விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : நினைவலைகள் - கலாநிதி பொன். பூலோகசிங்கம்

2024-04-01 by விருபா - Viruba | 0 கருத்துகள்

   மலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்கவேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு  யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இனவெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது. முப்பத்தொரு ஆண்டுகள் முடிவடைந்து முப்பத்திரண்டாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது.  நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமண்யம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். அவர் பூதவுடல் மறைந்து புகழுடல் எய்திப் பதினாறாண்டுகள் நிறைவேறிவிட்டன. இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் ‘பார்த்த சாரதி’ பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிர்க்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர்-கேட்டவர் ஏற்றுக்கொள்வர். 

    1980ஆம் ஆண்டிலே தமிழிலும் 2005இலே ஆங்கிலத்திலும் வெளியான இருநூல்களை வாசித்தபோது, விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்று வேதனைப்பட்டேன். அந்நூற் கருத்துகளை விமர்சிக்க எமக்கான தகுதியென்ன பார்க்குப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலே ஆற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுப் பேருரையிலே,

“அரசும் அரசின் அடிவருடிகளான தமிழர்கள் சிலரும் மாநாட்டைக் குழப்புவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தனர். வித்தியானந்தனுடைய நன்மாணவர்களாக அதுகாலம் வரையிற் கருதப்பட்ட சிலர், சுயநலம் கருதி அரசுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ்த் துறை பூலோகசிங்கம், வரலாற்றுத் துறை பத்மநாதன் முதலிய வெகுமான்களே வித்தியானந்தனுக்குப் பக்கபலமாக நின்றனர்’’ 

என்று கூறியுள்ள கருத்தினை முன்வைக்கிறோம். (நினைவுப் பேருரை: பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம், கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு, திசம்பர், 1989, பக். 20) 

பேராசிரியர் வேலுப்பிள்ளையின் கருத்துகளை மறைப்பதற்குச் சில தாசர்களால் எடுக்கப்பெற்றிருக்கும் முயற்சிகளை உண்மை விரும்பிகள் நிதானித்து நோக்குதல் அவசியமாகும்.

முகாமைக்குழுவின் உறுப்பினராக 1972ஆம் ஆண்டு ‘சாந்தம்’ பொதுக்கூட்டத்திலிருந்து சரஸ்வதி மண்டபம், கொழும்பு இந்துக் கல்லூரி, சட்டத்தரணி அம்பலவாணரின் அல்பிரட் பிளேஸ் வாசஸ்தலக் கூட்டங்கள்வரை இரு வருடம் இடைவிடாது பங்குபற்றியதோடு, கல்வி ஆய்வுக் குழுவுக்கு நியமிக்கப்பெற்ற மூன்று செயலாளருள் ஒருவராகச் செயலாற்றி, மாநாட்டின் நினைவு மலரின் ஆசிரியராக, அதனை வெளிக்கொணர்ந்தவன் பூலோகசிங்கம் என்ற உண்மையை அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். எனவே நான்காவது மாநாடு பற்றியும் அதனைச் சிறப்பாக நடாத்தி வெற்றி ஈட்டிய தலைவர் பற்றியும் கூற எமக்குத் தகைமையுண்டு என்பதை யாரும் மறுத்தலரிது.

1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலே பண்டாரநாயகாவின் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. வடக்கிலும் கிழக்கிலும் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக்காவலிலே வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரி முன்னணி அரசை 1963இலே மகாசன ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாசக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன அமைத்துக் கொண்டபோதும் தமிழருக்கு விமோசனம் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் மீது மத்தியதர வர்க்கத் தமிழர் வைத்திருந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. ஏனெனில், அதுவரைகாலம் தமிழினத்தின் சார்பாக அவர்கள் கூறிவந்த கோட்பாடுகள் பதவிக்காகத் தூக்கியெறியப்பட்டன. சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாயினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.

1965 மார்ச்சு மாதத்திலே நடைபெற்ற ஆறாவது பாராளுமன்றத் தேர்தலிலே டட்லி சேனநாயகா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. எம். திருச்செல்வம் தேசிய அரசின் அமைச்சர்களில் ஒருவராகித் தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்குச் சாட்சியானார். ஆயினும் எதிரணியில் இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசியஅரசுப் போட்டி போட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்திற் புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காக ஒக்ஸ்போடு பல்கலைக்கழகத்திலே இருந்த காலை (1963 செப்தம்பர் முதல் 1965 அக்தோபர் வரை) அங்கு எம் ஆய்வுக்குப் பொறுப்பாக விளங்கிய பேராசிரியர் தொமஸ் பறோ புதுதில்லியில் 1964 சனவரியின் ஆரம்பத்திற் கலந்துகொண்ட 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம்தேதி உத்தியோகப்பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினராவர்.

பேராசிரியர் தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகித்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே ‘தமிழ் கல்ச்சர்’ எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரமாண்டமான முறையிலே முதல் மாநாட்டினைக் கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தத் திட்டமிட்டுப் பெரியதொரு அணியினைத் திரட்டிச் செயற்படுத்தினார்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இலங்கையிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகப் பணிபுரிந்தது கல்விப் பீடத்திலேயாம்; தமிழ்த் துறையிலே அவர் சேவை எதிர்பார்க்கப்படவில்லை. தமிழ்த்துறையார் அலுவல்களிலே அவர் கை போடவில்லை, ஓரளவுக்கு ஒதுங்கியே இருந்தார் என்றே கூறிவிடலாம். மேலும், அவர் யாழ்ப்பாண மறைமாவட்டத்தினைச் சேராதவராகத் தூத்துக்குடி மறைமாவட்டத்தினராக மறைக்கல்வி பயின்ற காலம் முதலாகப் பேராதனையிற் பணிபுரிந்த காலமும் இருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இக்காரணங்களாலே அடிகளார் யாழ்ப்பாண வட்டத்தினை விட்டு விட்டுக் கொழும்பு வட்டத்திலே அதிகமாக ஊடாடினார். கே.சி.தங்கராசா, வி. கணபதிப்பிள்ளை, கே. செல்வநாதன் போன்றவர்கள் அவருடைய வட்டத்திலே சிறப்பிடம் பெற்றிருந்தனர். இதனால் கோலாலம்பூர் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளையும் பார்வையாளரையும் தெரியும் பொறுப்பும், இலவசப் பயணச்சீட்டுக்கு உரியவராகத் தெரியும் பொறுப்பும் கே.சி. தங்கராசா குழுவிடம் விடப்பட்டிருந்தது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஓய்வு எடுத்ததை அடுத்து, 1965இலே வி. செல்வநாயகம் பேராசிரியர் பதவியினைப் பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத்தலைவராக விளங்கினார்.

கோலாலம்பூர் மாநாட்டுக்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராசிரியர் செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் கோலாலம்பூர் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்குமேல் பார்வையாளர்கள்; மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கே.சி. தங்கராசா நெறிப்படுத்தலிலே அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை எவ்வாறு இயங்கத் தொடங்கியிருந்தது என்பதற்கு ஒரு முன்னறிவித்தல்.

1967ஆம் ஆண்டு சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவச்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே தி.மு.க. இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3- 10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொருளாளர் ஏ. சுப்பையா சென்னை மாநாட்டின் ஆய்வுக்களத்திற்குச் சூத்திரதாரியாக விளங்கினார். ஆயினும் அதேகாலத்திலே ‘பூம்புகார்’ பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா? ஜனரஞ்சகமான அரங்குகளா? சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் லட்சியங்களும் சென்னையிலே பட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.

தமிழ் உணர்வலைகளிலே முன்னுக்கு வந்த தி.மு.க. அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; விரும்பியதாகவும் தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கான இலங்கையர் தேர்வுகள் சகலவற்றிற்கும் பொறுப்பாக இருந்த கே.சி. தங்கராசா குழு கோலாலம்பூருக்கு இயங்கிய மாதிரியே செயற்பட்டது. ஒரே வித்தியாசம் சென்னைக்குப் பார்வையாளர் தொகை அதிகரிக்கப்பட்டிருந்தது! சென்னைத் தமிழ்விழாவை எதிர்பார்த்து அவர்கள் செயற்பட்டனர்!

டட்லி சேனநாயகாவின் தேசிய அரசு முன்வைத்த மாவட்ட சபை மசோதா, அவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஆர். ஜி. சேனநாயாக்காவின் இனவாத முக்கியத்துவத்திற்கு முன் எடுபட முடியவில்லை. 1968 சனவரியில் சென்னை மாநாட்டிற்குச் சென்ற அமைச்சர் திருச்செல்வம் நவம்பரிலே தேசிய அரசை விட்டு நீங்கியதை அடுத்துத் தமிழரசுக் கட்சி தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது.

1970ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற ஏழாவது பாராளுமன்றத் தேர்தலிற் சிறிமா பண்டார நாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி மாபெரும் வெற்றி ஈட்டியது. கே.சி. தங்கராசா இடதுசாரிகளின் நண்பராக இருந்தபோதும் தேசிய அரசின் காலத்திற் காகிதக் கூட்டுத்தாபனத் தலைவராக நியமிக்கப் பெற்றவர். ஐக்கிய முன்னணி 1970இலே மீண்டபோது அவர் சேவை தொடர்ந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் முகாமைத்துவமும் கே.சி. தங்கராசா பொறுப்பிலேயே இருந்தது. இக்காலத்திலே அவரும் தனிநாயக அடிகளாரும் இணைச் செயலாளராக இயங்கியதாகத் தெரிகிறது.

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரீசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டுக்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட்ட திராவிட மொழிகள் பேசியவர்களும் கலந்து கொள்ளக்கூடிய அரங்காக அது அமைந்தது. பாரீஸ் மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ்.எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பிவைத்தது. பாரீஸ்மாநாட்டிற்கு முன்னும் பின்னும் தமிழபிமானிகளிடையே மட்டுமன்றித் தமிழறிஞரிடையேயும் ஈழத்துக்கிளையின் நிர்வாகத்தினர் பற்றியும் அவர்கள் பாரீஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தமுறை பற்றியும் அதிருப்தி ஏற்பட்டது.

அக்காலத்தில் பம்பலப்பிட்டி கிளென் அபர் பிளேஸில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்காக ஒரு வீட்டினை எடுத்து நடத்தினார்கள். அங்கு வெளிநாட்டு அறிஞர்களுக்கு விடுதி வசதிகள், ஆவணநிலையம், வெளியீட்டகம், தொலைபேசி வசதிகள், பகுதிநேர வேலையாள் கொண்ட செயலகம் எல்லாம் இருந்தன என்று கே.சி. தங்கராசா பின்பு 1973 அக்தோபரிலே எங்களுக்குக் கடிதம் மூலம் அறியத்தந்திருந்தார். அதற்கு முன்பு அவ்வசதிகள் பற்றி யாருக்குத் தெரியுமோ தெரியவில்லை! கிளென் அபர் பிளேஸ் வீட்டிலே தான், பாரீஸ் போய் மீண்ட கைலாசபதியும் கமாலுதீனும் 1971 பெப்ருவரி முற்பகுதியில் ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற் காட்சி ஒன்றினை ஒழுங்குபண்ணியிருந்தார்கள். அதன் சார்பாகத் தேர்ந்த நூற்பட்டியல் ஒன்றும் வெளியிடப்பெற்றிருந்தது. அப்பட்டியலிற் கண்ட தவறுகளை எடுத்துக் காட்டித் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அன்று துண்டுப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நான்காவது மாநாடு இலங்கையில் நடைபெறவேண்டியிருந்தது. சோஷலிசம் கதைத்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசகர் வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடம் வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி. தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம்வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவுகட்டிவிட்டனர். ஆனால் அத்திட்டம் தடம்புரண்டு போயிற்று.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள ‘சாந்தம்’ மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்கஇருந்த முகாமைக்குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்கு புலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டுவந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்து பல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.

தமிழ்உணர்ச்சிக்கு முன்பு சலசலப்பு எடுபடவில்லை. இலங்கை அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. 1966ஆம் ஆண்டு முதலாகத் தமிழ் ஆய்வுகளோடு தொடர்பில்லாத முகாமைத்துவம் தன் இருப்பிலே வைத்திருந்த மன்றத்திற்கு முதன் முதலாகத் தேர்தல் மூலம் புதிய முகாமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எதேச்சதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம்வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்!

டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா 1966இலே கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர். அங்கு அவர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்தபோது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்தோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக் குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 செப்தம்பரிலே தலைமையைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் மன்றத்திற்கு வழங்கிய பணத்தையும் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது. 

கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 24.6.84 இல் எடுக்கப்பெற்ற பேராசிரியர் வித்தியானந்தன் மணிவிழாவின்போது ‘துணை வேந்தர் வித்தி’ எனவொரு நூல் வெளியிடப்பெற்றிருந்தது. அதனுள் முன்னாள் நீதியரசர் தம்பையா ‘அன்புடன் வழங்கிய’ அணிந்துரை ஒன்று இடம்பெற்றிருந்தது. யாரைப் பற்றிய நூலுக்கு, யாரிடம் இருந்து அணிந்துரை பெறுவது என்ற விவஸ்தையே இல்லையா! அந்த அணிந்துரையிலே நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. போதாதற்கு நீதியரசரே அங்கு எழுந்தருளியிருந்தார்! அவருடைய கைங்கரியத்தினை மேடையிலே கூறவைத்துவிட்டார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். அவர் தலைமையுரையிலே, நீதியரசர் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குச் செய்த அரும்பெரும் பணிகளை உண்மை தெரியாது எடுத்துரைத்து எம்மை நிலைதடுமாற வைத்துவிட்டார். நீதியரசர் அன்று அளித்த அநாதரவான காட்சி எம் மனக்கண் முன்னே இன்றும் நிற்கிறது.

தங்கராசா தன்னாதிக்கம் பறிபோன கோபத்திலே எவ்வளவு குந்தகம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தவர். கிளென் அபர் பிளேஸ் வீட்டிலோ, மிலாகிரியா அவெனியூ ‘சாந்தம்’ மனையிலோ புதியமுகாமைக் குழு சந்தித்துச் செயலாற்றமுடியவில்லை. சரஸ்வதி மண்டபத்திலும், கொழும்பு இந்துக் கல்லூரியிலும், கடைசியிலே கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிளேஸ் சட்டத்தரணி அம்பலவாணர் இல்லத்திலும் மாறிமாறிக் கூடவேண்டியிருந்தது. தனிநாயக அடிகளார் தன்னோடு நீண்ட காலமாக இணைந்து பழகியவருக்கு எதிராக இயங்கக்கூடாமல் மாநாடு ஆரம்பமாகும்வரை ஒதுங்கியே நின்றார். வர்த்தகப் பிரமுகர் கே.செல்வநாதனும் இதே காரணத்தினாலேயே ஒதுங்கிக் கொண்டார்.

தங்கராசாவின் கடைசி அஸ்திரம் மாநாட்டினை ஆகஸ்டுக்குத் தள்ளிப்போட வேண்டும் என்பதாகும். இவ்விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு முகாமைக்குழு உறுப்பினருக்கும் 1973 அக்தோபர் 29ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்திலே, தாம் முன்வைத்த கருத்தினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளையிலிருந்து தாமும் வேறு சிலரும் வெளியேறப் போவதாகவும் எச்சரித்திருந்தார். அக்காலத்திற் கொழும்புக்கு வந்திருந்த பேராசிரியர் பிலியோசா மாநாட்டினை ஆகஸ்டிலே வைக்கும்படி முகாமைக்குழுவிடம் கேட்டமைக்கும் யார் காரணமாயிருந்தார் என்று அன்று தெரியாதவர்கள் இருக்கவில்லை.

இவ்வுண்மைகளை எல்லாம் மறைக்க முற்படுபவர், அவற்றைத் தெரிந்தவர்கள், அநுபவித்தவர்கள் சிலர் இன்றும் உயிர்வாழ்வதை மறந்துவிட்டனர். தம்பையாவும் தங்கராசாவும் யாழ்ப்பாண மாநாட்டினைக் காணமுடியாமல் ஒதுங்கிவிட்டடமை வருத்தத்திற்குரியது. தனிநாயக அடிகளார் யாழ்ப்பாண மாநாட்டிலே அவர்களுக்கு நன்றி கூறினார்.

யாழ்ப்பாண மாநாட்டினை முன்னெடுத்துச் செல்வதை அதிகம் பாதித்த மற்றொருவர் டாக்டர் எஸ். ஆனந்தராசா. அமைப்புக்குழுச் செயலாளரில் ஒருவரான டாக்டர் ஆனந்தராசா முகாமைக்குழுவின் கருத்துகளுக்கு மாறாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்துமோதல்களால் டாக்டர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக்கிளையின் முகாமைத்துவத்திலிருந்து வெளியேறினார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திராவும் முகாமைக் குழுவோடு ஒத்துப்போகமுடியாமற் சிறிது காலத்திற்குள் அமைப்புச் செயலாளர் பதவியைத் துறந்தார். 

யாழ்ப்பாணத்திலே மாநாடு வைக்கவேண்டும் என்பதே முகாமைக்குழுவின் பெரும்பான்மையோர் கருத்தாகும். இக்கருத்திற்கு ஆதரவு தரமுடியாதவர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கழன்று விட்டனர். இன்று பின்னோக்கிப் பார்க்கையில், இவர்தான் அக்கருத்தை முன்வைத்தார், இல்லை அவர்தான் என்று கூறுவது வீண் விளம்பரம். முகாமைக்குழுவுக்கு ஆரம்பத்தில் அப்பிரச்சினையே இருக்கவில்லை.

பேராசிரியர் வித்தியானந்தன் 5.10.1973இலே முகாமைக்குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை அவற்றை ஏற்றுக்கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:

  • மாநாடு கொழும்பிலே நடக்கவேண்டும்; மாநாட்டை பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்; 
  • பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்; 
  • அமைச்சர் செல்லையா குமாரசூரியர் மாநாட்டில் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் ஹோட்டல் வசதிகளும் உணவு வசதிகளும்கூட முன்வைக்கப்பட்டன.

தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்துவிட்டார். அதனால் ஏனைய அம்சங்கள் பற்றிய பேச்சுக்கே இடமில்லாமற் போய் விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து ‘அபேபலமு’ (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்திலே எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டுக்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பிவிடப் பெற்றனர். ஆனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே ‘விசா’ வழங்கியது. 

யாழ்ப்பாணம் தமிழ் இனத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக்காட்டினார். அதனை யாழ் மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளை எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.

தமிழ்மக்களின் பெருமிதத்தினைக்கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே ‘பஞ்சாப் படுகொலை’ நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,

“தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச்சென்றது 1974 சனவரி பத்தாம் தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்.”

என்பர். (S.J.V.Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism. 1947 -1977, 1944, p. 126).

நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடாத்த உருவெடுத்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளையின் முகாமைக்குழுவிலே 1972இலே உறுப்பினனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற காலம் முதலாகப் பேராசிரியர் வித்தியானந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு முன்பு மாணவனாக இருந்த காலை (1957 - 1961) அவ்வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பினைப் பெற்ற அவருடைய ‘நன் மாணாக்கர்’ கட்டுரை சமர்ப்பிக்கவோ பார்வையாளராகக் கலந்துகொள்ளவோ இல்லை. சி. தில்லைநாதன் மட்டும் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். மாணாக்கர் மாநாட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்டதை பேராசிரியர் வித்தியானந்தன் முகாமைக்குழுவுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலே பெயர் சுட்டி விரிவாகக் காட்டியிருந்தார். ஆயினும் பின்பு நூலாக வெளியிட்ட போது பெயர்களைச் சுட்டுவது தவிர்க்கப்பட்டது. அவர் மனதிலே அவர்களுடைய செயல் பெரும் கசப்பினை ஏற்படுத்தியிருந்தது. இதனாலேதான் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அந்நிகழ்ச்சியை அவருடைய பேருரையிலே விதந்து கூறியிருந்தார்.

திடீரென அவருடைய முடிவு 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத்தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. மனைவியை இழந்து பிள்ளைகளைப் பிரிந்து அவமானத்தினாற் குன்றிப்போனார். அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கல் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்றமுயன்றோம். அவர் மறைவினை நினைத்து நினைத்து வருந்தும் சந்தர்ப்பம் 1991 சனவரியில் எமக்கு ஏற்பட்டது.


(பொ. பூலோகசிங்கம் அவர்களின் பிறந்தநாள் இன்று - ஏப்ரல் 1, 1936)




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For