\\..... அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்று தொகுத்து வலையேற்றம் செய்யலாம்..... \\
என்றவாறு எழுதியுள்ளீர்கள். அதுவும் நீங்கள் முக்கியமான புத்தகங்களைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். இந்த முக்கியமான புத்தகங்களை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றிய ஒரு பொதுவான, அனைவராலும் ஏற்றுக்கொண்ட, நடுநிலையான ஒரு அளவுகோல் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற சக எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை அதன் உள்ளடக்கம் சார்ந்து நேர்மையாக அளவிடும் மனப்பாங்கு இங்கு இல்லை என்பதற்கு நீங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களால் ஆயிரம் பக்க அபத்தம் என்று சுட்டப்பட்டப்பட்ட புத்தகம் இன்று உயர் விருதைப் பெற்றுள்ளது, புத்தகக் கண்காட்சியில் தினமும் குறைந்தது 200 வாசகர்களாவது வாங்கிச் செல்கிறார்கள். ஆக ஒருவருக்கு அபத்தமாகத் தெரிந்த ஒரு புத்தகம் இன்னொரு இடத்தில் முக்கியமானதாகிறது.
உங்களைப் போன்று ஊடகங்களின் பக்கங்களை அடைத்துக்கொண்டிருக்கும் பலரும் ஏதோ ஒரு குழாம் மனப்பாங்கை, அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களை முடக்கும் செயலை மறைமுகமாகச் செய்யும் நிலையே இங்கு உள்ளது. உங்களுடைய அகராதியில் முக்கியமான என்பது கூட உள்ளடக்கம், கருத்தியல் சார்ந்ததாக அல்லாமல் அதற்குரியவர் உங்களுக்கு எந்த அளவுக்கு முதுகு சொறிந்து விடுவார், உங்களைப் பிரபலப்படுத்துவார் என்றதில்தான் தங்கியுள்ளது என்பதை நானறிவேன். உங்கள் இணையத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் இணையங்கள், வலைப்பதிவுகள் எவை என்ற பட்டியலை வைத்து இதனை உறுதிப்படுத்தலாம். \\ இணையத்தின் தன்மையை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டகால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்கோட்டில் பயணிக்கிறது \\ என்று உங்களை விதந்து ஆராதிக்கும் ஒருவர் புகழ்ச்சியாக எழுதலாம். ஆனால் அதில் உணைமையில்லை என்பது வாசகர் கலந்துரையாடல் என்றதில் நீங்கள் எழுதிய மேற்குறித்த வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நீங்கள் இணையத்தை முற்றாகத் தேடி அலசிப் பார்த்து எழுதுவதில்லை, உங்களை நெருக்கமாகச் சுற்றியுள்ள ஒரு சிலரின் தரவுகளை வைத்துக்கொண்டே எழுதுகிறீர்கள். இதனைத் தான் நீங்கள் நீண்ட காலமாகச் செய்து வருகிறீர்கள்.
விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையத்தில் ஒரு புத்தகம் சென்னைப் புத்தகக் காட்சியில் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும் என்பதைக் காட்டும் நுட்பத்தைக் கொண்டுள்ளோம். எடுத்துக்காட்டாக http://www.viruba.com/final.aspx?id=VB0000641 என்ற இணைய முகவரியில் அக்குறித்த புத்தகம் கிடைக்கும் அரங்குகளைக் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு விருபா இணையத்திற்கு தரப்பட்ட புத்தகங்களை மட்டுமே நாம் காட்டுகிறோம். நாம் இவ்வாறு செய்வதைப் பல பதிப்பாளர்கள் அறிவர், ஆனால் அவர்கள் புத்தகங்களைத் தராத நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்பதுதான் உண்மை நிலை.
அடுத்து, நாம் முக்கியமான என்ற ஒரு அளவுகோலை வைத்திருக்கவில்லை. பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டாலும் அல்லது புத்தகத் தயாரிப்பு நிறுவனத்தினால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும் இரண்டுமே இன்று புத்தகங்கள் என்ற பொதுச் சொல்லினாலேயே அழைக்கப்படுகின்றன. இரண்டையும் வேறுபடுத்தும் பொறுப்பு எங்களுடையதல்ல. எனவே நாம் முக்கியமானது என்ற அளவுகோலை விடுத்து அனைத்தையும் நீங்கள் குறிப்பிட்டபடி கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்பதை தொகுத்துக் காட்டும் செயலைச் செய்கிறோம். இதற்காகவே கண்காட்சியில் அரங்கு எண் - 139 இல் பங்குகொண்டுள்ளோம்.
சோணம் கட்டப்பட்ட மாடுகளைப் போல் உங்கள் பார்வையைக் கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பாருங்கள், குறிப்பாக தமிழ் இணையங்கள் பற்றிய பார்வையைக் குறுகலாக்காமல் அனைத்தையும் பாருங்கள், கருத்தியல் ரீதியில் நல்லதை எழுதுங்கள். உங்களுக்கு முதுகு சொறியக் காத்திருப்பவர்களை முன் நிறுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளாதீர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக