விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

ஆய்வடங்கல் - சொல்லின் பொருள் அறிந்து...

2025-03-11 by விருபா - Viruba | 0 கருத்துகள்

 

ஆய்வடங்கல்  என்றால் குறிப்பிட்ட பொருளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வரிசைப்படுத்தித் தரும் பட்டியல் அல்லது குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் படைப்புகள் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்துத் தரும் பட்டியல் என்று கூறலாம். 

தமிழில்,  மிகவும் அறியப்பட்ட ஆய்வடங்கல்கள்,

  • 1. கம்பன் ஆய்வடங்கல்
  • 2. மு. வ. ஆய்வடங்கல்
  • 3. அகிலன் ஆய்வடங்கல்
  • 4. தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல்
  • 5. ஜெயகாந்தன் ஆய்வடங்கல்

மு. வ. ஆய்வடங்கல் தொகுத்துத் தந்த பேராசிரியர் சு. வேங்கடராமன் அவர்கள் தந்துள்ள விரிவான விளக்கம் வருமாறு 

''ஆய்வடங்கல் - குறிப்பு விளக்கத்தொகை நூல் (Annotated Bibliography) என்பது ஒரு படைப்பு பற்றியோ, படைப்பாளர் பற்றியோ அமையும். இந்த நூல் இந்த நூற்றாண்டின் தமிழில் சாதனைகள் பல புரிந்து ஒல்லும் வகையெல்லாம் தமிழ் வளர்த்த சான்றோர் மு. வ. அவர்களின் படைப்புகளையும் அவற்றைப் பற்றிய பிறர் ஆய்வுகளையும் முறையாகத் தொகுத்துத் தரும் குறிப்பு விளக்கத்தொகை நூல்.''

இதில் பேராசிரியர் சு. வே ''Annotated Bibliography'' என்ற ஆங்கிலப் பொருளையும் தந்துள்ளதைக் காணலாம். 

ஆய்வடங்கல் ஒரு கருவிநூல் அல்லது நோக்குநூல். 

குறித்த பொருளில் அல்லது குறித்த ஆசிரியர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரின் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் அனைத்துத் தகவல்களைத் தருகிற வேலையை ஆய்வடங்கல் செய்கிறது. அது நூற்றொகை அல்லது ஆய்வுத் தொகுதி அல்லது ஆய்வுச் சுருக்கம் என்ற வகைநூல்களில் இருந்து வேறுபட்டது. ஆய்வடங்கலானது நோக்குநூல் வரிசையில்  நூற்றொகையையும் தாண்டிய கனதியானதும் வேலைச்சுமை கூடியதும் ஆகும். 

ஆய்வுச் சுருக்கம் - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில்  படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கத்தினைத் தருகிற நூல் - இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்கம் ஆல்லது மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் வெளியிடப்படும் வழிகாட்டி நூல். குறித்த தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டத்தினைச் சுருக்கமாகத்  தரும் நூல். 

ஆய்வுத் தொகுதி - 

குறித்த கருத்தரங்குகளில் / மாநாடுகளில் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெற்ற முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். இது பெரும்பாலும் குறித்த கருத்தரங்குகள்  / மாநாடுகள் நடைபெற்று சில காலம் சென்றபின்னர், பொதுவாக வரிசையில் அடுத்த எண்ணில் வரும் கருத்தரங்கில் / மாநாட்டில் வெளியிடப்படும். இது சிலவேளைகளில் ஓராண்டிற்கும் மேற்பட்ட கால இடைவெளிக்குப் பின்னரும் வெளியிடப்படலாம்.  

இந்நிலையில் 2023-2025 ஆண்டுகால இடைவெளியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, தலைப்பில் ''ஆய்வடங்கல்'' என்ற சொல் காணப்படுகின்றதும் என் பார்வைக்குக் கிடைத்ததுமான 3 நூல்களைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம். 

  1. 2023 - யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் : தேர்ந்த நூல் விபரப்பட்டியல்
  2. 2024 -  ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு 2024 - ஆய்வடங்கல்
  3. 2025 - மூன்றாவது சர்வதேச இந்துமாநாடு - ஆய்வடங்கல்(Conference Proceedings)

இதில் முதலாவது நூல் ஓய்வுபெற்ற நூலகர் திரு. க. சௌந்தரராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டு வடக்கு மாகாணம் கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. ''தேர்ந்த நூல் விபரப்பட்டியல்'' என்ற சொல்லாடல் உணர்த்துவது யாதெனில் தொகுப்பாளர் தனக்குப் பார்வைக்குக் கிடைத்த பதிவுகளையே தந்துள்ளார் என்பதும், இதில் விடுபடல்கள் இருப்பின் அதற்குத் தொகுப்பாளர் பொறுப்பல்ல என்பதையும் அச்சொல்லாடல் மறைமுகமாகச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். நூல், சிறுநூல், சஞ்சிகைக் கட்டுரை, சிறப்பு மலர்க் கட்டுரை, பத்திரிகைக் கட்டுரை, தகவல், பிரசுரம், நூலின் பகுதி என்று நானாவித வளங்களில் இருந்து தொகுத்து இந்நூலினை உருவாக்கியுள்ளார். இந்நூலில் சில இடங்களில் தொகுப்புத் தவறுகள்  உள்ளன, எனினும் தொகுப்பளரின் முயற்சிக்கு பெரும் பாராட்டினைத் தெரிவிப்பது எம் கடமை. 

ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தந்திருக்கவேண்டிய கனதி நூலின் உள்ளடக்க விபரங்களில் இல்லை. ''Annotated'' வகைமையில் கட்டயம் காணப்படவேண்டிய குறிப்பிட்ட ஆக்கத்தின் மேலதிக விபரங்கள் நூலில் தரப்படவில்லை. தலைப்பில் நூற்றொகை என்ற பதம் கொடுத்திருக்கலாம். 

அடுத்த இரு நூல்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்பட்டவை.  

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் முழுமையான நிலையில் மாநாடு நடைபெறும் நாளிலேயே தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ''ஆய்வுத் தொகுதி'' என்ற பெயர்கூட கொடுப்பதற்குக்கூட உண்மையான சில ஆய்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இடமுண்டு. காரணம் இவை யாவும் அரங்கில் வாசிக்கப்பட முன்னரே அதாவது ஆய்வாளர்கள் சபையில் அசலப்படாத நிலையில் உள்ளவை. சில கட்டுரையாளர்கள் அரங்கிற்கு வரவும் இல்லை, வாசிக்கவும் இல்லை. 

இவ்வாறு அரங்கேறி வாசிக்கப்படாமலும், அலசப்படாமலும் தொகுதிகளில்  கட்டுரைகள் இடம்பெறுவது மலின முனைவர்களுக்கும் கல்லாநிதிகளுக்கும் வேண்டுமானால் உவப்பாகவிருக்கலாம், ஆனால் ஆய்வுச் சூழல் மாசடையும் ஒரு நிகழ்வாகவே இதனைக் கொள்வதற்கும் இடமுண்டு என்பதை மறுக்கமுடியாது.  இங்கும் ஆய்வடங்கல் என்ற சொற்பதம் தேவையற்றது. 

அடுத்து இம்மாதம் யாழ் பல்கலையில் நடைபெற்ற மூன்றாவது  சர்வதேச இந்து மாநாடு - 2025. இதில் ''ஆய்வடங்கல் Conference Proceedings'' என்ற இருமொழித் தலைப்பு தரப்பட்டுள்ளது. உண்மையில் இது குறித்த மாநாட்டிற்கென ஆய்வாளர்களால் அனுப்பப்ட்ட ஆய்வுச் சுருக்கங்களின் தொகுப்பு. இதற்கு ஆய்வுச் சுருக்கம் என்பதே போதுமானதாகும். 

ஆய்வடங்கல் என்ற சொல்லின் பொருள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கும், இந்துக் கற்கைகள் பீடத்திற்கும் இடையிலேயே மாறுபடுகிறது. தமிழ்த்துறை - ஆய்வுத் தொகுதி என்ற பொருளில் பயன்படுத்துகிறது, இந்துக் கற்கைகள் பீடம் ஆய்வுச் சுருக்கம் என்று வெளியிடவேண்டியதற்கு ஆய்வடங்கல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

அடிப்படைக் காரணம் இருதுறைகளுமே அறியப்பட்ட ஆய்வடங்கல் எதையும் பார்க்கவில்லை, அறிந்திருக்கவில்லையென்பதே.  

 





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For