இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவர்கள்'' என்ற மகத்தான சொல் அரங்கேறியுள்ளது. அவர்கள் அங்கம் பங்கப்படாத எந்த மனிதருக்கும் இளைத்தவரோ அல்லது சளைத்தவரோ அல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.
இல்லாததை எண்ணி ஏங்காமல் இருப்பதை வைத்துக்கொண்டு பல சாதனைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்."
என்கிறது இந்நூல்.
இதனை எழுதியவர் கவிஞர் ஏகலைவன்.
கவிஞர் ஏகலைவன் - விபத்தில் காலை இழந்தவர் - கவிஞர், கட்டுரையாளர், M.A தமிழ் படித்துக்கொண்டே இனிய நந்தவனம், உதவிக்கரம், தன்னம்பிக்கை, ஊன்றுகோல் போன்ற இதழ்களின் செய்தி சேகரிப்பாளரா உள்ளார். பல கவிதைப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
"பயண வழிப்பூக்கள்" என்னும் கவிதை நூலை எழுதியுள்ளார். ஊனமுற்றோரை மையப்படுத்தி வெளிவரும் "உதவிக்கரம்" மாத இதழில் பல ஊனமுற்றவர்களிடம் "பீனிக்ஸ் மனிதர்கள்" என்னும் தலைப்பில் பேட்டி கண்டு எழுதியவற்றை "சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்" என்னும் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
வாய்ப்புகள் கிடைக்காமலேயே தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பலரதும் பேட்டிகள் அமைந்துள்ளன. தங்களிடம் பரிதாபம் காட்டாமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு தாருங்கள் என்றவாறே அனைவரினதும் பொதுவான வேண்டுகோளாக உள்ளது.
***புத்தகத்தில் இடம் பெற்ற சிலருடைய தகவல்கள் இங்கே சுருக்கமாக...***
குட்டி - திரைப்படத்தில் நடித்தவர்.
ஜனாப் ஷாஜகான் - பார்வையற்றவர் - B.A, M.A, B.Ed என்று மூன்று பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, M.Phil இற்காக வைரமுத்துவின் பாடல்கள் மீதான ஆய்வினை மேற்கொண்டுள்ளார், கூடவே I.A.S தேர்விற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
ரஜனிகாந் - பார்வையற்றவர் - சிறந்த நாவன்மை மிக்கவர், அரட்டை அரங்கம், வானமே எல்லை, அகடவிகடம் என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியுள்ளார்.
ம.கணேசன் - இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டவர் - மாநில அளவிலான உடல் ஊனமுற்றோர் பிரிவில் ஆணழகன் போட்டியில் பங்கு பற்றி மிஸ்டர். தமிழ்நாடு பட்டத்தைப் பெற்றவர்.
மா.மோகனசுந்தரம் - நடக்க முடியாதவர் - M.A ஆங்குல இலக்கிய பட்டதாரி. பல்கலைக் கழக முதல் மாணவனாக தேர்ச்சியடைந்து, 2003-2004 ஆண்டிற்கான சிறந்த மாணவனுக்கான தங்கப் பதக்கத்தை முன்னாள் ஆளுநர் திரு ராம்மோகன்ராவ் அவர்களிடம் பெற்றவர்.
சுடரொளி லோகநாதன் - பூவிழுதல் என்னும் குறைபாட்டினால் கண்பார்வையை முற்றிலுமாக இழந்து, பார்வையற்றவர் பள்ளிகளில் படித்து, இலவச கண் சிகிச்சை முகாமில் வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியால் மீண்டும் பார்வை பெற்றவர்.
தனக்குப் பார்வை கிடைத்த நிலையில், ஏனைய பார்வையற்றவர்களுக்காக "சுடரொளி பார்வையற்றோர் மையம்" என்னும் அமைப்பை நிறுவி தன் வாழ்வை அதற்காக அர்ப்பணித்து வாழ்பவர். இன்று இவரது சுடரொளி மையத்தில் 40 உள்ளார்கள்.
பார்வையற்றோர் சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கு ஏதுவாக சாக்பீஸ் தயாரிப்பு, ஆபீஸ் கவர்கள் தயாரிப்பு, ஒயர் பின்னுதல் போன்ற தொழில்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
சரவணகுமார் - போலியோவினால் கால்கள் பாதிக்கப்பட்டவர் - சேலம் அரசு iti இல் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பட்டயப் பயிற்சியை முடித்தவர், DTP படித்துள்ளார், தற்சமயம் சிறு அளவிலான DTP வேலைகள்ச் செய்து கொடுக்கிறார்.
முத்து - பார்வையற்றவர் - மேடைப்பாடகர், கோவை ரிதம்ஸ், ஜனரஞ்சனி, ராகப்பிரியா போன்ற இசைக் குழுக்களில் பாடகனாகப் பங்கேற்றுள்ளார். தற்போது கோவை இந்திய விமானப் படைப் பிரிவில் பணியாற்றுகிறார்.
காட்டூர் சி.அருள்மொழி - போலியோவினால் கால்களையும் ஒரு கையையும் இளந்தவர் - வீட்டிலேய சிறு அளவிலான துணிக்கடையை நடத்தி வருகிறார், கவிஞர், காட்டூர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் பற்றி அக்கறையுள்ளவர். அதற்காக மனுச் செய்பவர்.
ஜெ.தீபா - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - இந்திய விளையாட்டுத்துறையின் உடல் ஊனமுற்றோர் பிரிவில் சர்வதேச தடகள வீராங்கனை, ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்.
இதுவரையில் மூன்று சர்வதேசப் போட்டுகளில் பங்கு பற்றியுள்ளார். 21 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கல்ப பதக்கங்களைப் பெற்றுள்ளார். பல அமைப்புகளிடம் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழகத்தின் ஒரே சர்வதேச விளையாட்டு வீராங்கனை.
அன்பு - மின்சாரம் தாக்கியதில் பாதிக்கபபட்டவர், இரண்டு கைகளையும் இழந்தவர் - தற்சமயம் வேலைக்கு ஆட்களை வைத்து சுயமாக விளம்பர போர்டுகள் வரையும் தொழிலை செய்து வருகிறார்.
திருக்குறள் அ.சீனிவாசன் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - பனை ஓலைகளைப் பதப்படுத்தி, அதில் திருக்குறள்களை எழுதியுள்ளார்.
கோவை எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - பிறவியிலேயே கை,கால்கள் இல்லாதவர் - பாடகர், இதுவரை 1500 இற்கும் அதிகமான கச்சேரிகளில் பங்கு பற்றியுள்ளார். அகில இந்தி வானொலி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று A கிரேடு வித்துவான் பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த வருடம் கலை மாமணி விருதும் பெற்றுள்ளார்.
மணிகண்டன் - இயந்திரத்தில் மாட்டுப்பட்டு கையை இழந்தவர் - கடைவீதியில் நடைபாதைக் கடை வைத்து விற்பனை செய்கிறார்.
ஜனார்த்தனன் - மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர். - வாயினால் ஓவியம் வரையும் இவர் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்
ஜெயப்பிரியா - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - தனியார் ITI இல் ஒன்பதாண்டுகாலமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.
ஜனாப் ஷாதிக் பாஷா - போலியோவினால் வலது கால் பாதிக்கப்பட்டவர் - தனியார் வேலை வாய்ப்பகம் ஒன்றை ஆரம்பித்து பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
நாகராஜன் - பிறவியிலேயே கால்கள் வளர்ச்சி இல்லாதவர் - சுயமாக சைக்கிள் கடை வைத்துள்ளார்.
பர்ணபாஸ் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - நூலகத்துறையில் B.Sc பட்டம், பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், அரசுப் பணியாளனாக அம்மாப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றுகிறார்.
எஸ்.ஜெயக்குமார் - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - B.Pharm பட்டப் படிப்பு படித்து, கீழ்ப்பாக்கம் mots மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றுகிறார்.
**********
இப்புத்தகம் பற்றி ஏகலைவன் கூறும்போது, தமிழகத்தில் உள்ள ஒன்றரை இலட்சம் ஊனமுற்றோரில், சாதாரணமானவர்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்து பல ஊனமுற்றவர்கள் விளங்குவதாகவும், இதில் வெளச்சம் பட்டவர்கள் மட்டுமே வெளியுலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில், வெளிச்சம் படாத பலர் தங்கள் ஊனத்தைப் போலவே சாதனைகளையும் கூட முடக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே உள்ளார்கள், இவர்களை வெளிக் கொண்டு வர ஊக்கப்படுத்தும் முகமாகவே தான் இந்நூலை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.
அவரை நாம் பாரட்டுகின்றோம்.
மேலை நாடுகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு பல விசேட சலுகைகள் உள்ளன, அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு வேண்டிய வசதிகைச் செய்து தருகின்றன. அங்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை பெற்றவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. உடல் ஊனமுற்றோர் அலுவலகங்களுக்கு சக்கர நாற்காலிகளில் தாமே வருவதற்குப் உதவியாக சாய்வான பாதைகள் உள்ளன. பல கல்லூரிகளில் உள்ள கேட்போர் கூடங்களில் நடைபெறும் கருத்தரங்கு அறைகளிலும் இவ் வசதி உண்டு.
இலங்கையில் உள்ள Dialog என்னும் செல்லிடப்பேசி நிறுவனம் வாய் பேசாத - காது கேளாதவர்களுக்கு எண்ணற்ற இலவச குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஏற்ப இலவச சேவையை வழங்குகிறது. இதேபோல் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் நாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான உடல் ஊனமுற்றவர்கள் உள்ள நிலையில், அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர் வரும் 19.11.2006 அன்று சென்னையில் மாநாடும் பேரணியும் நடத்த உள்ளார்கள்.
1 கருத்துகள்:
நல்ல பதிவு
கருத்துரையிடுக