தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் செ.யோகநாதன், யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட வெள்ளிப் பாதசரம் ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது. 1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்....
ஈழத்து இலக்கியம்
நவீன ஈழத்துப் படைப்பிலக்கியம் பற்றி பூமிப்பந்தெங்கணும் இன்று பேச்சடிபடுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரத்தின் பயனாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு நடுவேயும் அவர்கள் நமது பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலாச்சார வெளிப்பாடுகளை ஊக்கத்தோடு நிகழ்த்துகிறார்கள். இலக்கிய ரீதியான அவர்களின் முயற்சிகளை அவர்களது பல்வேறு விதமான பத்திரிகை, நூல் வெளியீட்டு முயற்சிகள் தெரியப்படுத்துகின்றன. இந்தவிதமான புலம்பெயர்ந்த இலக்கிய முயற்சி, ஈழத்தின் இலக்கிய முயற்சிகளின் இன்னொரு பரிணாமமே என்பதனை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. உலக ரீதியாகவே ஈழத் தமிழர்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய முயற்சியை உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். ஆழத்து இலக்கியத்தின் வளத்தினை முழுமையாக அறிவதற்கு விரும்புகிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமன்றி எல்லா உலகத் தமிழருக்குமே ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும் செழுமையையும் அறிந்து கொள்ளவதற்கு இந்தத் தொகுதிகள் உதவி செய்யும். அதன் காரணமே அக்கதைத் தொகுதிகளுக்கான இந்த விரிவான அறிமுகவுரை.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், தென்னாப்பரிக்கா, பிஜித் தீவுகள், மொரிஷியஸ் என்பவை இவற்றிலே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. மேற்கூறியவற்றுள், இந்தியா இந்தத் தமிழ்பேசும் மக்கள் திரளின் முதல் வசிப்பிடமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்து போயினர்.
இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கிய மரபில் இலங்கை ‘ ஈழம்” என்றே குறிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே” என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது, ஈழத்தமிழிலக்கியத்தின் சமூக அடிப்படை, இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசம் மக்கள்திரளின் வாழ்க்கை அமைப்பேயாகும். அத்திரளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. அகமொழி, சமய பண்பாடு, சமூக அமைப்புமுறை என்பவற்றின் அடிப்படையிலே இம் மூன்று பிரிவினரும் அமைகின்றார்கள். ஒன்று இங்கு வரலாற்றுக் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள். இவர்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியிலே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு தெற்கு, மத்திய பகுதிகளிலே தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய சமயத்தினர். மூன்று த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவில் இருந்து, இலங்கையின் தேயிலை ரப்பர் ஆகிய பொருந்தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள்.
இம்மூன்று பிரிவினரையும் மொழி அடிப்படையில் ஒரே தொகுதியினராக நோக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முதலாவது, மூன்றாவசது பிரிவினரை இறுக இணைப்பதற்கான அரசியல் சமூக இயக்கங்கள் கடந்த தசாப்தங்களாக இயங்கி வருகின்றன.
இலங்கையின் பண்பாட்டு அமைப்பில் இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவர்கள் முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்களே. வரலாற்றுக் காலந்தொடங்கி, பின்னர் ஏற்பட்ட தென்னிந்தியப் புலப் பெயர்வால் வந்து குடியேறி புவியியல், பண்பாட்டு அடிபெ;படையில் அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.
இலங்கையின் மக்கட்தொகை விபரத்தை தோராயமாக பின் வருமாறு குறிப்பிடலாம்: சிங்களவர் தவிர இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர்9.3% இலங்கை முஸ்லிம்கள். 6.5% தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் 27% ஆக மொத்த மக்கட்தொகையில் உள்ளனர். ( இது 1975-ம் ஆண்டு மக்கட் தொகை விபரம்.)
***
ஈழத்து இலக்கிய மரபின் முதல்வராக சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் செய்யுட்களில் ஆழத்தைப் பற்றிய எந்தத் தகவல்களும் காணப்படவில்லை. இலங்கையில் இன்றுகிடைக்கின்ற காலத்தால் முந்திய தமிழ் நூல் ( கி.பி 1310) போசராசரால் எழுதப்பட்ட ''சரசோதிட மாலை'' என்பது.
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண ராச்சியம் உருளவாயிற்று. இந்த அரசு போர்த்துக்கேயர் 1619-ல் வடபகுதியை வெற்றி கொள்ளும் வரை நீடித்தது. இந்த யாழ்ப்பாண ராச்சிய ஆட்சியில் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றது. அரசகேசரி, காளிதாசரின் இரகுவம்சத்தை முதனூலாகக் கொண்டெழுதிய செய்யுள் நூல் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
1619 முதல் 1796 வரை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் பெரும்பகுதியை அரசாட்சி செய்தனர். இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவ, சைவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.
1796-ல் ஆல் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலத் திருச்சபையும், அமெரிக்க மிஷனரிகளும் சமய மாற்றத்தை முக்கியமாக மனங்கொண்டு இலக்கியங்களை உருவாக்கினர். இந்தப் போக்குக்கு எதிராக வசன நடைகை வந்த வல்லாளரான ஆறுமுக நாவலர் ( 1822-1879 ) ஒரு இயக்கமாகவே செயற்பட்டார். சைவத்தையும், தமிழையும் வாழ்விக்க வந்தவராக நாவலர் கருதப்பட்டார். அவர் கிறிஸ்தவருக்கு தமிழ் போதித்ததோடு நில்லாது, பைபிளையும் தமிழிலே அழகுற மொழி பெயர்த்தார்.
நாவலரது இலக்கிய, சமயப்பணிகள், தமிழரிடையே பண்பாட்டு இயக்கமொன்றினையே உருவாக்கிற்று. தமிழ் இலக்கியக் கல்வி, இலக்கிய பாரம்பரியம் என்பனவற்றின் ஈழத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் நாவலரின் பங்களிப்பு உன்னதாமானது. அவர் நவீன தமிழ் அச்சு, பதிப்புத் துறைகளில் ஈடிணையற்ற சாதனைகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். இவரது வழியில் தமிழ் தந்த தாமோதரனார் என்றழைக்கப்படும் சி. வை. தாமோதரம் பிள்ள ( 1832-1910) ஆகியோர் உழைத்தனர்.
இலக்கண நூல்கள் ஈழத்தில் தோன்றியது போலவே அகராதிகளும் உருவாகின. 1842-ம் ஆண்டில் போரகராதியும், தொடர்ந்து ''உவின்ஸ்லோ'' அகராதியும் வெளியாகின. இலக்கிய முயற்சிகளுக்கு இது உந்து சக்தியாக அமைந்தது.
ஆர்னல்ட் சதாசிவம் பிள்ள என்பவர் 1866-ல் ''பாவலர் சரித்திர தீபகம்'' என்ற தமிழ்ப்புலவர் சரித்திர நூலை எழுதினார். அத்தோடு சிறுகதைப் போக்கிலமைந்த ''நன்னெறிக் கதாசங்கிரகத்தை''யும் வெளியிட்டார்.
1876-ல் தமிழின் முதலாவது நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளியாகிற்று. இது வெளியாகி ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவரான அறிஞர் சித்திலெவ்வை (1838-1898) அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.
1895-ல் தி.த. சரவணமுத்துப் பிள்ளையின் ''மோகனாங்கியும்'', 1891-ல் எஸ் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் வெளியாகின. இவர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் ''மோகனாங்கி'' நாவல் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். இதுவே தமிழில் தோன்றியே முதல் வரலாற்று நாவல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.
''இடைக்காடர்'' என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதத் தெராடங்கியவர் நாவலாசிரியர் நாகமுத்து (1868-1932). இவர் 'நீலகண்டன்', 'சித்தகுமாரன்' ஆகிய இரண்டு நாவல்களையும, ‘சிறிய வினோதக் கதை'களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களையும் கண்டி, அனுராதபுரம் போன்ற நகரங்களையும் பினனணியாகக் கொண்ட இந்த மண் மணங்கமழும் நாவல் முற்று முழுதாகவே ஒரு ஈழத்துக்கதையாக மிளிர்கின்றது.
இருபதாம் ந}ற்றாண்டு ஈழத்து இலக்கிய முதல்வராகப் புகழ்ந்துரைக்கப்படும் பாவலர் துரையப்பா பிள்ளை (1872-1929) மாகவி பாரதியின் சமகாலத்தவர். இவருடைய படைப்புக்கள் ஈழத்தின் படைப்பிலக்கியத்தினை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றன.
***
1930-ம் ஆண்டின் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் விளைவாக தமிழக இலக்கியத்தில் ஒரு வேகம் தோன்றிற்று. இலக்கிய முயற்சிகளுக்காகவே 'மணிக்கொடி' தோன்றிற்ற. 1932-ல் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம், படித்த மத்தியதர வர்க்கத்திடையே இலக்கிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கிற்று. அரசியல் நோக்கத்திற்காக பத்திரிகைகளும் சஞ்சிகைகளுடன் தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய இலக்கியத் தளங்கள், அக்கால ஈழத்து எழுத்தாளர்களை ஈர்த்தன. எனவே உருவச் செழுமையுடன் சிறுகதைகள் எழுதப்படலாயின. இப்படி எழுத்துத்துறைக்கு வந்த சிறுகரை முன்னோடிகள், இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் இவர்களின் எழுத்துக்கள் தமிழகத்தில் ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன், ஆகிய இதழ்களில் வெளியாகின ஈழகேசரியும் இங்கே கதைகளைப் பிரசுரித்தது. மணிக்கொடியின் மறைவின் பின்னே தமிழகத்தில் ''கலாமோகினி'', ''பாரதா தேவி'', ''சூறாவளி'' போன்ற பத்திரிகைகள் தோன்றின இந்த இதழ்களிலும் ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளரான இம் மூவரும் தொடர்ந்து எழுதினார்கள்.
மணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் மறு மலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிற்று. இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களான தி.ச. வரதராசன் (வரதர்), அ.செ. முருகானந்தம், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ''மறுமலர்ச்சி'' என்ற இதழ் வெளி வந்து மூன்று ஆண்டுகள் வெளியாகி நவீன இலக்கியத்தை ஒரு பாய்ச்சலோடு முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் போலவே ஈழகேசரி இதழும் தனது பண்ணையில் பல எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. அவர்களில் சு. இராஜநாயகம், சொக்கன், வ. அ. இராச ரத்தினம் சு.வே. கனக செந்திநாதன் ஆசியோரும் அடங்குவர்.
1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிற்று. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், கே. ஏ. அப்பாஸ் ஆகியோர் இதன் முக்கியஸ்தர்கள். இதன் எதிரொலியாக 1940 களில் ஈழத்திலும் முற்போக்கு இடதுசாரி சார்பான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தோன்றின. ''பாட்டாளி'', ''பாரதி'' ஆகிய இதழ்கள் கே. கணேஷ், கே. ராமநாதன், எம்.பி. பாரதி ஆகியோரை வெளிப்படுத்திற்று.
1946 ஆண்டில் ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்'' தோன்றிற்று முற்போக்கு எண்ணங் கொண்ட சகல எழுத்தாயளர்களையும் ஒன்றிணைத்து கலை இலக்கிய மேம்பாட்டிற்கு உழைப்பதை இது தனது கொள்கைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்தது. 1956-ம் ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கிற்று இது.
ஈழத்திலே உருவாக்கப்படுகின்றன தமிழ் இலக்கியம் ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத்து இக்காலப் பகுதியிலே முன் வைக்கப்பட்டது. இந்த ''மண்வாசனை'', ''ஈழத்திலக்கியம்'' என்னும் குரலே தேசிய இலக்கியம் என்கின்ற கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. ''நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாச்சாரப் பாராம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாகும்'' என்றார் பேராசிரியர் கைலாசபதி.
இந்தப் போக்கு பல்வேறு தளங்களிலும் செறிந்து ஈழத்து எழுத்தை வளப்படுத்திற்று.முற்போக்கு இலக்கிய அணியோடு முரண்பட்ட எழுத்தாளர்கள் தனி அமைப்புகளாக இயங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாற்றம் பெற்று எந்த சித்தாந்தத்தையும் சாராமல் எழுதுகிறது எழுத்தாளர்களாக தனது சார்பாளர்களைப் பிரகடனப்படுத்திற்று. எனினும் இவர்களில் பலர் பிரதேச வழக்குடன் மண்மணம் கமழ எழுதி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக ''யாழ் இலக்கிய வட்டம்'' செயற்பட ஆரம்பித்தது.
1960-ம் ஆண்டு முதல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாகிற்று. இதன் பயனாக புதிய இளைஞர்கள் எழுத்துத்துறைக்கு ஆர்வத்துடன் வரலாயினர்.
தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்கள் உச்ச கட்டத்திற்கு போனபோது நிறையத் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தமது மனக் கொதிப்பையும் உணர்வுகளையும் அங்கேயே வெளியான பத்திரிகைகள் மூலம் படைப்பிலக்கியங்களாக இவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாகியுள்ளது. இதுவே இன்றைய ஈழத்து இலக்கியத்தின் இன்னொரு பரிணாமம்.
***
1960-ஆம் ஆண்டுவரையில் மட்டக்கிளப்பிலே எழுத்தாளர் சங்கம் எதுவும் தோன்றவில்லை.எஸ். பொன்னுத்துரையின் ஆர்வமும், முயற்சியும் கிழக்கு மாகாணத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்ற வழி வகுத்தன. "மட்டக்கிளப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்", "கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்", "திரிகோணமலை எழுத்தாளர் சங்கம்", "கிண்ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம்" என்பவற்றை இணைந்து கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எ..ப் எக்ஸ்ஸி நடராசாவும், பொதுச் செயலாளராக எஸ். பொன்னுத்துரையும் பணியாற்றினர்.
கிழக்கிலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு இதன் செயற்பாடு உதவிற்று ஈழத்திலக்கியத்திற்கு வளம் சேர்த்தது.
***
மலையகத் தொழிலாளர் வாழ்வைப் பொறுத்த வரை 1920-1940 வரை முக்கியமான காலமாகும். தஞ்சாவூரில் பிறந்து இலங்கைக்கு வந்து மலையக மக்களுக்கா அல்லும் பகலுமுழைத்த தொழிங்சங்க வாதியான கோ. நடேசைய்யரின் அரும்பணிக்காலம் இது. இவரின் எழுத்துக்கள் மலையக மக்களை எழுச்சியுற வைத்தன. பத்திரிகையாளரான இவர் சிறுகரையும் எழுதியுள்ளார்.
இரவீந்திரநாத தாகூர் 1934 ஆண்டு இலங்கைக்கு வந்தார். அப்போது இருபது வயது நிரம்பிய சி.வி. வேலுப்பிள்ளை என்ற இளைஞர் "பத்மாஜனி" என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதிவைத்திருந்தார். அதை தாகூரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதே கவிஞர் மலையக மக்களின் துன்பவாழ்வை வெளியுலகிற்கு தன் கவிதைகள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர் இவர் பாராளமன்றப் பிரதிநிதியானார். 1948-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வஞ்சகமாக மலை நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்தது. சோகமும் சினமுமாக இவரது கவிதைகள் இக்காலத்தில் வெளிப்பட்டன.
1960-ம் ஆண்டுகளில் விழிப்புற்றதொரு மலையகப் பரம்பரை தோன்றிற்று. இவர்கள் புதுமையையும், போராட்டங்களையும் அனல் தெறிக்கும் எழுத்துகளையும் தமது தோழமையாகக் கொண்டவர்கள். 1828-ம் ஆண்டிலிருந்து தோன்றிய மலையக மக்களின் துயரத்தை இவர்களது நெஞ்சம், ஆறாத் தழும்பாகக் கொண்டிருந்தது. இதற்கு அவர்கள் இலக்கிய வெளிப்பாட்டால் எதிர்க்குரல் கொடுத்தன். இதை சி.வி. வேலுப் பிள்ளை ஆதரித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். இப்படி உயிர்த் துடிப்புடன் 1960 களில் தோன்றிய மலையக இலக்கியத்தின் முன்னோடிகளாக என்.எஸ்.எம், ராமையா, கே. கணேஷ், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன் சி. பன்னீர்ச்செல்வம் போன்றோர் தோன்றினார்கள்.
மலையக எழுத்தை வளர்ப்பதில் 'வீரகேசரி'ப் பத்திரிகை பெரும் பங்கை வகித்தது. அதில் தோட்ட மஞ்சரிக்கு பொறுப்பாயிருந்த எஸ்.எம். கார்மேகம் மலையக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார் சிறுகதைப் போட்டிகள் மூலம் இன்றைய பிரபல மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இவரின் முயற்சிக்கு பெரி கந்தசாமி, இரா. சிவலிங்கம், பொஸ்கோஸ், கருப்பையா, செந்தூரன் ஆகியோர் பக்கபலமாயிருந்தனர். இவர்கள் பொறுப்பேற்றிருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளரை ஸ்தபன அமைப்பின் மூலம் முன்னேறச் செய்தது.
இந்த முக்கியமான பணியை சாரல் நாடன், அந்தனி ஜீவா ஆகியோர் இன்று தொடருகின்றனர். "கொழுந்து", "குன்றின் குரல்", "மல்லிகை" ஆகிய இதழ்கள் மலையக எழுத்தை வளர்ப்பதில் முழு ஆர்வங்காட்டுகின்றன. மலையகச் சிறுகதைகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பெறுபதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றிருப்பது இந்த வரலாற்றின் விளைவுதான்.
***
வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர மேற்கு தென்னிலங்கையில் தனித்துவமானதும் பிரதேச மணங்கமழ்வதுமான படைப்புகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இந்த எழுத்துக்களை உள்ளிடக்கியே ஈழத்து இலக்கியத்தை சரியாக அடையாளங்காட்ட முடியும். முற்றிலும் சிங்கள மொழிச் சூழலிலேயே உள்ள திக்குவலை, மாதத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் தமது சூழலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.
புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், குருணாக்கல், காலி ஆகிய பகுதிகளிலிருந்து பிரமிப்பூட்டும் படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன.
இவையாவும் ஒன்றாகச் சேர்ந்து வளம் பெற்றுள்ள ஈழத்து இலக்கியம், மேலும் பல சாதனைகளை ஏற்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.
இந்த அறிமுகக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்.
பேராசிரியர். க. கைலாசபதி
( தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், இலக்கியச் சிந்தனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் )
பேராசிரியர் கா. சிவத்தம்பி
( நாவலும் வாழ்க்கையும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் )
செம்பியன் செல்வன் - ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்
சி.வி. வேலுப்பிள்ளை – நாடற்றவர்கதை
டொமினிக் ஜீவா – அட்டைப்பட ஓவியங்கள் ( தொகுப்பு)
சுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். ( தொகுப்பு )
எஸ.எம். கார்மேகம்- கதைக்கனிகள். (தொகுப்பு)
அக்கரை இலக்கியம் (1968. வாசகர் வட்டம் தொகுப்பு ந}ல்)
தேசிய தமிழ் சாகித்தியவிழா 1963 – சிறப்பு மலர்
( அந்தனி ஜீவா) ‘கொழுந்து”
(டொமினிக் ஜீவா) ‘மல்லிகை”
‘குன்றின் குரல்”.
வெள்ளிப் பாதசரம் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளும் அவற்றை எழுதியவர்களும்..
இலங்கையர்கோன் ( வெள்ளிப்பாதசரம், மச்சாள் )
சி. வைத்தியலிங்கம் ( கங்கா கீதம், பாற்கஞ்சி )
கனகசெந்திநாதன் ( கூத்து, வெண்சங்கு )
அழகு சுப்பிரமணியம் ( கணிதவியலாளன் )
வரதர் ( கற்பு )
வ.அ. இராசரத்தினம் ( தோணி, கடலின் அக்கரை போனோரே )
அ.ந. கந்தசாமி ( இரத்த உறவு )
த.ரஃபேல் ( திறமை, கட்டிலேடு கிடந்தவன் )
டொமினிக் ஜீவா ( பாதுகை, வாய்க்கரிசி )
தாளையடி சபாரத்தினம் ( ஆலமரம் )
சிற்பி ( கோவில்பூனை )
எஸ்.பொன்னுத்துரை ( தேர், ஈரா )
யாழ்வாணன் ( அமரத்துவம் )
ப.ஆப்டீன் (புதுப்பட்டிக்கிராமத்திற்கு கடைசி டிக்கட் )
தெளிவத்தை ஜோசப் (பாட்டி சொன்ன கதை, மீன்கள் )
நீர்வை பொன்னையன் ( உதயம்,சோறு )
பத்மா சோமந்தன் ( சருகும் தளிரும் )
செங்கை ஆழியான் ( கங்குமட்டை, அறுவடை )
சி. பன்னீர் செல்வம் ( ஜென்மபூமி )
க. சட்டநாதன் ( உலா )
யோகா பாலச்சந்திரன் ( விழுமியங்கள் )
அ. யேசுராசா ( வரவேற்பு....! )
லெ. முருகபூபதி ( திருப்பம் )
சந்திரா தியாகராசா ( திரிசு நிலத்து அரும்பு )
சாந்தன் ( தே ....... )
அல் அசூமத் ( விரக்தி )
தாமரைச் செல்வி ( பார்வை )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
அருமையான விரிவான பகிர்வுக்கு நன்றி
அருமையான விரிவான பகிர்வுக்கு நன்றி
அருமையான பதிவு..நன்றி !
மிக விரிவும் ஆழமும் கூடிய பதிவு. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. பாராட்டு.
தேவையான பதிவு. இணையத் தொகுப்பாளர் இவ்வார நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
இணையத் தொகுப்பாளர் இன்றைய நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். தேவையான பதிவு. நிறைய விபரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி.
கருத்துரையிடுக