தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நிகழ்வு இந்நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் பன்முகத் தன்மை மிக்க தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் முதன்மையானவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர், தமிழ் உரை நடையின் வித்தகர், தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரம் இட்ட பெருமகனார், தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் என்று பெயரை சூட்டியவரும் இவரே.
சமயத் தமிழை வளர்த்தவர்; தூய்மை, எளிமை, புதுமை என்ற மூன்று நற்பண்புகளிற்காகவே வாழ்ந்து காட்டியவர்; உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாகக்கொண்டவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்தவர்; தமிழகம் கண்ணாரக் கண்ட மகானாக அவர் வாழ்ந்த காலத்தில் சக சான்றோர்களால் மதிக்கப்பட்டவர்; கலப்புத் திருமணத்திற்கும், விதவை
மறுமணத்திற்கும் ஊக்கம் தந்தவர்; பெண்களுக்கு சொத்துரிமைக்காக பாடுபட்டவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்று வாதிட்டவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்று பல பெருமைகளிற்கு உரியவர் திரு.வி.கல்யாணசுந்தரம் ஆவார்.
திரு.வி.கல்யாணசுந்தரம் தமிழிற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு சான்று கூறுபவை அவருடைய நூல்கள். ஐம்பதிற்கு மேற்பட்ட நூல்களைப் பன்முகப் பார்வையுடன் எழுதி தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக தந்துள்ளார்.
ஆண் வர்கக்த்தின் வடிவமாக "தேசபக்தன்", பெண் வர்க்கத்தின் வடிவமாக "நவசக்தி" இதழ்கள்களை திரு.வி.க அவர்கள் உருவாக்கினார். தனது கருத்துக்களைப் பரப்புவதற்கு இவ்விரு இதழ்களையும் பயன்படுத்தினார். இவ்விரு இதழ்களினாலேயே மொழித்தூன்மையும், புதிய மொழி நடையும் தமிழக பத்திரிகைத் துறையில் ஏற்பட்டன.பொது மேடைகளில் தமிழில் பேசுவது சிறந்தது என்பதனை வலியுறுத்தி "தேசபக்தன்" செய்திகளை வெளியிட்டது, தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவிக்க துணை நின்றது.
திரு.வி.க வென்னும் பெயரில் திருவிருக்கும்
தமிழிருக்கும்! இனமிருக்கும்!
திரு.வி.க வென்னும் பெயரில் திருவாரூர்ப்
பெயரிருக்கும் இந்நாட்டில்!
திரு.வி.க வென்னும் பெயரால் தொழிலாளர்
இயக்கங்கள் செறிவுற்றோங்கும்!
திரு.வி.க வென்னும் பெயரால் பொதுச்சமயம்
சீர்திருத்தம் திகழுமிங்கே!
என்பது பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாக்கு.
தாம் சார்ந்த அரசியல் கட்சியில் ஊழல்கள் ஏற்படத் தொடங்கியதும், அரசியலில் இருந்து விடுபட முனைந்து திரு.வி.க வின் உள்ளம் சன்மார்க நெறியை நாடியது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படியான பல பெருமைகளுக்கு உரிய திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்தவர் யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளை என்பதனை அவர் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
திரு.வி.க அவர்களின் 54 நூல்கள் 24 தொகுதிகளாக 2007 தமிழர் திருநாளில் வெளிவரவுள்ளது.
A.வாழ்க்கை வரலாறுகள்
1.நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
2.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
3.பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
4.நாயன்மார் வரலாறு - 1937
5.முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
6.உள்ளொளி - 1942
7.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
8.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
B.உரை நூல்கள்
09.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
10.பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
11.காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
12.திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
13.திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
C.அரசியல் நூல்கள்
14.தேசபக்தாமிர்தம் - 1919
15.என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
16.தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
17.தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
18.சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930
19.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
20.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
21.இந்தியாவும் விடுதலையும் - 1940
22.தமிழ்க்கலை - 1953
D.சமய நூல்கள்
23.சைவசமய சாரம் - 1921
24.நாயன்மார் திறம் - 1922
25.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
26.சைவத்தின் சமசரசம் - 1925
27.முருகன் (அல்லது) அழகு - 1925
28.கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
29.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
30.தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
31.சைவத் திறவு - 1929
32.நினைப்பவர் மனம் - 1930
33.இமயமலை (அல்லது) தியானம் - 1931
34.சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
35.சமரச தீபம் - 1934
36.சித்தமார்கக்ம - 1935
37.ஆலமும் அமுதமும் - 1944
38.பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
E.பாடல்கள்
39.உரிமைவேட்கை (அல்லது) நாட்டுப்பாடல் - 1931
40.முருகன் அருள் வேட்டல் - 1932
41.திருமால் அருள் வேட்டல் - 1938
42.பொதுமை வேட்டல் - 1942
43.கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
44.புதுமை வேட்டல் - 1945
45.சிவனருள் வேட்டல் - 1947
46.கிறிஸ்து மொழிக்குறள் - 1948
47.இருளில் ஒளி - 1950
48.இருமையும் ஒருமையும் - 1950
49.அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
50.பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
51.சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
52.முதுமை உளறல் - 1951
53.வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
54.இன்பவாழ்வு - 1925
0 கருத்துகள்:
கருத்துரையிடுக