பவள விழா அகவையில் "இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.
தமிழ்ப் புலமையாளர் மத்தியில் தமிழ்க்கலை இலக்கிய வல்லமைகளால் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இவ்வாண்டு மே மாதம் 24 ஆம் திகதி தனது பவள விழா அகவையைய எட்டியுள்ளார். அவரை வாழ்த்துவோமாக! தனது வாழ்வை நிரந்தரப்படுத்த முடியாது தமிழன் தடுமாறிக்கொண்டு வாழும் இக்காலகட்டத்தில் எஸ்பொவின் பவள விழாவை முக்கியத்துவப் படுத்த அவர் அப்படி செய்தற்கரியதான எதைச் செய்தார் என இன்றைய சந்ததியினரின் மனதை மட்டுமன்றி முதியோரின் சிந்தயையும் நெருடக்கூடும்.
" தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது."
இப்படிச் சொல்பவர் எஸ்.பொ.
அதற்கமைய இன்றும் தமிழ் ஊழியத்தில் தன் தேடலை ஊன்றித் தமிழுக்குப் புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவைகளே எஸ்.பொவை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி அவரை ஆராதிக்கச் செய்கின்றன.
தமிழ் இலக்கியத்தின் சகல அலகுகளுக்குள்ளும் சுழியோடி முத்துக்களைத் தருபவர். புனைகதை, கவிதை, நாடகம், கட்டுரை, என்ற தமிழக் கூறுகள் இவரது நுணுக்கமான அணுகுமுறைகள் மூலம் மேன்மை கொண்டிருக்கின்றன. தான் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற வகையில் இவர் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன்வசப்படுத்தி சாதனை புரிந்திருக்கிறார்.
மரபு, நவீன இலக்கியங்களில் இவரது சாதனைகள் இவரை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியக்காரராக இனங்காட்டியிருக்கின்றன. மரபை முற்று முழுதாக நிராகரிக்காமலே இலக்கியம் படைக்கிறார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்கு அளித்த மகாகவி பாரதியார், நவீன சிறுகதையின் பிதாமகன் புதுமைப்பித்தன் ஆகியோருக்கு மிக நெருக்கமாக நிற்கும் எழுத்தாளர் எஸ.பொ.
இவரது எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும், அதன் வசன நடை விஷயத்தை எடுத்துச் சொல்லும் நுட்பமான பாங்கு, சொல்வளம் என்பன ஏனைய படைப்பாளிகளைப் பின்தள்ளி விட்டு இமயமாக உயர்ந்து நிற்கும். அவைகளை எத்தனை தடவை வாசித்தாலும் சலிக்காது.
இவரது எழுத்துக்களின் இன்னொரு பண்பாக துணிச்சலைக் கூறலாம். அடிக்கடி தனது படைப்புகளில் பரிசோதனைகளைச் செய்து காட்டுபவர். கட்டுடைப்புச் செய்த இவரது எழுத்துக்கள் "பழைய பஞ்சாங்களங்களின்" திட்டுக்களைப் பெற்றது மாத்திரமன்றி இவருக்குப் பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தியது.
"தீ" என்ற இவரது முதல் நாவல் இவருக்கு "பால் இயல்" எழுத்தாளர் என்ற பெயரைப் பெற வைத்தது. "ஆண்மை" என்ற ஒரே பெயரில் பல கதைகளை எழுதி எஸ.பொ நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். தனது படைப்புகளுக்கு பெயரிடும் பொழுது எழுத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, பொருத்தமாகவும் குறுகியதாகவும் இருக்கப் பார்த்துக் கொள்வார். "தீ", "லீ", "அவா", "வலை", "தேடல்", "மொட்டு", "சடங்கு" இப்படியானவையே அவரது படைப்புகளின் பெயராக இருக்கின்றன.
வாசகனுக்குத் தமிழ்க் கலாச்சார பண்புகளைக் கொடுப்பவையாக இவரது சமூகம் சார்ந்த புனைவுகள் அமைந்திருப்பதைக் காணலாம். மகாவம்சம் போன்ற ஆதிகால வரலாற்றுக்குள் நுளைந்து கல்கியைப் போல் இவரும் பல வரலாற்றுப் படைப்புகளைப் படைத்திருக்கிறார். இவை சம்பந்ப்பட்ட இதிகாசங்களையும் வரலாறுகளையும் விமர்சிப்பவையாகவும் அமைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுவிசேஷம், திருக்குர்ஆன் என்பவைகளின் போதனைகளையும் தனது புனைவுகளுக்குள் கொண்டு வந்துள்ளார். இவர் தமிழ் நாட்டின் "கல்கி" சஞ்சிகையில் தொடராக எழுதி வந்த கீதைக் கதைகள் இவரது எழுத்துக்கு ஒரு திருப்புமுனை!. "இதை பொன்னுத்துரை எழுதுகிறாரா?" எனப் பழைய தலைமுறை வியந்ததுமுண்டு.
தமிழ்ப் பரப்பில் வேறெந்த அறிஞர்களுக்குமில்லாத மேலதிகத் தன்மையாகப் புனைவுக் கலையைப் பெற்றுள்ளார். இது எஸ்.பொவுக்குக் கிடைத்துள்ள யோகம். இவரது "நனவிடை தோய்தல்" என்ற சுயசரிதை தமிழிற்கு ஒரு நவீன உத்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்றுவரைக்கான தனது வாழ்வை "வரலாற்றில் வாழ்தல்" என்ற தலைப்பில் 2000 பக்கங்களுக்கு மேலான நூலாக்கி இருக்கிறார்.
ஐம்பதுகளில் அம்பாறையில் தமிழனுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வை இவர் களரி என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார். இன விரிசலை இலக்கியத்தில் முதன் முதல் காட்டியவர் எஸ்.பொ என்றும் கூறப்படுகிறது.
புலம் பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என இப்பொழுது சர்வதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுவதை வாசகர் அறிவர். இந்தப் புது வருகைக்கு ஒரு முகத்தைக் கொடுத்து, அதைப் பரம்பல் செய்வதில் முன் நின்றவர் எஸ்.பொ.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்தான் சர்வதேச தமிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குமெனத் தன் குரலை ஓங்க ஒலித்தார். ஒலித் குரலின் காத்திரத்தை கருத்திற்கெடுத்த சர்வதேச நாடுகளில் பனியோடு போராடிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் தமது மூடிக்கிடந்த பேனாக்களை திறக்கத் தொடங்கினர். அதன் அறுவடைதான் இன்று புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பெருவிருட்சமாகப் பலித்து, அறுசுவை மிக்க கறுத்தக் கொழும்பான் மாங்கனிகளைத் தமிழ் வாசகனுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. "பனியும் பனையும்" என்ற சிறுகதைத் தொகுப்பின் வருகைக்கும் அத்திவாரமிட்டவர் எஸ்.பொவே!.
எழுத்தாளராக மட்டுமின்றி எஸ.பொ இலக்கிய நூல் வெளியீட்டாளராகவும் தனது தமிழ்ப் பணியை அகலித்துள்ளார். மிகச் செழிப்பாகச் சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் "மித்ர ஆர்ட் அன் கிரியேஷன்ஸ்" என்ற நூல் வெளியீட்டகம் எஸ.பொவுக்குச் சொந்தமானதே. இதனூடாகத் தனது சொந்த மண்ணான ஈழத்தின் அரிய தமிழ் நூல்களோடு நிமிரத் துடிக்கும் தமிழ் உறவுகள் வாழும் மண்ணிலிருந்து கிளம்பும் இலக்கிய எத்தனிப்புக்களையும் சர்வதேசத் தமிழ் சமூகம் அறிவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் "மலேசியச் கதைகள்" எஸ்.பொவை சர்வதேசத் தமிழனின் நெஞ்சில் பதிய வைத்திருக்குமெனலாம்.
ஈழத்து இலக்கிய மனையைத் தமிழ் நாட்டு இலக்கியத்திற்குச் சவாலாக உள்நாட்டில் யார் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ, பிற்காலத்தில் அவர்களோடு முரண்பட்டார். தனித் தீவானார். "அரசியல் போக்கிரிகளின் கடைசி உறைவிடம்" என்ற கருத்து நிலைக்குத் தேறிய பின்னர் அவர் இலக்கியத்தில் அரசியல் கலக்கக் கூடாதென முழங்கினார். ஆனால் அப்போது ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்தி ஆளுகை செய்து கொண்டிருந்த முற்போக்கு இலக்கிய இயக்கம் தனது அரசியல் செல்வாக்கை நம்பி அதை மறுத்தது. பெரும்பான்மை தனக்கில்லாத போதும் தனது இல்கியச் செழுமையை பலமாகக் கொண்டு ஜனநாயக முறைமையையும் பொருட்படுத்தாது தனித்து நின்று எதிர்த்தார்.
இதற்காக அச்சு ஊடகத்தையும் மேடையாகவும் பயன்படுத்தினார். "இளம்பிறை" எம்.ஏ.ரஹ்மான், அமரர்களானரே.ஜே.கனகரத்னா, கனகசெந்திநாதன், ஆகியோர் எஸ்.பொவை ஒட்டுமொத்தமாக ஆதரிக்காது விட்டாலும் அன்றைய முற்போக்கின் இலக்கியப் போக்கை ஆதரிக்காதிருந்தனர்.
பிரபல இலக்கியவாதியான மு.தளையசிங்கமும் எஸ்.பொவைப் போல் தனது இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்தினார். அந்தச் சமரில் யார் வென்றாரென்பதை இன்றைய இலக்கிய உலகு நன்கு அறியும். எஸ.பொ இன்றும் நிமிர்ந்தே நிற்கின்றார். அவர் ஈழத்து இலக்கிய செல்நெறிக்குக் கொடுத்த அதிர்வுகள் இன்று இலக்கியமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வீச்சு எதிர் முகாமுக்குள்ளும் இன்று நுழைந்துவிட்டது. அம்முகாம்களும் விழிப்புக் கொண்டு எஸ்.பொவின் இலக்கியக் கருத்துக்களை சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இது எஸ.பொவின் தூர நோக்கிற்கு எடுத்துக்காட்டல்லவா. முற்போக்கு ஒரு கருத்துநிலை அது மாறக்கூடியதென இன்று கருதுவோர் அன்று அரசியலுக்குப் பயந்தா எஸ்.பொவுக்கு தூரநின்றனர்.
ஆறுமுக நாவலர், சுவாமி ஞனப் பிரகாசர் ஆகிய தமிழ்ப் பெரியார்கள் தோன்றிய நல்லூர்ப் பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பமொன்றில் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) பிறந்தார். புனித பத்திரிசியார் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கற்றார். பொதுவுடமைக் கட்சியின் ஈடுபாடு இவரை பத்திரிசியார் கல்லூரியிலிருந்து விலகச் செய்தது. என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன் ஆகியோரும் இவரது சமகாலத்தவராக பரமேஸவராக் கல்லூரியில் கற்றனர். தமிழ்நாடு சென்று கலைமாமணிப் பட்டத்தைப் பெற்றார். இவருக்கு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறையால் வெறுப்படைந்து யாழ் குடாவைத் துறந்து கம்பளை, கொழும்பு மட்டக்களப்பு போன்ற இடங்களில் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டார். பாடவிதான சபை, திரைப்படக் கூட்டுத்தாபனம் என்பவற்றிலும் எஸ்.பொ கடமை புரிந்தார். அப்போது அரசுக்கு அனுசரணையாக இருந்த தமிழ் அதிகாரிகள் இந்நிறுவனங்களில் இவர் கடமை புரிவதற்கு இடைஞ்சலாக இருந்தனர். வன்மங்கள் பாராட்டத் தொடங்கினர். இவரது கல்விக் கொள்கைக்கு "எஸ்.பொ இசம்" என்ற முத்திரையிட்டு இவரது உழைப்பை நிராகரித்தனர். தனது வீட்டிற்குள் அரசியல் பலம் இருந்தும் எஸ்.பொ அதைத் தனது எதிராளிகளுக்கு எதிராகப் பாவிக்கவில்லை. ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று ஸம்பியாவிற்குச் சென்றார். பின் அவுஸ்திரேலியா சென்று, அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஆக தமிழையும் எளிமையையும் தனது வாழ்வாக நச்சி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியப் பிரம்மா 'எஸ்.பொ காலம்' தமிழ் இலக்கியத்திற்கு மலர்ச்சியையும் உயர்ச்சியையும் உபசரித்ததென்பது மெத்தச் சரியானதே.
கானலைக் காட்டி, இலக்கிய உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த குழுமத்தை வாசகனுக்கு இனங்காட்டி, நெறிப்படுத்தி, நன்னீர் அருவிகளைத் தமிழ் இலக்கியத்தில் பாயவைத்து, தமிழ் இலக்கியத்தை நிமிர வைத்திருக்கும் எஸ்.பொன்னுத்துரையின் பவள விழா அனைத்துத் தமிழுலகத்துக்குமான தமிழ் விழாத்தான். அதை குதூகலாமாகக் கொண்டாடி மகிழ்வது நாம் தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும் .
- - -வீரகேசரி இணைப்பான (16.06.2007) கலைக்கேசரியில் சமரசன் - - -
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக