ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்
2009-01-05 by விருபா - Viruba |
6
கருத்துகள்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.
முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.
ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.
இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி
( அகர வரிசையில் புத்தகங்கள் )
01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.
02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
03.உலகளாவிய தமிழ்
பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.
05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.
07.கதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.
08.குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.
09.சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.
10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.
12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.
14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.
15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.
16.வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.
17.Tamil and Hebrew
18.The Babylonian Thamizh
19.தமிழர் எண்ணியல்
20.தமிழர் சமயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
வியப்பூட்டும் புத்தகங்கள்!
உங்களது நட்சத்திர வாரம் அனைவருக்கும் பயனாக இருக்கும், நன்றி!
புத்தகக் கண்காட்சி வரும் வேளை பொருத்தமான நட்சத்திரம்.
வாழ்த்துக்கள் புதிய நட்சத்திரமே.. பதிவுகள் செறிவாகவும் தரமாகவும் அமைகின்றன.. :)
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
நட்சத்திர வாழ்த்துக்கள்...
Good work. Keep it up.
கருத்துரையிடுக