ஈரோடு புத்தகத்திருவிழாவிற்காக புதிதாக சில புத்தகங்களை தோழமை வெளியீடு வெளியிட்டுள்ளது.
1.பிரதியிலுருந்து மேடைக்கு....
இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும், அதன் மூலம் சாத்தியப்படும் விரிவான உறவு நிலைகள் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன.
- வெளி ரங்கராஜன்
எழுத்தாளர் : கி.பார்த்திபராஜா
பக்கங்கள் : 112
விலை : 60.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
2.சூரனைத் தேடும் ஊர்
தீர்ந்துபோன நிழல். தொலைந்து கொண்டிருக்கும் கிராமம். வரமும் சாபமாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் உறவு. பன்முகங்கொண்ட பகையின் ஊற்று. நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி... இடையிடையே வாழ்வின் சாறாய் வார்த்தைகள்.எளிய வாழ்வின் குறைவில்லா ஆற்றாமை. கனவுகள் சுமக்கும் கண்கள். இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புக்கள். உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல். காவுகொள்ளப்பெற்ற சூழலின் வனப்பை
மீண்டும் யாசிக்கும் ஆதிமனம் என்று இப்படைப்பின் விரல்கள் தொட்டுக் காட்டும் வெளி தீராத விசாலங்கொண்டது.
- கவிதா
எழுத்தாளர் : ஜனகப்ரியா
பக்கங்கள் : 144
விலை : 90.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
3.அக்கினி மூலை
'குற்றம்' என்ற முதல் கதை 1971 இல் வெளியானது. அன்று தொடங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைபட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. இதுவரை எழுதப்பெற்ற கதைகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து வகைமாதிரிகளான படைப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. ஆதலால் இங்கு இடம்பெற்றதை விடவும் சிறப்பான வேறு கதைகள் இருந்தாலும் அவை சேர்க்கப்படவில்லை. நவீன யுகத்தில் நமது கிராமிய வாழ்வின் சோதனைகள், வீழ்ச்சிகள்,
நகரமயமாதலில் ஏற்பட்ட இன்னல்கள், நுகர்வுப் பண்டமாகவே இன்னும் நீடிக்கின்ற பெண்களின் நிலை போன்றவற்றைப் பேசுகின்ற வகைமாதிரிகளே இவை.
- களந்தை பீர்முகமது
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பக்கங்கள் : 184
விலை : 100.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
4.தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
சமூகத்திற்காகவும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மகத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள். ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில சாதனைப் பெண்களின் சிறிய பதிவே இந்நூல்.
பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம்.
எழுத்தாளர் : பைம்பொழில் மீரான்
பக்கங்கள் : 288
விலை : 175.00 In Rs
பதிப்பு : திருத்திய முதற் பதிப்பு
5.அலசல்
சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார். போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆளம் கண்டு எழுதியிருக்கிறார். ஒற்றை முத்தெடுக்க முக்கடலும் மூழ்க கொண்ட சேவியரின் இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுப்புத்தான். ஆனால் அதனுள்ளே சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.
இவை கற்பனையின் விளைச்சல் அல்ல; கருத்துக்கள். எது குறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும். இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.
- சுந்தரபுத்தன்
எழுத்தாளர் : சேவியர்
பக்கங்கள் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
6.இந்தச் சக்கரங்கள்
கிருஷ்ணவேணியும் வந்து ஒரு வீடு பார்த்தாள், கொஞ்சம் ஊருக்கு ஒதுக்கமாக இருந்த ஒரு வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அது ஓடு வேய்ந்த கொஞ்சம் பழைய வீடுதானென்றாலும் அதுதான் தன் அபிலாஷைகளுக்குச் சாதகமான இடம் என்று நினைத்தாள். காரணம், அந்த வீட்டிற்கு முன்னும் பின்னுமாக இருந்த காலியிடம். தூண்டில்காரனுக்கு மிதப்பில் கண், தன் ஜாதகப்படியும் மகன் ஜாதகப்படியும் இந்நேரம் ஓகோவென்று இருக்கவேண்டிய தன் வாழ்வைத் தடுத்து நிறுத்திவிட்ட ஏதோ ஒரு தரித்திர ஜாதகத்தை விட்டு விலகி வந்திருக்கிற நிலையில், இப்போதாவது அதற்கு வழி வகுக்கின்ற ஓர் இடமாகப் பார்க்க வேண்டுமல்லவா? இப்படி நிறைய இடம் இருந்தால், இரண்டு மாட்டைப் பிடித்து கொல்லையில் கட்டலாம்,
நாலு மூட்டை மிளகாய் வாங்கி வாசலில் காயப் போடலாம்; அள்ளலாம், வீடு ஒரு மாதிரிப் பழசாக இருந்தால் என்ன? கொஞ்ச நாளில் இதையே வாங்கிப் புதுப்பித்துக்கொண்டால் போகிறது...
- நாவலிலிருந்து....
எழுத்தாளர் : ஜெயந்தன்
பக்கங்கள் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
7.தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தும்போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார்.
இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒருபக்கம்தான். கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும் மறுபக்கம் ஆகும். புகழ் தனது நூலில் இரு பக்கங்களையுமே நமக்குக் காணத் தருகிறார்.
- தியாகு
எழுத்தாளர் : ஓவியர் புகழேந்தி
பக்கங்கள் : 384
விலை : 150.00 In Rs
பதிப்பு : மூன்றாம் பதிப்பு
8.பெரியார் சிந்தனைகள்
தமிழ்ச் சமூகத்திற்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற சிந்தனையும் கருத்துக்களும் பகுத்தறிவுப் பாதையும் இன்றும் நாளையும் தமிழர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் குறைவான பக்கங்களில் வெளிவரும் இந்நூல், வாசிப்பதற்கு எளிதானது.
மிக நுட்பமாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட கருத்துத் தொகுப்பு.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 64
விலை : 35.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
9.மக்கள் தலைவர் காமராசர்
இன்னும்கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் காற்றிலே பறந்துவிட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றி பேசிவருகிறார்கள். காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது. ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
எளிமையான வாழ்வின் மூலம் அரசியல் வாழ்வில் ஓர் அரிய இலக்கணத்தை உருவாக்கிய காமராசர் கிங்மேக்கராகவும் உயர்ந்தவர். வந்தப் பச்சைத் தமிழர் அப்படி என்னதான் செய்தார்? என்ற கேள்விக்கும்,அவருக்கும் கூட ஏன் நெருக்கடிகள் நேர்ந்தன என்பதற்கும் சிறு விடையாக இந்நூல்.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 192
விலை : 110.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக