1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது
'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.
காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.
தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.
அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\
2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்
பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை
'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்
25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...
பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.
“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.
“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது
பாரதி கேட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”
இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?
3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி
அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....
தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....
.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.
இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு..
வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக