விரைவில் வெளிவர இருக்கும் இந்நூலின் முன்னுரையில் இருந்து சில துளிகள்....
"அது ஒரு கனாக்காலம்" ஒரு முக்கியமான தேசிய விருது கிடைத்திருக்கக்கூடிய படம். இதன் "ட்ரான்ஸ்க்ரிப்ட்"டைப் படிக்கும் போது ஒரு
திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான பல பயனுள்ள குறிப்புகள் திரைத்துறை மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் கிடைக்கின்றன.
- - சுஜாதா - -
"அது ஒரு கனாக்காலம்" திரைக்கதை நூல் வடிவில் வருவது, ஒரு நல்ல அறிகுறி. திரைப்படத்தின் இயல்பையும், அதில் கதைப் பாத்திரப்பேச்சின்
இடத்தை அறியவும், சினிமாவின் நியதிகளை, தனித்துவத்தை புரிந்துகொள்ளவும் இது பயன்படும்.
- - சு.தியோடர் பாஸ்கரன் - -
பாலு மகேந்திராவின் தேர்ந்த கதைகூறல்களும் நிகழ்வு அடுக்குகளும், பின்னணி நிலப்பரப்பும் படக்கதை வெறும் சினிமா என்ற தளத்திலிருந்து வகை மாதிரிக் குடும்பங்களின் மீதான விமர்சனம் என்ற தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மகனைத் தனது சொல்கேட்டு நடக்கவேண்டிவனாக மட்டுமே கருதுவதும், அவனது விலகல் போக்கு எதற்கும் தான் பொறுப்பில்லை என்று நடந்துகொள்வதுமான தந்தையர்களின் மீது, கடும் விமர்சனத்தை முன்வைக்கும் இப்படம், அத்தகைய பார்வையாளர்களை இலக்குப் பார்வையாளர்(target audience)களாகக் கணிக்கத் தவறிவிட்டது ஒரு குறைதான்.
இன்று, திரைப்படம் பார்க்க வரும் ரசிகக் கூட்டம் இளைஞர்கள்தான் என்பதைத் தீர்மானித்து, அவர்கள் விரும்பும் சில காட்சிகளை மட்டும் இணைத்து படத்தைத் தந்துள்ள இயக்குநர், சில காட்சிகளை நீக்கிவிட்டு வேறுவகையான காட்சிகளைச் சேர்த்திருந்தால்,குடும்பத்தோடு அல்லது பெற்றோர்களாகப் பார்வையாளர்கள் வந்திருக்கக்கூடும். ஊடகங்கள் தரும் பொதுப் புத்திசார்ந்த விமர்சனக் குறிப்புக்களை மட்டுமே நம்மிப் படம் பார்ப்பவர்களாக மாறிவிட்ட அவர்கள், தங்களுக்கான படம் வரும் போது அதைத் தவற விட்டுவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. சமூகப் பொது உளவியலை ஊடகங்கள் இவ்வாறுதான் கட்டமைத்துத் திசை திருப்புகின்றன. படுக்கையறைக்காட்சிகள் உள்ள படங்கள், விடலைகளுக்கான படங்கள்
என்று கருதி, பெரியவர்கள் தவிர்த்து விடுவதில் அதுதான் நடக்கிறது."அது ஒரு கனாக்காலம்" விடலைப் பருவத்து இளைஞர்களை வழிநடத்த்த தெரியாத பெற்றோர்களுக்கான படம் என்பதுதான் சரியானது.இந்த சமூக அக்கறைதான் அவரைப்படைப்பாளியாகவே இருக்க வைத்திருக்கிறது.
- - 2005 டிசம்பர் தீராநதியில் அ.இராமசாமி - -
இக்கதை நெடுக எளிமை பயணப்பட்டிருக்கிறது. ஒரு லாரி டிரைவரிடம் தன் கதையைச் சொல்வதிலிருந்து போலீஸ்காரன் சீனிவாசனைத் தப்பியோடிப் பிழைத்துக்கொள்ள கொள்ளச் சொல்வது வரை.
பார்வையாளன், வாழ்விலிருந்து தூண்டிக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து வருபவனைப் போலத்தான் திரைப்படத்தைக் காண வருகிறான். ஆனால் அவனை இடையூறுகள் எதுவுமின்றி வாழ்க்கைக்குள்ளே அழைத்துச் செல்ல முடிபவைதான் சிறந்த திரைப்படங்கள்.
இத்திரைப்படத்தில் நெடுக இருக்கும் எளிமை, பெரும்பாலோரைக் கவராது போனாலும் போகலாம். அது நிச்சயம் நம்முடைய தவறுதானே ஒழிய படைப்பாளியினுடையது அல்ல. அதிகமும் விசித்திரப் போக்குகள் கொண்ட கதாபாத்திரங்களைக் கதாநாயகர்களாகக் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப்போலவே ஒருவனைப் பார்க்கும்போது நமக்கு அவன் நம்மிலிரிந்து மாறுபட்டவனைப் போலவே தோற்றம் தரலாம். இதன் விழுக்காடு அதிகமாக உள்ள பட்சத்தில் நாம் நமத் வாழ்வின் எதார்த்தத்தைப் புறக்கணித்து சுகமான கற்பனைகளை மட்டும் ரசிக்கும் அபாயத்தினுள் விழுந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் நிஜம்.
எளிமை என்பது வறுமை அல்ல, கம்பீரம்; அல்லது அதுதான் உண்மையான பிரமாண்டம்.
- - 2005 டிசம்பர் காலச்சுவட்டில் ஜே.பி.சாணக்யா - -
216 பக்கங்களைக்கொண்ட இயக்குநர் பாலுமகேந்திராவின் "அது ஒரு கனாக்காலம்" புத்தகத்தின் விலை 95.00 இந்திய ரூபா ஆகும். இதனை மித்ர வெளியீடு பதிப்பித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக