விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : நினைவலைகள் - கலாநிதி பொன். பூலோகசிங்கம்

2024-04-01 by விருபா - Viruba | 0 கருத்துகள்

   மலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்கவேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு  யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இனவெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது. முப்பத்தொரு ஆண்டுகள் முடிவடைந்து முப்பத்திரண்டாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது.  நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமண்யம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். அவர் பூதவுடல் மறைந்து புகழுடல் எய்திப் பதினாறாண்டுகள் நிறைவேறிவிட்டன. இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் ‘பார்த்த சாரதி’ பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிர்க்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர்-கேட்டவர் ஏற்றுக்கொள்வர். 

    1980ஆம் ஆண்டிலே தமிழிலும் 2005இலே ஆங்கிலத்திலும் வெளியான இருநூல்களை வாசித்தபோது, விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்று வேதனைப்பட்டேன். அந்நூற் கருத்துகளை விமர்சிக்க எமக்கான தகுதியென்ன பார்க்குப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலே ஆற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுப் பேருரையிலே,

“அரசும் அரசின் அடிவருடிகளான தமிழர்கள் சிலரும் மாநாட்டைக் குழப்புவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தனர். வித்தியானந்தனுடைய நன்மாணவர்களாக அதுகாலம் வரையிற் கருதப்பட்ட சிலர், சுயநலம் கருதி அரசுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ்த் துறை பூலோகசிங்கம், வரலாற்றுத் துறை பத்மநாதன் முதலிய வெகுமான்களே வித்தியானந்தனுக்குப் பக்கபலமாக நின்றனர்’’ 

என்று கூறியுள்ள கருத்தினை முன்வைக்கிறோம். (நினைவுப் பேருரை: பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம், கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு, திசம்பர், 1989, பக். 20) 

பேராசிரியர் வேலுப்பிள்ளையின் கருத்துகளை மறைப்பதற்குச் சில தாசர்களால் எடுக்கப்பெற்றிருக்கும் முயற்சிகளை உண்மை விரும்பிகள் நிதானித்து நோக்குதல் அவசியமாகும்.

முகாமைக்குழுவின் உறுப்பினராக 1972ஆம் ஆண்டு ‘சாந்தம்’ பொதுக்கூட்டத்திலிருந்து சரஸ்வதி மண்டபம், கொழும்பு இந்துக் கல்லூரி, சட்டத்தரணி அம்பலவாணரின் அல்பிரட் பிளேஸ் வாசஸ்தலக் கூட்டங்கள்வரை இரு வருடம் இடைவிடாது பங்குபற்றியதோடு, கல்வி ஆய்வுக் குழுவுக்கு நியமிக்கப்பெற்ற மூன்று செயலாளருள் ஒருவராகச் செயலாற்றி, மாநாட்டின் நினைவு மலரின் ஆசிரியராக, அதனை வெளிக்கொணர்ந்தவன் பூலோகசிங்கம் என்ற உண்மையை அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். எனவே நான்காவது மாநாடு பற்றியும் அதனைச் சிறப்பாக நடாத்தி வெற்றி ஈட்டிய தலைவர் பற்றியும் கூற எமக்குத் தகைமையுண்டு என்பதை யாரும் மறுத்தலரிது.

1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலே பண்டாரநாயகாவின் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. வடக்கிலும் கிழக்கிலும் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக்காவலிலே வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரி முன்னணி அரசை 1963இலே மகாசன ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாசக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன அமைத்துக் கொண்டபோதும் தமிழருக்கு விமோசனம் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் மீது மத்தியதர வர்க்கத் தமிழர் வைத்திருந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. ஏனெனில், அதுவரைகாலம் தமிழினத்தின் சார்பாக அவர்கள் கூறிவந்த கோட்பாடுகள் பதவிக்காகத் தூக்கியெறியப்பட்டன. சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாயினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.

1965 மார்ச்சு மாதத்திலே நடைபெற்ற ஆறாவது பாராளுமன்றத் தேர்தலிலே டட்லி சேனநாயகா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. எம். திருச்செல்வம் தேசிய அரசின் அமைச்சர்களில் ஒருவராகித் தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்குச் சாட்சியானார். ஆயினும் எதிரணியில் இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசியஅரசுப் போட்டி போட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்திற் புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்காக ஒக்ஸ்போடு பல்கலைக்கழகத்திலே இருந்த காலை (1963 செப்தம்பர் முதல் 1965 அக்தோபர் வரை) அங்கு எம் ஆய்வுக்குப் பொறுப்பாக விளங்கிய பேராசிரியர் தொமஸ் பறோ புதுதில்லியில் 1964 சனவரியின் ஆரம்பத்திற் கலந்துகொண்ட 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம்தேதி உத்தியோகப்பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினராவர்.

பேராசிரியர் தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகித்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே ‘தமிழ் கல்ச்சர்’ எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரமாண்டமான முறையிலே முதல் மாநாட்டினைக் கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தத் திட்டமிட்டுப் பெரியதொரு அணியினைத் திரட்டிச் செயற்படுத்தினார்.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இலங்கையிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகப் பணிபுரிந்தது கல்விப் பீடத்திலேயாம்; தமிழ்த் துறையிலே அவர் சேவை எதிர்பார்க்கப்படவில்லை. தமிழ்த்துறையார் அலுவல்களிலே அவர் கை போடவில்லை, ஓரளவுக்கு ஒதுங்கியே இருந்தார் என்றே கூறிவிடலாம். மேலும், அவர் யாழ்ப்பாண மறைமாவட்டத்தினைச் சேராதவராகத் தூத்துக்குடி மறைமாவட்டத்தினராக மறைக்கல்வி பயின்ற காலம் முதலாகப் பேராதனையிற் பணிபுரிந்த காலமும் இருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இக்காரணங்களாலே அடிகளார் யாழ்ப்பாண வட்டத்தினை விட்டு விட்டுக் கொழும்பு வட்டத்திலே அதிகமாக ஊடாடினார். கே.சி.தங்கராசா, வி. கணபதிப்பிள்ளை, கே. செல்வநாதன் போன்றவர்கள் அவருடைய வட்டத்திலே சிறப்பிடம் பெற்றிருந்தனர். இதனால் கோலாலம்பூர் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளையும் பார்வையாளரையும் தெரியும் பொறுப்பும், இலவசப் பயணச்சீட்டுக்கு உரியவராகத் தெரியும் பொறுப்பும் கே.சி. தங்கராசா குழுவிடம் விடப்பட்டிருந்தது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஓய்வு எடுத்ததை அடுத்து, 1965இலே வி. செல்வநாயகம் பேராசிரியர் பதவியினைப் பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத்தலைவராக விளங்கினார்.

கோலாலம்பூர் மாநாட்டுக்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராசிரியர் செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் கோலாலம்பூர் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்குமேல் பார்வையாளர்கள்; மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கே.சி. தங்கராசா நெறிப்படுத்தலிலே அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை எவ்வாறு இயங்கத் தொடங்கியிருந்தது என்பதற்கு ஒரு முன்னறிவித்தல்.

1967ஆம் ஆண்டு சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவச்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே தி.மு.க. இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3- 10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொருளாளர் ஏ. சுப்பையா சென்னை மாநாட்டின் ஆய்வுக்களத்திற்குச் சூத்திரதாரியாக விளங்கினார். ஆயினும் அதேகாலத்திலே ‘பூம்புகார்’ பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா? ஜனரஞ்சகமான அரங்குகளா? சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் லட்சியங்களும் சென்னையிலே பட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.

தமிழ் உணர்வலைகளிலே முன்னுக்கு வந்த தி.மு.க. அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; விரும்பியதாகவும் தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கான இலங்கையர் தேர்வுகள் சகலவற்றிற்கும் பொறுப்பாக இருந்த கே.சி. தங்கராசா குழு கோலாலம்பூருக்கு இயங்கிய மாதிரியே செயற்பட்டது. ஒரே வித்தியாசம் சென்னைக்குப் பார்வையாளர் தொகை அதிகரிக்கப்பட்டிருந்தது! சென்னைத் தமிழ்விழாவை எதிர்பார்த்து அவர்கள் செயற்பட்டனர்!

டட்லி சேனநாயகாவின் தேசிய அரசு முன்வைத்த மாவட்ட சபை மசோதா, அவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஆர். ஜி. சேனநாயாக்காவின் இனவாத முக்கியத்துவத்திற்கு முன் எடுபட முடியவில்லை. 1968 சனவரியில் சென்னை மாநாட்டிற்குச் சென்ற அமைச்சர் திருச்செல்வம் நவம்பரிலே தேசிய அரசை விட்டு நீங்கியதை அடுத்துத் தமிழரசுக் கட்சி தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது.

1970ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற ஏழாவது பாராளுமன்றத் தேர்தலிற் சிறிமா பண்டார நாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி மாபெரும் வெற்றி ஈட்டியது. கே.சி. தங்கராசா இடதுசாரிகளின் நண்பராக இருந்தபோதும் தேசிய அரசின் காலத்திற் காகிதக் கூட்டுத்தாபனத் தலைவராக நியமிக்கப் பெற்றவர். ஐக்கிய முன்னணி 1970இலே மீண்டபோது அவர் சேவை தொடர்ந்தது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் முகாமைத்துவமும் கே.சி. தங்கராசா பொறுப்பிலேயே இருந்தது. இக்காலத்திலே அவரும் தனிநாயக அடிகளாரும் இணைச் செயலாளராக இயங்கியதாகத் தெரிகிறது.

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரீசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டுக்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட்ட திராவிட மொழிகள் பேசியவர்களும் கலந்து கொள்ளக்கூடிய அரங்காக அது அமைந்தது. பாரீஸ் மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ்.எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பிவைத்தது. பாரீஸ்மாநாட்டிற்கு முன்னும் பின்னும் தமிழபிமானிகளிடையே மட்டுமன்றித் தமிழறிஞரிடையேயும் ஈழத்துக்கிளையின் நிர்வாகத்தினர் பற்றியும் அவர்கள் பாரீஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தமுறை பற்றியும் அதிருப்தி ஏற்பட்டது.

அக்காலத்தில் பம்பலப்பிட்டி கிளென் அபர் பிளேஸில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்காக ஒரு வீட்டினை எடுத்து நடத்தினார்கள். அங்கு வெளிநாட்டு அறிஞர்களுக்கு விடுதி வசதிகள், ஆவணநிலையம், வெளியீட்டகம், தொலைபேசி வசதிகள், பகுதிநேர வேலையாள் கொண்ட செயலகம் எல்லாம் இருந்தன என்று கே.சி. தங்கராசா பின்பு 1973 அக்தோபரிலே எங்களுக்குக் கடிதம் மூலம் அறியத்தந்திருந்தார். அதற்கு முன்பு அவ்வசதிகள் பற்றி யாருக்குத் தெரியுமோ தெரியவில்லை! கிளென் அபர் பிளேஸ் வீட்டிலே தான், பாரீஸ் போய் மீண்ட கைலாசபதியும் கமாலுதீனும் 1971 பெப்ருவரி முற்பகுதியில் ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற் காட்சி ஒன்றினை ஒழுங்குபண்ணியிருந்தார்கள். அதன் சார்பாகத் தேர்ந்த நூற்பட்டியல் ஒன்றும் வெளியிடப்பெற்றிருந்தது. அப்பட்டியலிற் கண்ட தவறுகளை எடுத்துக் காட்டித் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அன்று துண்டுப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நான்காவது மாநாடு இலங்கையில் நடைபெறவேண்டியிருந்தது. சோஷலிசம் கதைத்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசகர் வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடம் வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி. தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம்வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவுகட்டிவிட்டனர். ஆனால் அத்திட்டம் தடம்புரண்டு போயிற்று.

1972இலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள ‘சாந்தம்’ மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்கஇருந்த முகாமைக்குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்கு புலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டுவந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்து பல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.

தமிழ்உணர்ச்சிக்கு முன்பு சலசலப்பு எடுபடவில்லை. இலங்கை அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. 1966ஆம் ஆண்டு முதலாகத் தமிழ் ஆய்வுகளோடு தொடர்பில்லாத முகாமைத்துவம் தன் இருப்பிலே வைத்திருந்த மன்றத்திற்கு முதன் முதலாகத் தேர்தல் மூலம் புதிய முகாமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எதேச்சதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம்வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்!

டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா 1966இலே கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர். அங்கு அவர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்தபோது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்தோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக் குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 செப்தம்பரிலே தலைமையைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் மன்றத்திற்கு வழங்கிய பணத்தையும் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது. 

கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 24.6.84 இல் எடுக்கப்பெற்ற பேராசிரியர் வித்தியானந்தன் மணிவிழாவின்போது ‘துணை வேந்தர் வித்தி’ எனவொரு நூல் வெளியிடப்பெற்றிருந்தது. அதனுள் முன்னாள் நீதியரசர் தம்பையா ‘அன்புடன் வழங்கிய’ அணிந்துரை ஒன்று இடம்பெற்றிருந்தது. யாரைப் பற்றிய நூலுக்கு, யாரிடம் இருந்து அணிந்துரை பெறுவது என்ற விவஸ்தையே இல்லையா! அந்த அணிந்துரையிலே நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. போதாதற்கு நீதியரசரே அங்கு எழுந்தருளியிருந்தார்! அவருடைய கைங்கரியத்தினை மேடையிலே கூறவைத்துவிட்டார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். அவர் தலைமையுரையிலே, நீதியரசர் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குச் செய்த அரும்பெரும் பணிகளை உண்மை தெரியாது எடுத்துரைத்து எம்மை நிலைதடுமாற வைத்துவிட்டார். நீதியரசர் அன்று அளித்த அநாதரவான காட்சி எம் மனக்கண் முன்னே இன்றும் நிற்கிறது.

தங்கராசா தன்னாதிக்கம் பறிபோன கோபத்திலே எவ்வளவு குந்தகம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தவர். கிளென் அபர் பிளேஸ் வீட்டிலோ, மிலாகிரியா அவெனியூ ‘சாந்தம்’ மனையிலோ புதியமுகாமைக் குழு சந்தித்துச் செயலாற்றமுடியவில்லை. சரஸ்வதி மண்டபத்திலும், கொழும்பு இந்துக் கல்லூரியிலும், கடைசியிலே கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிளேஸ் சட்டத்தரணி அம்பலவாணர் இல்லத்திலும் மாறிமாறிக் கூடவேண்டியிருந்தது. தனிநாயக அடிகளார் தன்னோடு நீண்ட காலமாக இணைந்து பழகியவருக்கு எதிராக இயங்கக்கூடாமல் மாநாடு ஆரம்பமாகும்வரை ஒதுங்கியே நின்றார். வர்த்தகப் பிரமுகர் கே.செல்வநாதனும் இதே காரணத்தினாலேயே ஒதுங்கிக் கொண்டார்.

தங்கராசாவின் கடைசி அஸ்திரம் மாநாட்டினை ஆகஸ்டுக்குத் தள்ளிப்போட வேண்டும் என்பதாகும். இவ்விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு முகாமைக்குழு உறுப்பினருக்கும் 1973 அக்தோபர் 29ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்திலே, தாம் முன்வைத்த கருத்தினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளையிலிருந்து தாமும் வேறு சிலரும் வெளியேறப் போவதாகவும் எச்சரித்திருந்தார். அக்காலத்திற் கொழும்புக்கு வந்திருந்த பேராசிரியர் பிலியோசா மாநாட்டினை ஆகஸ்டிலே வைக்கும்படி முகாமைக்குழுவிடம் கேட்டமைக்கும் யார் காரணமாயிருந்தார் என்று அன்று தெரியாதவர்கள் இருக்கவில்லை.

இவ்வுண்மைகளை எல்லாம் மறைக்க முற்படுபவர், அவற்றைத் தெரிந்தவர்கள், அநுபவித்தவர்கள் சிலர் இன்றும் உயிர்வாழ்வதை மறந்துவிட்டனர். தம்பையாவும் தங்கராசாவும் யாழ்ப்பாண மாநாட்டினைக் காணமுடியாமல் ஒதுங்கிவிட்டடமை வருத்தத்திற்குரியது. தனிநாயக அடிகளார் யாழ்ப்பாண மாநாட்டிலே அவர்களுக்கு நன்றி கூறினார்.

யாழ்ப்பாண மாநாட்டினை முன்னெடுத்துச் செல்வதை அதிகம் பாதித்த மற்றொருவர் டாக்டர் எஸ். ஆனந்தராசா. அமைப்புக்குழுச் செயலாளரில் ஒருவரான டாக்டர் ஆனந்தராசா முகாமைக்குழுவின் கருத்துகளுக்கு மாறாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்துமோதல்களால் டாக்டர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக்கிளையின் முகாமைத்துவத்திலிருந்து வெளியேறினார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திராவும் முகாமைக் குழுவோடு ஒத்துப்போகமுடியாமற் சிறிது காலத்திற்குள் அமைப்புச் செயலாளர் பதவியைத் துறந்தார். 

யாழ்ப்பாணத்திலே மாநாடு வைக்கவேண்டும் என்பதே முகாமைக்குழுவின் பெரும்பான்மையோர் கருத்தாகும். இக்கருத்திற்கு ஆதரவு தரமுடியாதவர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கழன்று விட்டனர். இன்று பின்னோக்கிப் பார்க்கையில், இவர்தான் அக்கருத்தை முன்வைத்தார், இல்லை அவர்தான் என்று கூறுவது வீண் விளம்பரம். முகாமைக்குழுவுக்கு ஆரம்பத்தில் அப்பிரச்சினையே இருக்கவில்லை.

பேராசிரியர் வித்தியானந்தன் 5.10.1973இலே முகாமைக்குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை அவற்றை ஏற்றுக்கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:

  • மாநாடு கொழும்பிலே நடக்கவேண்டும்; மாநாட்டை பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்; 
  • பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்; 
  • அமைச்சர் செல்லையா குமாரசூரியர் மாநாட்டில் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் ஹோட்டல் வசதிகளும் உணவு வசதிகளும்கூட முன்வைக்கப்பட்டன.

தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்துவிட்டார். அதனால் ஏனைய அம்சங்கள் பற்றிய பேச்சுக்கே இடமில்லாமற் போய் விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து ‘அபேபலமு’ (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்திலே எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டுக்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பிவிடப் பெற்றனர். ஆனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே ‘விசா’ வழங்கியது. 

யாழ்ப்பாணம் தமிழ் இனத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக்காட்டினார். அதனை யாழ் மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளை எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.

தமிழ்மக்களின் பெருமிதத்தினைக்கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே ‘பஞ்சாப் படுகொலை’ நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,

“தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச்சென்றது 1974 சனவரி பத்தாம் தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்.”

என்பர். (S.J.V.Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism. 1947 -1977, 1944, p. 126).

நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடாத்த உருவெடுத்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளையின் முகாமைக்குழுவிலே 1972இலே உறுப்பினனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற காலம் முதலாகப் பேராசிரியர் வித்தியானந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு முன்பு மாணவனாக இருந்த காலை (1957 - 1961) அவ்வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பினைப் பெற்ற அவருடைய ‘நன் மாணாக்கர்’ கட்டுரை சமர்ப்பிக்கவோ பார்வையாளராகக் கலந்துகொள்ளவோ இல்லை. சி. தில்லைநாதன் மட்டும் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். மாணாக்கர் மாநாட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்டதை பேராசிரியர் வித்தியானந்தன் முகாமைக்குழுவுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலே பெயர் சுட்டி விரிவாகக் காட்டியிருந்தார். ஆயினும் பின்பு நூலாக வெளியிட்ட போது பெயர்களைச் சுட்டுவது தவிர்க்கப்பட்டது. அவர் மனதிலே அவர்களுடைய செயல் பெரும் கசப்பினை ஏற்படுத்தியிருந்தது. இதனாலேதான் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அந்நிகழ்ச்சியை அவருடைய பேருரையிலே விதந்து கூறியிருந்தார்.

திடீரென அவருடைய முடிவு 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத்தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. மனைவியை இழந்து பிள்ளைகளைப் பிரிந்து அவமானத்தினாற் குன்றிப்போனார். அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கல் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்றமுயன்றோம். அவர் மறைவினை நினைத்து நினைத்து வருந்தும் சந்தர்ப்பம் 1991 சனவரியில் எமக்கு ஏற்பட்டது.


(பொ. பூலோகசிங்கம் அவர்களின் பிறந்தநாள் இன்று - ஏப்ரல் 1, 1936)




தமிழ்ப் பாதுகாப்புக் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும்

2024-01-03 by விருபா - Viruba | 0 கருத்துகள்

ஈழத்தின் தமிழ்ப் புலமைத்துவச் செயற்பாடுகள் - வரலாறு, பாத்தியதை

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் தாயகம், தமிழ் எழுத்து தொடர்பிலான ஈழத்தின் புலமைத்துவச் செயற்பாடுகள் என்பது பல வகைகளில் பலரால் காலாதிகாலமாகச் செய்யப்பட்டுவருகின்றன. இப்புலமைத்துவச் செயற்பாடுகளின் உச்சமென்பது கடந்தகாலத்தில் வரலாறு விட்டுச் சென்ற தடயங்களைத் தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி எதிர்காலத்தில் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் ஆய்வு மூலங்களாத் தருதலாகும். புலமைத் தளத்தில் ஈழத்தவர்களின் தொகுத்து ஆவணப்படுத்தல் முயற்சி என்பது சைமன் காசிச் செட்டி அவர்களின் ‘தமிழ் புளூராக்’ (Tamil Plutarch) மூலம் தொடங்கிய உயரிய இத்தமிழ்த் தொண்டு இன்றுவரை அறுபடாது தொடர்ந்துவரும் ஒரு பாரம்பரியமாகும். அறிவுசார் புலமைத்துவத் தளத்தில் ஈழத்தவர்களின் இப்பங்களிப்புகள் மிகவும் காத்திரமான முன்முயற்சிகளாகவும், காலங்கடந்தும் ஆய்வுவெளிகளைத் திறந்துவைக்கும் ஆவணங்களாகவும் உள்ளன.

சைமன் காசிச் செட்டியின் தொடர்ச்சியாக ஆணல்ட் சதாசிவம் பிள்ளை பாவலர் சரித்திர தீபகம்(1886) தந்தார், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரம்(1916) படைத்தார், வித்துவசிரோமணி  சி. கணேசையர் அவர்களால் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939) நூலும், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்(1967) - மு. கணபதிப்பிள்ளை அவர்களாலும்  தொகுத்துத் தரப்பட்டது. இவையாவுமே தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாறுகளினூடாகத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கூறும் ஆவணங்களாகும். 

தொல்காப்பியம், கலித்தொகை போன்ற தொல்தமிழ் எழுத்துகளைப் பல்வேறு ஓலைச் சுவடிப் பிரதிகளை அலைந்து திரிந்து தேடியெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து, பாடவேறுபாடுகளைத் தன் ஆராய்ச்சித்திறனால் கண்டறிந்து களைந்து, அச்சுவாகனமேற்றித் தெளிவான பதிப்புகளாகத் தந்த தமிழ்ப் பதிப்புலக முன்னோடி சி. வை. தாமோதரனார் செய்தபணி அறிவுசார் ஆவணப்படுத்தலே.

தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதானகோசம்(1902) தந்த ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அதுவரை காலமும் வெளிவந்த தமிழ் அகராதிகளில் காணப்படாது விடுபட்ட சொற்களைத் தொகுத்து அச்சொற்களுக்கான இலக்கிய ஆதாரங்களையும் இணைத்துத் தமிழ்ச் சொல்லகராதி(1904) தந்த வைமன் கதிரைவேற்பிள்ளை, முதன்முதலாக தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘தமிழ்மொழி ஒப்பியல் அகராதி’(1938) எனும் பெயரில் தமிழ்ச்சொற்களின் வேர்களைக் கண்டறிந்து தந்த ‘சொற்கலைப் புலவர்’ சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரும் தொகுத்தலினூடாக ஆவணப்படுத்தலையே செய்துள்ளனர்.

‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’(1904) என்ற தமிழர்களின் வரலாற்று ஆங்கில நூலைத் தந்த வி. கனகசபைப் பிள்ளை அவர்களால் தமிழர் தொல்வரலாறும், ஆங்கிலத்தில் ஆனந்தக் குமாரசாமி அவர்களால் எழுதப்பட்ட ‘சிவ நடனம்’(1918) போன்ற நூல்களின் மூலமும் அக்காலத்தில் வெளிவந்த பல முன்னணி ஆய்விதழ்களில் அவரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளால் தமிழர் சமூக வாழ்வியல் வரலாறும், விபுலானந்த அடிகளால் எழுதப்பட்ட ‘யாழ் நூல்’ என்ற தமிழிசை ஆராய்ச்சி நூலால் தமிழர்களின் கலைவரலாறும் ஆவணப்படுத்தப்பட்டன. 

தமிழியல் ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா முதன்மையானவர். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அவரது அகராதிகள் தமிழ் அகராதித் துறையில் அவருக்குத் தனித்துவமான இடத்தை பெற்றுத் தந்தன. இதுவும் அடிப்படையில் தொகுத்து ஆவணப்படுத்தல் வகையினவே.  

ஈழத்தவர்களின் முதலாவது புலப்பெயர்வான மலாயா இடப்பெயர்வை மலாயா மான்மியம்(1930) எனும் பெயரில் ச. முத்துத்தம்பி பிள்ளை அவர்களும், அதன் தொடர்ச்சியாக ‘மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்களின் நூறு ஆண்டுகள்’ என்ற வரலாற்று ஆங்கில நூலை மலேசியாவில் வாழ்ந்த இலங்கையரான எஸ். துரைராஜசிங்கம் அவர்களும் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

கலாயோகி ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்களையெல்லாம் முதன்முதல் தேடித் தொகுத்துப் பட்டியலாக்கம் செய்து ஆவணப்படுத்தியவரும் மலேசிய எஸ். துரைராஜசிங்கம் அவர்களே.  

சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள், கவிதைகள், சொற்பொழிவுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பவற்றின் தொகுப்பாவணங்களாக விபுலானந்தத் தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் நூல்கள் மட்டக்களப்பு அருள் செல்வநாயகம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு அகராதி(1997) - எஸ். ஆறுமுகம், மேன்மக்கள் சரித்திரம்(1930) - சு. இரத்தினசாமி ஐயர், உத்தியோகர் லக்ஷணக் கும்மி(1936) போன்ற தொகுப்பு ஆவண நூல்களும் ஈழத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழ் ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் நோக்குநூல்களையும், ஆதார நூல்களையும், ஆராய்ச்சிக் களங்களையும் உருவாக்கிய ஈழத்தறிஞர்களின் ஆவணப்படுத்தல் முயற்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின் இருப்பை வளப்படுத்தும், வலுப்படுத்தும் அறிவுசார் ஆய்வுச் செயல்களாகும். 

இவை யாவற்றுக்கும் மேலான சிகரமாகத் தமிழ்மொழியின் ஆராய்ச்சித் தலைமைப்பீடமெனக் கருதக்கூடிய சிந்தனைச் செயலணியை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என உருவாக்கித் தந்தவர் எங்கள் தனிநாயக அடிகளாவார். 1951ஆம் ஆண்டில் அடிகளார் முதன்முதலாக வெளிப்படுத்திய எண்ணக்கரு 1964 ஆண்டில் செயல்வடிவம் பெற்றது. 1952-1964 இடைப்பட்ட காலத்தில் அடிகளாரால் நடாத்தப்பட்ட தமிழ்க் கல்ச்சர் ஆய்விதழ் மூலம் அடிகளார் பெற்றுக்கொண்ட உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு இதனைச் சாத்தியப்படுத்தியது. 

கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பரப்பில் முறையான தமிழரசு இல்லாது, அதிகாரம் இல்லாது, சாதாரண மக்களால் காப்பாற்றப்பட்டு, இன்றைய கணிணி யுகத்திலும் தமிழ்மொழி உயிர்ப்புடன் தொடர்கிறது. தமிழ்மொழி தொடர்பில் உருவான மிகச் சிறந்த சிந்தனையாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையும் அதன் உலகளாவிய ஆராய்ச்சி மாநாடுகளையும் கொள்ளலாம். பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்களையும் ஒரே குடையின்கீழ் குறித்த கால இடைவெளியில் நடாத்தப்படும் மாநாடுகளில் நேரடியாகச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை உருவாக்கியதென்பது தமிழ் மொழிக்குக் கிடைத்த பெரும் நற்பேறு. 

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைப் பார்த்து மற்றைய பல இந்திய மொழிகளிலும் உலக மாநாடுகள் நடாத்தப்படும் மரபு தொடங்கியமை, அடிகளார் வெளிப்படுத்தியது மிகச் சிறந்த உன்னத சிந்தனை என்பதை உறுதிப்படுத்தும் பெரும் சான்று.

செல்வராஜா அவர்களின் தொகுப்பு - ஆவணக் கேடயம்

இவ்வாறான ஒரு பெரும் சிந்தனைச் செயல்வடிவின் தொடர்நிகழ்வாக நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்று பாரிஸ் மாநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான சர்ச்சைகள், செய்திகள், இறுதிநாள் அவலங்கள், விசாரணை அறிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, மாநாட்டின் பின்னரான சூழ்நிலை போன்றவற்றின் தொடர்பில் அச்சு ஊடகத்தில் வெளியானவற்றை தன்னுடைய தளாராத தேடலின்மூலம் ஒரே இடமாகத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் ஈழத்து ஆவணப்படுத்தல் முன்னோடியான நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்கள். பகீரதப் பிரயத்தனமான இம்மாபெரும் வேலையை அவரைத் தவிர வேறெவராலும் சிந்தித்துக்கூடப் பார்க்கமுடியாதென்பது என் கணிப்பு. 

என். செல்வராஜா அவர்களின் ‘‘நினைவுகளே எங்கள் கேடயம்’’ என்ற இத்தொகுப்பு நூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, எதிர்காலத்தில் தமிழ் ஆய்வு செய்யமுற்படும் ஒரு ஆராய்ச்சி மாணவனுக்கு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான வரலாற்றினை அறிந்துகொள்ளமுடியும். அம்மாணவனின் சிந்திக்கும், அலசும் ஆற்றலிற்கேற்ப புதியதொரு மீள்வாசிப்பினையும் கண்டடையலாம். 

எந்தவொரு நிறுவனத்தின் நிதி ஆதரவுமின்றித் தனியொருவராக ஈழத்துத் தமிழ் நூல்களை நூல்தேட்டம் தொகுப்பு வரிசைகளாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்திவரும் என். செல்வராஜா அவர்களை நாம் வாழும் காலத்து சைமன் காசிச்செட்டியாகவோ அல்லது சி. வை. தாமோதரனாராகவோதான் நான் உணர்கிறேன் என்பது மிகைப்படுத்தல் அல்ல உளப்பூர்வமான வெளிப்பாடு.

‘‘நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அதன் ஆய்வுகளுக்காக வரலாற்றில் இடம்பெறுவதைவிட ஈழத்தமிழினத்தின் எழுச்சிக்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளதை நான் பார்க்கின்றேன்.’’ 

என்று தொகுப்பாசிரியர் என். செல்வராஜா அவர்கள் நூலின் சரவைப் பிரதியுடன் அனுப்பிவைத்த வழிகாட்டற் குறிப்பு உணர்தும் திசைவழியே நானும் செல்கிறேன்.

தனிநாயக அடிகளாரின் சிந்தனையும், தமிழ் கல்ச்சர் ஆய்விதழும்

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் கராணங்களைக் கண்டறிவதற்கு நாம் சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்துச் செல்லவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றம் எதன் தொடர்ச்சி என்பதை அறியவேண்டும்? எந்த அடிப்படை எண்ணக்கருலிருந்து ஏற்பட்டதென்பதனை அறியவேண்டும்? இதற்கு நாம் 1951ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற நான்காம் தமிழ்விழாவிலே தனிநாயக அடிகளார் ஆற்றிய உரையைப் பார்க்கவேண்டும்,

“இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India என்றும், History of Indian Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப் பார்மின். மாக்ஸ் முல்லர் (Max Müller), வின்றானிட்ஸ்(Winternitz, M.) போன்றவர்  முதலாகப்  பலரும், வடமொழி  இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப்பற்றியோ, திராவிட நாகரிகத்தைப்பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும், காணக்கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள், இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஓழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ஙனம் எடுத்துக் கூறுதற்கும், பெரிதும் மனத்துணிவு வேண்டற்பாலதாயிற்று. தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும், நம் தமிழைப் பற்றிய உண்மைகளை இதுகாறும் கூறினோம் அல்லேம். 

“மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே.” 

“பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே.” 

ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாமே நம்மையுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர்  எனக்கொண்டு, இங்கு உயிர்வாழ்ந்து வந்துள்ளோம். இன்று இத்தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழ் விழா, உலகில் தமிழ் நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலை நாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்லதாயின், அது தமிழ் மக்களுக்கே பெருமை தருதலால், நாம் அனைவரும் நமக்கே நன்மை பல பயக்கும் நற்றொண்டைச் செய்தோமாவோம்.’’ 

- தமிழ்த்தூது திருத்திய மூன்றாம் பதிப்பு (1961) பக்கம் 28, 29

  தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநாட்டுவற்காகப் புதியதோர் இயக்கம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், தமிழ்மொழியைக் காக்கும் ஒரு செயலாக நம் தமிழைப் பற்றிய உண்மைகளை் நாமே பிறமொழிகளில் எடுத்துக்கூறவும் வேண்டுமென்பதையும் அடிகளார் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதனைச் செயற்படுத்தவும் முனைந்தார். ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற ஆய்விதழை வெளியிடத் தொடங்கினார், இது தமிழ்மொழியைப் பாதுகாக்கும் ஒரு காவற்செயல். உலகத்தின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் தமிழ் தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவதன் மூலம் தமிழியல் உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆய்வாளர்களைச் சென்றடைய வைத்தார். 1950 இற்குப் பிற்பட்ட உடனடி இருபதாண்டுகளில் மேலைத்தேய நாடுகளில் அதிகளவு ஆய்வாளர்கள் தமிழ்மொழியின்பால் ஈர்க்கப்பட்டமைக்கு அடிகளார் மேற்கொண்ட உலகப் பயணங்களும், அடிகளார் தமிழ்த் தூதுவராகச் செயற்பட்டமையுமே காரணமாகும்.

தனிமனிதனாகத் தமிழ்மொழி காக்கும் அவரது செயலிற்கு வேண்டிய அறிவுத் திறனும் மொழித்திறனும் அடிகளாரிடத்தே இருந்தாலும், அதனைச் செயல்வடிவமாக்கும் வேளையில் அதற்கு வேண்டிய நிதி வளமும் ஆளணி வளமும் அவருக்குத் தேவைப்பட்டன. 

இந்தியாவின் தென்பகுதிக்கான பிராந்திய மேலாளராக வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆ. சுப்பையா அவர்கள் வள்ளலாகவும், அடிகளாரின் வலதுகரமாகவும் செயற்பட்டு உதவினார். இவரது வீட்டு முகவரியே தொடக்கத்தில் தனிநாயக அடிகளாரின் சென்னைத் தொடர்பு முகவரியாகவும், பின்னர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முகவரியாக, அலுவலகமாக 1981 ஆம் ஆண்டுவரை இயங்கியுள்ளது. 

இந்தியாவிலிருந்து தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், வ. ஐ. சுப்பிரமணியம், இரா. பி. சேதுப்பிள்ளை, ஆ.சிதம்பரநாத செட்டியார், கா. கா. பிள்ளை, பம்பாய் பி. ஜோசப், பூனே சுனித் குமார் சட்டர்ஜி, தூத்துக்குடி பவுல் நாடார் போன்ற சான்றோர்கள் அடிகளாரின் தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் வளர்ச்சிக்குப் பக்கபலமாகத் துணைநின்று பங்களித்தனர்.

Jean Filliozat, Arno Lehmann, Kamil Zvelebil, John Ralston Marr, Herbert Arthur Popley, Leopold S. J. Bazou, Henry J. Heras, M. Andronov, V. A. Makarenko, Murray Barnson Emeneau, Jr. Edgar. C. Knowlton போன்ற ஐயோப்பிய, ஸ்கன்டிநேவிய, ரஸ்ய மற்றும் அமெரிக்க ஆய்வளர்களும் தங்கள் ஆய்வுகளைத் தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிட்டு அடிகளாரின் சிந்தனைக்கு வலுச்சேர்த்தனர்.

இந்த வகையில் இலங்கையின் சி. அரசரட்ணம், பண்டிதர் கா. பொ. ரத்தினம், எச். டபிள்யூ. தம்பையா, ஆ. சதாசிவம், ஏ. ஜே. வில்சன், சு. வித்தியானந்தன், வை. கா. சிவப்பிரகாசம், சா. ஜெ. குணசேகரம், தாவீது அடிகளார், பீ. பி. ஜெ. ஹேவவாசம் போன்றோர் தொடர்ந்து பங்களித்திருந்தனர்.

தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் தொடர்ச்சியே உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்துதல் தொடர்பில் சென்னையிலுள்ள தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழ்நாட்டு அரசுடன் அடிகளார் மேற்கொண்ட உரையாடல் முயற்சிகள் 1962ம் ஆண்டில் மாநாட்டினை நடத்துவதற்கான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லவில்லை. தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாநாட்டினை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அடிகளாரின் இம்முயற்சிகளுக்குச் சென்னைத் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் தொடர்ச்சியாகத் துணைநின்றது எனினும் தமிழ்நாட்டில் மாநாடு நடாத்தும் சூழ்நிலை எட்டப்பெறவில்லை. 

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை மலேசியாவில் நடாத்துதல் என்பது அடிகளாரினால் மட்டும் முன்முடிவோடு தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல, அவரது பெருவிருப்பென்பது தமிழ்நாடுதான். உலகத் தமிழாராய்சி மாநாடு நடாத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமான அச்சாணியாக தமிழ்நாடு இருக்குமென்பது அடிகளார் எண்ணமாக இருந்தாலும், இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் நடாத்த என்று 1961 முதல் 1964 வரையான நான்காண்டுகள் அடிகளார் அலைந்துதிரிந்து எடுத்த முயற்சிகள் பலன்தரவில்லை. தமிழ்நாட்டில் அதற்கான சூழ்நிலை கூடிவராத நிலையிலேயே முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடாத்தவேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. 

இரண்டாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுப் பழமையுடைய தமிழ்மொழியின் உண்மைகளை, தனிநாயக அடிகளாரின் சிந்தனையில் உதித்த  தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிடத் தொடங்கிய தனிமனித முயற்சி, அதன் அடுத்த கட்டமாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய பக்குவத்தினை அடைகிறது. ஆய்விதழில் பங்களித்த ஆய்வாளர்கள் பலரும், அவர்களைப் பிரதிநிதிப்படுத்திய ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், போன்ற நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு நிறுவனங்களும் அடிகளாருக்குத் துணைநின்ற காலச்சூழ்நிலையான 1964ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்சி மன்றம் தொடங்கப்பட்டது. முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டில் மலேசியாவில் இடம்பெறுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதற்குத் துணைநிற்கும் நிலையில் சில நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தேசியக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.  

ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் ஆய்விதழ் வெளியிடப்பட்டதைப் போன்றே, தமிழாராய்சி மாநாடுகளும் ஆங்கிலத்திலே நடைபெறத் தொடங்கின. இதன் அடிப்படைக் காரணம், உலகிற்குத் தமிழைக் கொண்டுசெல்லதலே, உள்ளூரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுதல் அல்ல. அதேபோன்று அடிகளாரின் ஆய்விதழின் வெளியீட்டிற்குக் கடந்த பன்னிரு ஆண்டுகளாகப் பங்களித்துத் துணைநின்றவர்களே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகக் குழுவிலும், தேசியக் கிளைகளிலும் பங்கெடுப்பதென்பதுமான நிலை காணப்பட்டது. முதற்கட்டப் பயணத்தில் துணைவந்தோர் இரண்டாம்கட்டத்திலும் உடன் பயணிப்பதென்பது இயல்பானதே.  

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான பரப்புரைக்காக தனிநாயகம் அடிகளார் இலங்கை வந்தபோது, கொழும்பிலுள்ள கறுவாக்காடு (cinnamon garden) பகுதியில் வாழ்ந்துவந்த   நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா அவர்களின் வீட்டிலேயே ஆலோசனைக் கூட்டத்தினைக் கூட்டி ஆலோசித்துள்ளார். இலங்கை இருதேசங்களின் கூட்டு என்பதைச் சட்டரீதியாகப் பிரித்துக்காட்டும் ஒல்லாந்தர் காலத்துத் தேசவழமைச் சட்டம் தொடர்பில், தமிழ் கல்ச்சர் ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளுதல் அவசியம். 

11. 11. 1965 அன்று  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பில் விளக்கம் தரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை தனிநாயக அடிகளாரினால் தோற்றுவிக்கப்பட்டது. 

இலங்கைக்கிளையும் நான்காவது தமிழாராய்சி மாநாடும்

இலங்கைக்கிளையின் தலைவராக நீதிபதி எச். டபிள்யூ. தம்பையாவும் உறுப்பினர்களாக பே,ரா. வி. செல்வநாயகம், கலாநிதி ஆ. சதாசிவம், பேரா. ஏ. டபிள்யூ. மயில்வாகனம், கலாநிதி ஏ. ஜே. வில்சன், பேரா. க. குலரத்தினம், திரு. கே. சி. தங்கராஜா, திரு. ச. அம்பிகைபாகன், திரு. கே. செல்வநாதன் போன்றோரும்   பொறுப்பேற்றனர். 

1970 களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஶ்ரீமாவோ  அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களாக இருந்த நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா,  கே. சி. தங்கராஜா போன்றவர்களின் ஓரிரு பிரமுகர்த்தனச்  செயல்களும், ஶ்ரீமாவோ அரசின் தமிழ் தொடர்பான விடயங்களுக்குப் ஆலோசனைப் பொறுப்பாக இருந்த செல்லையா குமாரசூரியர் அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாக உறுப்பினர்களின் சமிக்கைகளும் ஶ்ரீமாவோ அரசாங்கத்தை தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நாடத்திடவைக்கலாமே என்ற நிலைப்பாட்டினை எடுப்பதற்குத் துணைபுரிந்துள்ளன. இவ்விரு தரப்பினரதும் அரச ஆதரவு மனப்பாங்கு, ஶ்ரீமாவோ அரச இயந்திரம் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண மாநாட்டிற்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதற்குக் காரணமாகும். 

ஶ்ரீமாவோ அரசும் மூன்று நிபந்தனைகளுடன், மாநாட்டிற்கான செலவுகளை ஏற்றும், கொழும்பில் அக்காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்த பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தினைக் கட்டணமின்றித் தருவதற்கும்  முன்வந்தது. இதன் மறைநிரலில் இலங்கையின் வடபகுதி தமிழரின் மரபுரீதியான தாயகம் என்பதை நீர்த்துப்போக வைக்கவும், இலங்கை முழுவதற்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதுமான அரச சூழ்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்ட தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் புதிய தலைவராகப் பெறுப்பேற்றிருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.  

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சிங்கள எழுத்தாளர்களையும் இணைத்து இயங்கிய அமைப்பு அல்ல, அமைப்பின் பெயர் அவ்வாறு இருந்தாலும் அது முழுமையாகத் தமிழர்களால் நிரப்பப்பட்ட அமைப்பாகவே இருந்தது. க. ககைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரின் முழுமையான நிர்வாக வழிகாட்டலில் இயங்கிய அமைப்பு என்றும் கூறலாம். தமிழ் இனவுணர்வு இல்லாத இச்சிறுகுழாத்தினர் தங்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் சிங்கள பௌத்த அரசிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் காழ்ப்புணர்வுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு எதிரான கருத்துகளை அரச பத்திரிகைகளினூடாகப் பரப்பினர். மாநாட்டின் இறுதிநாள் அவலத்தில் தமிழர்கள் தந்திரமாகக் கொல்லப்பட்ட பின்னரும் இடதுசாரி ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட ‘‘மல்லிகை’’ போன்ற இதழ்களில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் நிர்வாகக்குறைகளால் இடம்பெற்றதெனவும் இன்ன பிற அற்ப காரணங்களையும் பெரிதுபடுத்திய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவிலே நடைபெற்றபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இடதுசாரி இதழ் வசந்தம் 1966 மார்ச் 10 அன்று வெளியான மலர் 1 - இதழ் 7 இல் ‘ஆங்கிலத்தில் தமிழ் ஆராய்ச்சி!’ என்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. 

‘‘தமிழ் ஆராய்ச்சி! எங்கே, ஈழத் தமிழகத்திலா? இல்லை. சங்கம் வளர்த்த தமிழ் நாட்டிலா? இல்லை. மலேசியாவில், ஆங்கிலேயர் ஆதிக்க நாட்டில்.’’ 

என்று குற்றம் கூறிய அதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் குழாத்தினரேதான் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஶ்ரீமாவோ அரசு விரும்பிவாறு கொழும்பில் நடாத்தவேண்டும் என்று போர்க்கொடி பிடித்தவர்கள். எட்டு ஆண்டு கால இடைவெளியில் தமிழ் இடதுசாரிகளது இரட்டைவேடம் அம்பலப்பட்டது. 

சிங்களமொழி தோற்றம் பெறுவற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணாக அறியப்பட்டிருந்த ஈழத்தினைச் ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று சனாதனி பாரதி வெளிப்படுத்தியதன் உள்நோக்கமும், யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தாமல் சிங்கள மண்ணான கொழும்பிற்றான் நடத்த வேணும் என்று அடம்பிடித்த மார்க்சிய லேபிள்வாதிகளான க. கைலாசபதி கா. சிவத்தம்பி போன்றோரின் கள்ளமும் ஒன்றுதான், இலங்கைத் தீவில் தமிழருக்கு மரபுரீதியான நிலப்பரப்பு - தாயகமண் உரிமைகோரல் எதுவும் இல்லையென்பதைக் கூறும் இருவேறு வடிவங்கள்.

‘‘தமிழ் ஆராய்ச்சியை எந்த மொழியில் செய்யப் போகிறார்கள்? தமிழிலா? இல்லை; ஆங்கிலத்தில். இதற்கு எத்தனையோ சமாதானங்கள் கூறப்படுகின்றன. அவை எல்லாமே நகைப்புக்குரியன. ஒரு மொழியைப் பற்றிய ஆராய்ச்சி இன்னொரு மொழியில் நடாத்தப்படுவது, உலகில் இதுவே முதலாவதாயிருக்கலாம்.’’

என்று அதே ஆசிரியர் தலையங்கத்தில் விசனம் தெரிவித்த வசந்தம் இதழ், ஏன் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோர் இங்கிலாந்து சென்று, ஆங்கிலமொழியில் தமிழாய்வு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றனர், தமிழ் நாட்டில், தமிழ் மொழியில் ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கலாமே? என்று கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

எதேச்சதிகாரத் துணையுடன் பெரும்பான்மை அரசினால் அல்லது மக்களால் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து ஏவப்படும் அடக்குமுறை அட்டூழியங்களில் இருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்றும் ஒரு கேடயமாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மற்றும் அவர்களின் நலனிற்குத் துணைபுரியும் ஒரு சித்தாந்தமாக மார்க்சியம் உலகெங்கும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது.

தமிழ் மக்களின் மொழி உரிமையை மறுத்து சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டுவந்தமை, காலிமுகத் திடலில் தமிழ்மொழி உரிமைக்காக அமைதி வழியில் போராடிய தமிழர்களைச் சிங்களக் காடையரையும் காவற்துறையையும் கொண்டு தாக்கி விரட்டியிருந்ததமை போன்ற காரணங்களால் சிங்கள அரசிற்குத் தமிழ்மொழி தொடர்பிலான உலக மாநாட்டினைக் கொழும்பிற்றான் நடாத்தவேண்டும் என்று கேட்பதற்கான அல்லது கட்டளையிடுவதற்கான தார்மீக உரிமை இருக்கவில்லை. இவ்வாறான எதேச்சதிகார சிங்கள அரசிற்குத் துணைநின்று, சிறுபான்மையினரான தமிழர்களின் மொழி உரிமையையும் தாயக உரிமையையும் ஒருசேர மறுத்துத் தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காகச் செயலாற்றியவரான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களை மார்க்சியர்களாகக் கூறிக்கொள்வதே அருவருப்பான செயலாகும். 

இந்நூலில் 92ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘Jaffna International Tamil Research Conference of 1974’ என்ற தலைப்பிலான கட்டுரையில் கட்டுரையாசிரியர்  சச்சி ஶ்ரீகாந்தா அவர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரை sycophants என்ற மிகப் பொருத்தமான சொல்லின் மூலம் சுட்டியிருப்பது ஒரு நேர்மையான செயலே.

‘சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு:  நினைவலைகள்’ என்ற நுட்பமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கலாநிதி  பொன். பூலோகசிங்கம் அவர்களின் கட்டுரையும் மிகத் தெளிவாக நடந்தவற்றைக் கூறும் மிக முக்கிய ஆவணமாகும். கலாநிதி பொன். பூலோகசிங்கம் அவர்கள் மாநாட்டுக்குழுவில் கல்விக்குழுவின் செயலாளர்களில் ஒருவராகக் கடமையாற்றியவர், இலங்கையில் பல்கலைக்கழகப் புலமையாளர்களில் அறிவியல்ரீதியில் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களில் முதன்மையானவர். இலங்கைக் கிளையின் உள்ளக அமர்வுகளில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் அவரது கட்டுரையின் மூலமே என் ஐயங்கள் பல தெளிவு பெற்றன.

யாழ். மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பில்

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் இந்நூலில் நான்கு வெவ்வேறு நபர்கள் தயாரித்த பட்டியலும் வெவ்வேறு எண்ணிக்கைகளும் காணப்படுகிறது. 

  1. திரு. சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கட்டுரையில் காணப்படும் தகவல் ஆங்கிலத்தில் 71 கட்டுரைகள் + தமிழில் 40 கட்டுரைகள் = 111 (பக். 94)
  2. மாநாட்டு மலர்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் என்ற கட்டுரையில் முதலாம் ஆய்வுத் தொகுதியில் 30 தமிழ்க் கட்டுரைகள்(பக். 96-100). நினைவு மலரில் 44 கட்டுரைகள்
  3. 118 Articles presented by 97 Participants - Source : Index of Articles from the Conference Seminars of Tamil Studies of legitimate IATR - Compiled by Viruba Kumaresan(பக். 101)
  4. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : அறிக்கை - பேராசிரியர் சு. வித்தியானந்தன் - 115 ஆய்வுக் கட்டுரைகள் (பக். 107)

இவ்வாறு நான்கு வெவ்வேறான எண்ணிக்கை என்பது குழப்பத்திற்குரியதே, அதனைத் தீர்த்து வைக்கும் கடமையும் எனதாகிறது. 

யாழ்ப்பாண மாநாடு மற்றைய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி  மாநாடுகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டது, மாநாடு அமைதியாக மனநிறைவுடன் முடிவடையவில்லை. மற்றைய எல்லா மாநாடுகளுக்கும் அரசு ஒன்றின் ஆதரவும் நிதி நல்கையும் கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு, உள்ளூர் அரச அதிகாரிகள், அரச அடிவருடிகள் போன்றோரின் எதேச்சதிகார எதிர்ப்பிற்கு மத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கான செலவு மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது, ஆதலினால் போதிய கையிருப்பு இருந்தது என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாது. 

1977 ஆண்டில் ஆய்வுத் தொகுதியின் முதலாம் பகுதி 30 தமிழ்க் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. 1980 செப்டம்பரில் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் பகுதி 23 ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. மாநாடு அவலத்தில் முடிந்த காரணத்தினாலும் தொடர்ந்த அரச நெருக்கடிகளினாலும், பேராசிரியர் சு. வித்தியானந்தன் சந்தித்த அவலங்களாலும் மாநாட்டு மீதமுள்ள கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாகத் தொகுப்பதிலும் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மாநாடு நடைபெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின் ஆய்வுத் தொகுதியின் வெளியீட்டிற்கான நிதியை யாரிடம் கேட்பது, பேராசிரியர் சு. வித்தியானந்தன் கையறு நிலையடைகிறார். 

முதலிரு தொகுதிகளையும் அச்சிட்டுத் தந்த சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்தில் மீதமுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பாதி அச்சிடப்பட்ட நிலையில் தேக்கமடைகின்றன. திருமகள் அழுத்தகம் வேறொரு உரிமையாளரின் கைக்கு மாறுகிறது. அச்சிடப்பட்ட தாள்கள் சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றுக் கிடந்து சிதிலமடைகின்றன. 

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் முதலாமிரண்டாம் ஆய்வுத் தொகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி 115 ஆய்வுக் கட்டுரைகள் என்பதே  சரியான எண்ணிக்கையாகும், இதில் வெளியிடப்பட்டவை போக 115 - (30 + 23) = 62 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை. இரண்டு றோணியோத் தொகுப்புகளைத் தங்கள் ஆசிரியர் நீண்ட நாட்களாக வைத்திருந்தார் என்று பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மாணவர்கள் தகவல் தெரிவித்தாலும், அவை இன்றுவரை கிடைத்தில. அவரது நூற்சேகரம் எங்கு கைவிடப்பட்டது அல்லது சென்றடைந்தது என்ற தகவலைச் சொல்லுவதற்கு ஒருவரும் எனக்குக் கிடைக்கவில்லை. 

சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கணக்கின்படி 111 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகளையும், கட்டுரையாசிரியர்களின் பெயர்களையும் அவர் 1981ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலகத்திலிருந்த கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டுத் தொகுத்துள்ளதை https://sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425 என்ற இணைய முகவரியில் காணப்படும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சச்சி ஶ்ரீகாந்தா தமிழ்த்துறை மாணவரல்லர், விஞ்ஞானத்துறைப் பட்டதாரி தமிழ் இனத்தின் வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்டவற்றை அவர் தேடித் தொகுத்துள்ளமை பாராட்டுக்குரியதே.

பேராதனைப் பல்கலைக்கழகமும் அதன் பிரதான நூலகமும் இன்னமும் உள்ளன. 1981 - 2023 இடைப்பட்ட இக்காலத்தில் பேராதனைப் பல்கலையின் தமிழ்த்துறையில் எத்தனையோ விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும், நூலகர்களும் பணியாற்றியுள்ளனர், ஓய்வுபெற்றும் உள்ளனர். இவர்களில் ஒருவரேனும் வரலாற்றில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாநாட்டின் மீதமுள்ள வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரைகளைப் பார்வையிட்டு எழுதியுள்ளதாகவோ, தேடித் தொகுத்து வெளியிட முற்பட்டதாகவோ தகவல்களில்லை. இன உணர்வும் நூலக உணர்வும் இல்லாதவர்களாக, விமானச்சீட்டுக் கொடுத்தால் பறந்து பறந்துசென்று போலி மாநாடுகளில் கட்டுரை வழங்கிக் கலந்துகொள்வதால் என்னதான் பெருமையோ. என்ன ஒரு அவலம்! 

நான் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுத் தொகுதிகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரம் செய்யத் தொடங்கிய 2010 ஆண்டில் சென்னையில் என் கைக்கு முதன்முதலாகக் கிடைத்த ஆய்வுத் தொகுதியென்பது, 1980 செப்டம்பரில்  பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் தொகுதியே. நண்பர் கி. அ. சச்சிதானந்தம் அவர்கள் தன் சேகரத்திலிருந்த அத்தொகுதியை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். சில மாதங்களின் பின்னர் முதற் தொகுதியின் உள்ளடக்க விவரப் பக்கத்தினை நண்பரொருவர் மின்-அஞ்சலில் அனுப்பிவைத்திருந்தார். 

இவற்றைக்கொண்டு எனது தரவுதளத்தில் 53 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு, ஆய்வாளர், கட்டுரை வகைப்பாடு, பக்கம் போன்ற விபரங்களை உள்ளீடு செய்தபின் மீதமுள்ள 62 கட்டுரைகளை உள்ளடக்கிய மூன்றாம் தொகுதியைத் தேட முற்பட்டேன். இரண்டு ஆண்டுகளின் பின்னர் மூன்றாவது தொகுதியென்று ஒன்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்படவில்லை என்ற ஆணித்தரமான செய்தி கிடைக்கப்பெற்றேன். இதற்கிடையில் வேறுவழிகளில் ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகளையாவது தேடலாமெனத் தொடங்கியபோது, லண்டன் முரசு இதழில் வெளியான கட்டுரைத் தலைப்புகளையும், தமிழ்நேசன் இணையதளத்தில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும், சச்சி ஶ்ரீகாந்தா அவர்களின் பட்டியலில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும் சேர்த்து வைத்துத் தொகுப்பினைச் செய்திருந்தேன். இதன் காரணமாகவே எண்ணிக்கை 118 என எட்டப்பட்டது.  பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் முடிவே இறுதியானது. அவர் எந்த 115 கட்டுரைகளைத் தெரிவுசெய்து வைத்திருந்தார் என்ற பட்டியல் கிடைக்கும்வேளையில் அதனையே நானும் கடைப்பிடிப்பேன். 

சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காவேதவி ஆலயத்தின் சொத்தாக மாறிய நாட்களில், அச்சக நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்த என்று சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் அவரது தனிப்பட்ட உதவியாளரான திரு. கா. சிவபாலன் அவர்கள் திருமகள் அழுத்தகத்திற்கு அனுப்பட்டார். தமிழின் நல்லூழாக அங்குள்ள சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றிருந்த மீதமுள்ள கட்டுரைகள் அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த தாள்களைக் கண்டெடுத்த சிவபாலன் அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்திருந்து, தனது சொந்த செலவில் 15 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதியை ‘Papers Presented at the Fourth international Conference Seminar of Tamil Studies’ என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இந்நூலிற்கு அன்றைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், வருகைதரு தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் முன்னீடுகளைக் கொடுத்துள்ளார்கள். பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தனதுரையில் 115 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். அவர் ஆராய்ச்சியாளராகத் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாதிருந்துள்ளார் என்பதைச்  சுட்டும் ஆதாரங்கள் அவருரையில் காணப்படுகின்றன. 

சென்னையைச் சேர்ந்த என். முருகேசமுதலியார் அவர்கள் எழுதிய ‘A Critique of Nhat-cintanai : Thought and Style of a Modern Tamil Saint’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை ஏற்கனவே பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட இரண்டாவது தொகுதியில் இடம்பெற்றுவிட்டது.  இக்கட்டுரை மீண்டும் திரு. கா. சிவபாலன் அவர்களின் தொகுப்பில் அரைகுறையாக இடம்பெறுகிறது. இதனைத் தவிர்திருக்கவேண்டிய தமிழ்க் கடமை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுடையதே, சரவைப் பிரதியைப் பார்வையிட்டவர், தவறுகளைத் திருத்துவதற்கு முற்படவில்லை. திரு. கா. சிவபாலன் அவர்கள் தவவாழ்க்கை வாழ்ந்த ஆன்மிகவாதி, ஆராய்ச்சியாளரல்லர். அவருக்குத் தொடர்பில்லாத ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ்ப் புலமைஎழுச்சியால் ஈர்க்கப்பட்டவர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ் எழுச்சிக்குத் தலைவணங்கியே இப்பதிப்பினைச் செய்துள்ளார். நூல் அவருக்குப் படையல் செய்யப்பட்டுள்ளது.

திரு கா. சிவபாலனுடன் முறையாக உரையாடியிருப்பின், அதுவரையில் பதிப்பிக்கப்படாத மீதமுள்ள மற்றைய 47 கட்டுரைகள் தொடர்பிலான தகவல்களையாவது பெற்றிருக்கலாம், இலங்கைக் கிளையுடன் தொடர்பு ஏற்படுத்தி மீதமுள்ள கட்டுரைகளைப் பதிப்பிக்கும் சூழலை உருவாக்கியிருக்கலாம். இதனைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஏனோ தவிர்த்துள்ளார்.  

இவ்விரு காரணங்களாலுமே மேற்கூறியவாறு நான் சொல்வதற்குத் தள்ளப்பட்டேன். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் மாணவர்கள் என்ற கோதாவில் பலர் தமிழ்த்துறைப் பணிகளைப் பெற்றுள்ளனர், மேடைகளில் அவரது மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பூரிப்படைகின்றனர். ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் காட்டும் ஈழத்தமிழர் சால்புக்கோலத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களாக உயர்வடையாமல், நடிகர்களாகவே தேங்கிவிடுகின்றனர். 

இரா. ஜனார்த்தனன் எனும் மாயமான்

தமிழர்கள், சிங்கள புத்த அரசின் எதேச்சதிகார ஒடுக்குமுறைக்குள் இலங்கை பிரித்தானியிரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான சிறிதும் பெரிதுமாக இனவழிப்பு நிகழ்வுகள், சிங்கள பௌத்த அரசின் துணையோடு இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்துள்ளன. 1956 ஜூன் 11 ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்ற கல்லோயா தமிழினவழிப்பு என்று 1974 ஆண்டிற்கு முன்னரே சில நிகழ்வுகள் இடம்பெற்று தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாயினர், உயிர்ப்பலியெடுக்கப்பட்டனர். தமிழர்கள் தங்கள் உரிமைவேண்டி மேற்கொண்ட அறப்போரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை, எனினும் நாளுக்குநாள் தமிழர்கள் மத்தியில் எழுச்சியென்பது ஆழ்மனத்தில் ஏற்பட்டுவிட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவோ பொறுப்பு வகிக்காதவரும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எதிலும் முக்கிய பொறுப்பு வகிக்காத ஒருவரான திரு. இரா. ஜனார்த்தனன் யாழ்ப்பணத்திற்கு வந்துதான் இங்குள்ள தமிழர்கள் எழுச்சியடையவேண்டும் என்ற நிலை இருக்கவில்லை. அவரை உலகத் தமிழாராய்ச்சி மன்றமோ அல்லது இலங்கைக்கிளையோ யாழ்ப்பாண மாநாட்டிற்கென அழைக்கவில்லை. அவர் அதற்கு முன்னர் இருதடவை இலங்கை வந்திருந்தபோதும் அரசியற் கூட்டங்களில் கலந்துகொண்டு சிங்கள புத்த தேசியத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ்ர்களுக்கு ஆதரவாகவும் அரசியல் பேசினார் என்ற வரலாறுப் பதிவுகளையும் காணக்கிடைக்கவில்லை.

இப்படியான ஒருவரை உருப்பெருக்கி மிகவும் உச்சக்கட்டமான வேண்டாதவராகச் சித்தரித்து வதந்திகள் பரப்பட்டுள்ளன என்றே நான் எண்ணுகிறேன். 

  • குறிப்பாக எனக்கு விசா தந்துவுடக்கூடாது என்ற தாக்கீது வேறு. (பக்.180)
  • மறுநாள் விமானத்தில் கொழும்பு பயணம்.(பக். 182)
  • ஒரு கிறிஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்தனன் கொழும்பு சென்றடைய இந்தியத் தூதரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். - சரவணன் (பக்.146)

இரா. ஜனார்த்தனம் தொடர்பான செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை இருந்துள்ளது என்பது எனக்குச் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் கலவரம் நடைபெற்ற மறுநாள் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளதையும், என். சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர் பாதுகாப்பாகச் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவரை அழைத்துவந்தவர்கள் யாரென்பதும் அவர்களது நோக்கம் என்னவென்பதும் வெளிச்சமாகின்றன. 

இரா. ஜனார்த்தனம் அவர்களை கைது செய்வதாக இலங்கை அரசின் காவல் துறை மாநாட்டின் இறுதிநாளான 10.01.1974 அன்று மாலை காட்டிய தீவிரப் போக்கினை மறுநாள் காட்டவில்லை-தேடவில்லை, கைதுசெய்யவில்லை என்பதிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தில் இலங்கை அரசும் ஒரு பாத்திரமேற்றிருந்துள்ளது என்றும் கூறலாம். நிச்சயமாக ஈழத் தமிழர்களின் நன்மைக்காக இரா. ஜனார்த்தனம் அழைத்துவரப்படவில்லை என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். 

1974 பெப்ரவரி மல்லிகையில் டொமினிக் ஜீவா கூறிய ‘சில வந்தான் வரத்தான்கள் செய்துவிட்டுப் போன நாச விளைவுகளும்’ மற்றும் 1974 ஏப்ரல்-ஜூன் களனி இதழில் வாமனன் என்ற புனைபெயரில் க. கைலாசபதி எழுதிய ‘இந்தியாவிலிருந்து ஜனார்த்தனம் போன்ற கழிவுகளை’ என்பதிலுள்ளவாறான தனிமனிதச் செயல்களாக இல்லாமல் ஏதோ ஒரு திட்டமிடப்பட்ட மறைநிரலில் மூன்றாம் சக்தி ஒன்றின் அரசியல் நன்மைக்காக அழைத்துவரப்பட்ட மாயாமான் அவரென்பதாகவே நான் கணிக்கிறேன். ஈழத்தமிழர்கள் இவ்வாறு பல மாயமான்களைச் சந்தித்துள்ளனர் என்பதும் என் தெளிவு. 

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வை. கோபால்சாமி அவர்கள் வெளியேற்றப்பட்டதனால் பல இளைஞர்கள் தீக்குளித்து இறந்துபோனார்கள், வை.கோ ஆதரவாளர்களான இராயபுரம் ஏழுமலை போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.  வை. கோபால்சாமி பிரிந்து சென்றமைக்கு அந்நாட்களில் கலைஞர் கருணாநிதியால் கூறப்பட்ட காரணம் என்னவென்பதையும், இன்று அதே வை.கோ என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் நேர்மையாக மீள்வாசிப்புச் செய்தால், இந்த மாயாமான்களின் உற்பத்தி ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற உருவாக்கப்பட்டவர்களல்லர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். 

முடிவுரை

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற சீரிய சிந்தனையின் தந்தை - தனிநாயக அடிகளார் ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழ்மொழி தொடர்பில் உலகளாவிய முதலாவது அமைப்பு உலகத் தமிழாராய்ச்சி மன்றம், தமிழ்மொழியைக் காக்கும் வலுவான கேடயமும் அதுதான். உலகளவில் தமிழியலை நிலைநிறுத்தி அறிவுத் தளத்தில் செயற்பட்ட மன்றத்தினைத் தங்களது அரசியற் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு அமைப்பாகவே தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிடர்கள் கடந்தகாலத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் விருப்பத்தின் காரணமாக 2010ஆம் ஆண்டில் உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. அவர்களது திராவிட மாடல் என்ற செயல்வடிவினால் மிகவும் உச்ச அளவில் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்றால் அது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. 

இந்நிலையில் தனிநாயக அடிகளாரின் தொலைநோக்குப் பற்றுள்ளம் என்னவென்பதை எதிர்காலத் தமிழ் ஆய்வுலகம் அறியும் முகமாக 11.11.1965 அன்று தனிநாய அடிகளார் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை ஞாபகமூட்டலாத் தருகிறேன்.  

‘‘மகாநாட்டை ஒட்டி சில தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்படும். திருக்குறள் மொழிபெயர்ப்புக்களை சீனத்திலும் மலாய் மொழியிலும் வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இங்கு சிங்களத்திலும் நல்ல முறையில் வெளி யிடப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி. தமிழ் மொழி பல நாடுகளில் பேசப்படுகிறது. அதனால் பிரிட்டிஷ் நல்லுறவு நாடுகள் இலக்கிய மாநாட்டிலும் தமிழ் இலக்கியம் இடம்பெற்றுள்ளது. 

வாழ்விலே பண்பாட்டுக்கு முதலிடம் கொடுத்தவர் தமிழர். அதனாலேதான், 

பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் 

மண்புக்கு மாய்வது மன் 

என்ற கொள்கையைத் தழுவி நின்றனர். மனிதனைப் பண்புடையவனாக மட்டும் காண விரும்பவில்லை தமிழர். முழுமைபெற்ற மனிதனாக, சான்றோனாக காணவிரும்பினார்கள் தமிழர்கள். இத்தகைய மனிதர்களும் வாழ்ந்தார்களா என்று இன்றைய சூழ்நிலையில் எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டை நாம் மட்டும் வைத்திருந்தால் போதாது. உணர்ந்து பெருமைப்பட்டால் மட்டும் போதாது. அது உலகுக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உலகப்பண்பாடு செழிப்படையும் இப்படியான ஒரு பண்பாட்டை உலகம் இழப்பதைப் போன்றதொரு பேரிழப்பு வேறு இருக்க முடியாது. இவற்றைச் செய்ய இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் கவுன்சிலும், பிரெஞ்சு நாட்டுக்கு அலையன்ஸ் பிரான்சேஸ்,செர்மானிய நாட்டுக்கு ஜேர்மனிய இன்ஸ்ரிரியூட் ஒப் கல்ச்சர் போன்ற நிறுவனங்களும் உலகின் பல பாகங்களிலும் அரசாங்க உதவியோடு உண்டு, அப்படியே வேறு நாடுகளுக்கும். ஆனால் நமக்கு ஓர் அரசில்லாத குறையால் இந்தப் பணியை நாமே மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத்தவறினால் பெரிய தவறைச் செய்தவர்களாவோம். நாமே நமக்குத் துணையாக வேண்டும். இந்த அடிப்படையில் தான் மலாயா உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெறும் ’’

- ஆ.தேவராசன் : புதிய கண்ணோட்டத்தில் தமிழாராச்சி, ஈழநாடு (21.11.1965) பக்கம் 3.

உன்னத சிந்தனையொன்றை நூறு ஆண்டுகளாவது அதன் கண்ணியம் கெடாது தமிழர்களால் காப்பாற்றமுடியாது என்பதைப் பாறைசாற்றும் ஒன்றாக உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(Legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்ட நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுகிறது. 

UNESCO அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இல்லாதுபோதல் தமிழ்மொழிக்கு நல்லதல்லவே.

தங்கள் சைவ அடையாளத்தினைத் தக்கவைக்க ‘‘ஓம்’’ என்ற சொற்பயன்பாட்டினைப் போத்துக்கேயர் காலத்தில் ஈழத்தமிழர்கள் கைக்கொண்டதுபோல், நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் இந்நூலினூடாகப் புரிதலடைந்து உலகத் தமிழாராய்சி மன்றத்தினை அதன் வீரியம் கெடாமல் எவ்வாறாயினும் மீட்டெடுப்பார்களெனில் பெருமகிழ்ச்சியடைவேன்.  

எந்த ஒரு நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமலும், எந்தவொரு நாட்டின் நிதி நல்கையில் தங்கியிராமலும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினைத் தன்னிறைவுடன் செயற்படச் செய்யும் விதைக் காசினைச் சேகரித்துக்கொடுக்கும் வல்லமை இன்று உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர்களிடம் உள்ளது. தமிழைப் பாதுகாக்கும் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும். தனிநாயக அடிகளாரால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முதற்கேடயம்.

திரு. சச்சி ஶ்ரீகாந்தா, திரு கா. சிவபாலன் ஆகிய இரு ஈழத்தவர்களின் வரிசையில் தனிநாயகம் அடிகளாரின் உலகத் தமிழாரய்ச்சி மன்றத்தின் மாண்பினைக் காப்பாற்றியவர்களில் ஒருவராக நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களையும் இனிமேல் இணைத்துக் கூறலாம். பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகளில் இருப்பவர்கள் செய்வேண்டிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் தமிழ்த்தொண்டு தொடர என் வாழ்த்துகள். 

- விருபா குமரேசன்

t.kumaresan@viruba.com / admin@iatr.net

+919840254333 whatsApp


#iatr

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For