பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது.
செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....
உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....
1.தமிழில் சில வரவுகள்.
தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.
என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு
இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
3.அறிவியல் புனைவின் தோற்றம்
உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.
இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.
இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.
இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.
கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.
அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.
இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.
இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.
இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.
இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.
இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.
இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.
இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.
இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.
1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.
டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.
இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.
டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.
ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.
'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.
இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.
டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.
டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.
மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.
*************************
தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.
கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?
பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.
*************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
//2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்//
ஆர்வத்தைத் தூண்டும் பட்டியல்!
நன்றி!
கருத்துரையிடுக