1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.
தொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும்,
ஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை
மேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு
என நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது.
இவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, மரபார்ந்த தமிழகரவரிசையாகும்[T].
தமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில் அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன.
2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.
1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “மேனாட்டவர் தமிழகரவரிசை”[W] என்று அழைக்கலாம்.
இம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்களைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா?
அன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. வீரமாமுனிவர் அருளிச் செய்த சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.
3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில்,
"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது? நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து..." என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க.
என்றவாறு கூறும் பேராசிரியர் “இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.” என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை. ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொல்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது.
தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.
4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.
தமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் "இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்" என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள,
"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன..."
என்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.
5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.
1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது.
ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.
6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.
1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர்.
1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.
ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் "ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை" என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை.
முறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்.
7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும்.
மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரையில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,
It is to be noted that we have seen no reason to follow the Tamil Lexicon’s idiosyncratic non-alphabetic ordering of kk before k followed by vowel, and the like: our order is strictly alphabetic.
என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.
8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.
உண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. 1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது.
மேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது.
தற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் நிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.
மேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம், நன்னூல் வழிப்படுத்திய "மொழிமுதல் எழுத்துகள்" என்பதைக் கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
இணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.
இன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.
2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம்,
சைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்கில நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும்? தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க,
தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே
"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்" என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில் பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார்.
9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும். எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும் மரபு உருவாக்கப்படவேண்டும்.
தமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம்.