவர்களைக் கண்டோம். மீண்டும் பேட்டி பற்றிக் கேட்டபோது "முதலமைச்சர் விருந்துக்குக் கட்டாயமாக இருக்க நேரிட்டுவிட்டது. நாளை விமான மூலம் புறப்படுகிறேன். பேட்டிக்கு இப்போது நீங்கள் உடனே தயாரா?" என்று அடிகள் இணங்கினார். விருந்தினர்கள் அன்று இரவே விருந்து முடிந்ததும் சுற்றுலாப் புறப்படுவதற்கும், தங்களுடைய நாடுகளுக்குத் திரும்பச் செல்லுவதற்கும் பெட்டி படுக்கைகளைக் கட்டிக் கொண்டு புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கார்களிலும் பஸ்களிலும் விருந்தினர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருந்த பரபரப்பான சூழ்நிலை. விருந்தினர் மாளிகையின் முன் வராந்தா ஒரு ரயில் நிலையம், அல்லது விமான நிலையத்தைப் போலப் பரபரப்பாக இருந்தது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் தீபத்தின் பேட்டிக்குச் சரி என்று கூறித் தன்னுடைய 271-ம் நம்பர் அறைக்கு அழைத்துச்சென்றார் அடிகள். மாடிப்படி யில் ஏறும்போதே சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொன்னார். அறைக்குச் சென்றோம். உபசாரத்திற்குப் பிறகு பேட்டி தொடங்கியது.
தமிழ் மொழி பற்றித் தங்களுடைய கருத்தென்ன?
எளிதில் எல்லோரும் கற்றுக்கொள்ள ஏற்றதாகவும், ஓசை நயமும், இனிமையும் நிறைந்த ஒரு மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. ஏனெனில் வேற்றுமை உருபுகள் ஒருமைக்கும் பன்மைக்கும் பயன்படுத்துவதற்கு உரியனவாக அதாவது மிகவும் எளிமையாகவும் இனிதாகவும் உள்ளன. லத்தீன், வடமொழி ஆகிய மொழிகளில் கூட இதுபோல் இல்லை என்று கூறலாம். அடிச் சொற்கள் வேறு வேறு பொருள்களைக் குறிப்பது இம்மொழிக்குள்ள தனிச் சிறப்பாகும் கிழமை - உரிமை; கிழவன் - உரிமை பெற்றவன்; ஞாயிற் றுக்கிழமை - ஞாயிற்றுக்கு உரிய நாள் போன்றவைகளைக் காணவேண்டும். கடந்த 25 நூற் றாண்டுகளாக, இலக்கண, இலக்கியத்திலிருந்து சொற்களைப் பெருக்கிக் கொண்டு இம் மொழி வளர்கிறது. அவைகளை நன்கு அறிந்து வருவதற்கு இன்பத்தைத் தரும் டாக்டராக நல்லூர் ஞானப் பிரகாசம் தத்துவ ரீதியிலே நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. கருத்து இருக்கிறது. சிறப்பாக வாய்மை, உண்மை, பொய்மை போன்ற சொற்களின் கருத்துக்களை ஆராயும்போது தனி இன்பத்தைத் தரும். இம்மாதிரியான புதுச் சொற்கள் வருவதற்கும் இம்மொழியில் இடம் இருக்கிறது என்பது ஒரு தனிப் பெருமையாகும். புகையிலை நம் நாட்டிற்கு முதல் முதல் வந்தபோது இலையை அறிந்த மக்கள், புகைப்பதற்கு உபயோகமாக இருக்கின்ற காரணத்தால் புகை + இலை என்று சேர்த்துப் புகையிலை என்று மிகவும் எளிதாகவும், இயற்கையாகவும் ஒரு புதிய சொல்லை உண்டாக்கிவிட்டார்கள். வள்ளிக் கிழங்கை அறிந்தவர்கள் மரத்தைப் போன்றும், வள்ளியைப் போன்றும் விளங்கும் பெரிய செடியிலிருந்து வருகின்ற கிழங்கை அதாவது வள்ளிக்கிழங்கைப் போன்ற ஒரு கிழங்கை ‘மர' என்ற இரண்டு எழுத்துள்ள ஒரு சிறிய சொல்லைப் போட்டு மரவள்ளிக் கிழங்கு என்ற ஒரு புதிய சொல்லை மிகவும் எளிதாக, இயல்பாக, இனிமையாக ஏற்படுத்தித் தந்தார்கள். புதிய சொற்கள் தமிழ் மொழியில் இதுபோன்ற முறையில் வருவதே மொழிக்கு வலிவைக் காட்டுவதாகும். அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர். பரிமேலழகர் போன்றவர்களுடைய விளக்கங்களிலேயிருந்து இந்த இருபதாம் நூற்றாண்டின் கருத்துக்களை விளக்க ஏற்ற சொற்களைக் கண்டு வருகிறேன். "நீர்கால யாத்திரை" என்ற சொல் இன்றைய (Irrigation) நீர்ப்பாசனம் என்பதற்கும் பொருந்தும். திண்ணகம் என்ற சொல்லை உலோகம் (Metal) என்ற பொருளில் அடியார்க்கு நல்லார் பயன்படுத்தியுள்ளார். எனவே திண்ணகம், விண்ணகம், மண்ணகம் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள்கள் தருவது கண்டு இன்புறுகின்றோம்.
தமிழ் மொழியில் விஞ்ஞானம் விரைவில் போதிக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?
தமிழ் மொழியில் விஞ்ஞானத்தைப் போதிக்க முடியும். ஆனால் அதற்குக் கொஞ்ச நாள் ஆகும். முன்னேற்பாடாக விஞ்ஞான நூல்கள் வளர வேண்டும். விஞ்ஞானத்தில் அகில உலக ரீதியில் பபன்படுத்தும் சொற்களை (International Technology) அப்படியே பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானம் பயில ஆங்கில மொழி அவசியம் அறிந்திருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞான நூல்களைத் தந்த பிற மொழிகளை அறிவதே விஞ்ஞானத்தை அறிய வசதியாகும். மேல் ஆராய்ச்சி செய்வதற்கு ரஷ்ய, ஜெர்மன், ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் அறிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளை அறிந்தால் முதல் தரமான விஞ்ஞான அறிவு வளரும். ஆங்கில நாட்டாரும் ரஷ்ய மொழிகளைக் கற்று வருகிறார்கள். ரஷ்ய நாட்டாரும் ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று வருகிறார்கள் ஆகவே படு அவசரம் காட்டாமல் நிதானமாகச் சென்றால் தமிழில் விஞ்ஞானத்தைப் போதிக்கலாம்.
மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டிற்கும் சென்னை மாநகரத்தில் நடந்த தமிழ் மாநாட்டிற் கும் உள்ள தனிச் சிறப்புக்கள், ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை என்று கூற முடியுமா?
கோலாலம்பூரில் நடந்த மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டார்கள். மலேயாவில் இருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு அதிகமாகவே அம்மாநாட்டிற்காக நாங்கள் பாடுபட்டோம். முதல் மாநாடு என்ற முறையில் அம்மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இனி நடக்கப் போகும் மாநாடு களுக்கெல்லாம் இம்மாநாடே வழிகாட்டியாகும். முதல் மாநாட்டில் ஏற்பட்ட அநுபவங்கள் இரண்டாவது மாநாட்டை நடத்த மிகவும் உதவி செய்தன.
இங்கு நடந்த இரண்டாவது உலக மாநாட்டினுடைய சிறப்பிற்கு ஆரம்ப வேலைகளை மிகவும் வெற்றிகரமாகத் திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமில் ஸ்வலபிலும் செய்தார்கள். தமிழ் நாட்டினுடைய தலைநகரத்தில் வந்து மாநாட்டை நடத்தும்படி முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் முதல் மாநாட்டின்போது கோலாலும்பூரில் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பாகும். நாற்பத்திரண்டு நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பெருமை செய்தார்கள். இவர்களில் பலர் உலகக் கண்ணோட்டத்தோடு புதிய கருத்துக்களையும், ஆராய்ச்சிகளையும் மன்றத்திலே வழங்கினார்கள். சென்னை யிலே நடந்த மாநாட்டிற்குப் பலரும் பல விருப்பங்களில் வந்தார்கள். மலேயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தமிழகத்தைக் காண வேண்டும்; தமிழகத்து மக்களோடு உறவாட வேண்டும். என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு வந்தனர். வேற்றுநாட்டார் தமிழ் மண்ணில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனி விருப்புடன் வந்தார்கள். திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமிலும், மற்றவர்களும் பல நாடுகளுக்கும், நேரில் சென்று அறிஞர்களைச் சென்னையில் நடந்த மாநாட்டிற்கு அழைத்தார்கள். நேரில் அழைத்த காரணத்தால் பேராளர்கள் பெருவாரியாக வந்தனர். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகச் சென்னை மக்கள் இந்த மகா நாட்டை மிகவும் சிறப்பாக நடத்தினர். விருந்தோம்பலில், தலைசிறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டிற்கு இணங்க மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்குச் சிறந்த சிறந்த உணவு விருந்தையும், கலைவிருந்தையும் சிறப்பான முறையில் அளித்ததாக மகாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு அறிஞர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். அதற்காக நானும் நன்றி பாராட்டக் கடமையுள்ளவனாகிறேன்.
பாரீஸ் மாநகரத்தில் நடைபெற இருக்கும் அடுத்த உலகத் தமிழ் மாநாடு பற்றிய விவரங்களையும், கருத்துக்களையும் கூற இயலுமா?
1970-ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாவது வாரம், மூன்றாவது உலகத்தமிழ்மாநாடு பாரீஸில் நடைபெற இருக்கிறது. நண்பர் பிலி யோசா விடுத்த அழைப்பை நிர்வாகசபை ஏற்றுக் கொண்டு, இன்றுமுதல் அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுகிறது. 150 முதல் 200 அறிஞர்கள் வரை மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேயா, சிலோன் போன்ற நாடுகளிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் வந்து இந்த மகா நாட்டிலும் கலந்து கொள்ளுவார்கள். இங்கும் கருத்துக்களும், ஆராய்ச்சி முடிவுகளும் அறிஞர் களுக்குள் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும்.
தமிழ் இலக்கியங்கள் பற்றிய தங்கள் கருத் தென்ன? தங்களுக்குப் பிடித்தமான தமிழ் இலக் கியம் எது?
சங்ககால இலக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சங்க இலக்கியங்களில் நான் அதிகம் ஈடுபாடு கொள்ளுகிறேன். இருந்தாலும் அதற்காக மற்ற இலக்கியங்களை நான் ஒதுக்கித் தள்ளிவிடுவதில்லை. சிலப்பதிகாரம் சிறந்த வியப்பிற்குரிய ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது. கிறித்துவ மதத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள எனக்கு ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழில் செய்த பக்தி 'இலக்கியங்களும் இன்பத்தைத் தருகின்றன. கம்பனுடைய அரிய காவியத்தையும், இடைக்காலத்தில் தோன்றிய மற்ற இலக்கியங்களையும் நான் படிப்பதுண்டு. நவீன இலக்கியங்களில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை. ஆராய்ச்சிக்காகவும், பாடம் நடத்துவதற்காகவும் நவீன இலக்கியங்களையும் படிப்பதுண்டு.
தமிழ் நாவல், சிறுகதை ஆகியவை பற்றித் தங்களுடைய கருத்து என்ன?
சிறுகதைகளை நான் படிப்பதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாவல்கள் படித்ததாக ஞாபகம். இப்போது நாவல்களும் படிப்பதில்லை. ஆனால் இத்துறை மிகவும் வளர்ந்துள்ளதாகவும், மக்கள் சிறுகதை, நாவல்களை அதிகம் படிப்பதாகவும் கூறப்படுகிறது. இவை உரை நடையின் வளர்ச்சியாகும். வேதநாயகம் பிள்ளை, திரு. வி. க. போன்றவர்கள்தான் தமிழ் உரைநடை வளத்தை வளர்த்தவர்கள். வரலாற்று நாவல், சமூக நாவல், சிறுகதை முதலியன உரைநடையின் உச்சகட்டத்தில் விளைந்த விளைவாகும்.
நீங்கள் ஆங்கிலத்தில் அதிகம் எழுதுகிறீர்களா அல்லது தமிழ்மொழியில் அதிகம் எழுதுகிறீர்களா?
நான் அதிகமாக ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். இதனுடைய நோக்கம் என்னவென்றால் தமிழ் அறியாத பலரும், தமிழ்க் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளட்டும் என்பதேயாகும்.
பாட்டு இலக்கியம் பற்றித் தங்கள் கருத்தென்ன? பாட்டு இலக்கியம் இந்த நூற்றாண்டில் எடுபடாது என்று கூறுகிறார்களே! இது உண்மையா?
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாரதி பாட்டு இலக்கியத்தின் மூலம்தான் சுதந்திரப் பள்ளைப் பாடி மக்களை விடுதலைக்குப் பாடுபடும்படி செய்தான். பாட்டு இலக்கியம் தமிழ்மொழியோடு பிறந்த ஒரு பேறாகும். இந்தப் பாட்டு இலக்கியத்தின் விரிவே இன்றைய உரைநடையாகும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வெவ்வேறு துறைகளாகும். இரண்டும் இணைந்துதான் செல்லும். வேறுபடாது. வேறுபடமுடியாது.
உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கம் என்ன?
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அல்லது கருத்தரங்கு என்று கூறவேண்டும்.
பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்திடல் வேண்டும், இறவாத புகழுடைய நூல்கள் தமிழ்மொழியில் இயற்றிடல் வேண்டும், திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்' என்று பாடிய பாரதியின் கருத்தே இந்த மன்றத்தின் (Motto) நோக்கமாகும்.
தமிழ்ப் பத்திரிகைகள் பற்றித் தங்களுடைய கருத்தென்ன?
மக்களுடைய வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளில் பத்திரிகைகளும் ஒன்றாகிப்போய்விட்டது. உரைநடை இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டியது பத்திரிகைகளே. எல்லா நாட்டிலும் பத்திரிகைத் தொழில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மலேயா, இலங்கை, தமிழ் நாடு ஆகிய பகுதிகளில் தின, வார, மாத இதழ்கள் தமிழ்மொழியில் நன்கு நடைபெறுகின்றன. இவை மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன.
தமிழ்மொழியைப் போல, உலகில் வேறு எந்த மொழியாவது இத்தகைய மாநாடுகளை நடத்தி இருக்கின்றனவா?
சீன மொழிக்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இத்தகைய கருத்தரங்கங்கள் நடந்து இருக்கின்றன. ஆங்கில மொழிக்கு ஒரு சங்கமே அமைந்து, இத்தகைய செயல்களைச் செய்கின்றது. ஆனால் தமிழ்மொழிக்கு, அகில உலக ரீதியில் ஒரு பெருவிழாவாக நடந்ததைப்போல சீன மொழிக்கோ, ஆங்கிலத்திற்கோ, பிரெஞ்சுக்கோ நடந்ததா? என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும். சென்னையில் நடந்த விழா, உலகளாவியதோர் தனிப்பெரும் சிறப் பைப் பெற்றுவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை.
தீபம் இதழ், அதன் ஆசிரியர் பற்றித் தங்கள் கருத்தென்ன ?
தீபம், ஒரு நல்ல தமிழ் மாத இலக்கிய இதழ் என்று கேள்விப்பட்டேன். இலங்கையிலும், மலேயாவிலும், தமிழ்நாட்டிலும் இந்த இதழும், இதன் ஆசிரியர் நா.பார்த்தசாரதியும் நன்கு அறிமுகமாகியுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழை நன்கு கற்ற புலவரான தீபம் ஆசிரியர் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு நாவல்கள், சிறுகதைகள் படைப்பதும், ஒரு மாதப் பத்திரிகையை நடத்துவதும் புதுமையான ஒன்றாகும். பொதுவாகத் தமிழ்ப் புலமை பெற்றவர்கள் நவீன இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள். நவீன இலக்கியத்தில் ஈடுபட்டவர்கள், பழைய தமிழ் இலக்கியத்தை விரும்பமாட்டார்கள். இரண்டிலும் ஈடுபாடு உள்ள இவர் பத்திரிகை நடத்துவதை எல்லோரும் விசுவாசமாக ஆதரிக்க வேண்டும்.
உலகத் தமிழ் மாநாடு பிரசுரிக்கப்படாத பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்க வழியும் வகையும் செய்யுமா? அதற்கான ஏற்பாடுகள் எனன?
பொது அறிவு, உணர்வு, கருத்துப் பரிமாறுதல் ஆராய்ச்சி ஆகியவைகளும், பாரதி கூறிய தமிழ் வளர்ச்சிக் கருத்துமே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.
பிரசுரிக்கப்படாத இலக்கியச் செல்வங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்கவேண்டிய வேலைகளை அரசாங்கமும், இலக்கியச் சங்கங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். அகில உலக ரீதியில் இதற்கான பண உதவிகளைப் பெற முயலலாம்.
தமிழ்மொழியில் பிரசுரிக்கப்படும் நூல்களைப் பற்றியும் அவைகளின் தரத்தைப்பற்றியும் தங்கள் கருத்தென்ன?
பல தரமான நூல்கள் தமிழ்நாட்டில் பிரசுரம் செய்யப்படுகின்றன. பிரசுர வேலையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். பலரும் வெளியிட்ட நூல்கள் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்று வெளிநாட்டார் பலரும் வருத்தப்படுகிறார்கள். ஹிக்கின்பாதம்ஸ் போன்ற ஒரு பொதுவிற்பனை நிலையத்தில் எல்லா வெளியீட்டகங்களும், வெளியிட்ட நூல்கள் கிடைக்கும்படி வகை செய்யவேண்டும். பிரசுரகர்த்தாக்களுக்குக் கடிதம் எழுதினால் பதிலும் வருவதில்லை என்று குறை கூறப்படுகிறது. தமிழ் நாட்டினுடைய வரைபடம் வேண்டும் என்று நான்கு நாட்களாக அலைந்தேன். கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும் என்றும் எவராலும் சொல்ல முடிய வில்லை. இத்தகைய குறைகள் நீங்க அரசாங்கமும், வெளியீட்டகங்களும், தமிழ்ச் சங்கங்களும் முயன்று வெளிநாட்டாருக்குத் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் நூல்கள் கிடைக்க வழி செய்தால் மிகவும் விசுவாசமாக இருப்பேன்.
நன்றி!
வணக்கம்.
[பேட்டி முடிந்ததும் ஏதாவது அன்பளிப்பாகத் தருவதற்கு அவர் தேடினார். உடன் எதுவும் அகப்படவில்லை. ஆனால் அவருடைய அன்பு மனத்தைத்தான் தேடிக் கொடுப்பதற்கு முன்பே நான் அன்பளிப்பாகப் பெற்றுவிட்டேனே!]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக