"சென்னை" வாரம் (Chennai Week)
2007-08-17 by விருபா - Viruba |
2
கருத்துகள்
மேலைநாடுகளில் பல நகரங்களில் வாழும் மக்கள் அந்நகரம் தோற்றம் பெற்ற நாளை, தற்காலத்தினருக்கு அந்நகரத்தின் தோற்றுவாய் பற்றிய வரலாற்றுப் பெருமைகளை தெரிந்துகொள்ள உதவியாக, நகரத்தின் தினமாக கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. இந்தியாவிலும் சில நகரங்களின் தினம் கொண்டாடப்படுகிறது.
பல வருடங்களாக சிறிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த "சென்னை வாரம்", கடந்த சில வருடங்களாக பரவலாக கொண்டாடப்படும் அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது. இக்கொண்டாட்டங்கள் ஆகஸ்டு மாதம் 19 முதல் 26 வரை நடைபெறும். பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள்,கேளிக்கை விடுதிகள், கல்லூரிகள் என்று பலராலும் தனித்தனியே சிறிய அளவில் "சென்னை வாரம்" கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்திற்கான "சென்னை வாரம்" சுமார் 50 வெவ்வேறு நிகழ்வுகளைக் கொண்டதாகத் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்கான "சென்னை வாரம்" நிகழ்வின் ஒரு அங்கமாக 2007.08.15 அன்று சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் இந்து நாளிதழுடன் இணைந்து "சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள்" என்ற தலைப்பில் 1800 களிலும் 1900 களின் ஆரம்ப ஆண்டுகளிலும் சென்னையில் பதிப்பிக்கப்ட்ட நூல்களைப் பற்றிய கண்காட்சியை தொடங்கியுள்ளது.
இக் கண்காட்சியை வார நாட்களில் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 வரையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். அனுமதி இலவசம்.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 15.08.2007 அன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது.
ஆரம்ப நிகழ்வில் வரலாற்று ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி உரையாற்றினார். அவர் "சென்னை வாரம்" என்பது ஆங்கிலத்தில் மட்டும் கொண்டாடப்படுவது என்றில்லாமல் தமிழிலும் கொண்டாடப்பட்டால் மாத்திரமே அனைத்து மக்களையும் சென்றடைவதாக இருக்கும் என்று குறிப்பிட்டு தனது உரையைத் தமிழிலேயே நிகழ்த்தினார். தனது உரையில் ஆரம்ப கால தமிழ்ப்பதிப்புகள் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை ஒரு பருந்துப்பார்வையில் தொட்டுப் பேசினார். வண்ணச்சாரம் தண்டபாணி சுவாமிகள், ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், தாண்டவராய முதலியார், சென்னை கல்விச் சங்கம், சதுரகராதி, திவாகர நிகண்டு, ஆரம்ப கால அச்சகங்கள், ஆரம்ப கால புத்தகம் கட்டுவோர் என்று பல விடயங்களை அவருடைய பேச்சில் உள்ளடக்கினார்.
ஆரம்ப நாட்களில் சென்னையின் பதிப்புத் தொழிலின் மையம் "பிராட்வே" பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதைக் குறிப்பிட்டு, இன்று அம் மையமானது தியாகராய நகருக்கு இடம் பெயர்ந்துள்ளதையும் குறிப்பிட்டார்.
அத்துடன் சென்னையில் எப்படி மார்கழி மாதம் கச்சேரி காலமாக பேசப்படுகிறதோ / கொண்டாடப்படுகிறதோ, அதே போன்று எதிர்வரும் காலங்களில் சென்னை வாரமும் பேசப்படும் அளவில், நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக மாறும் என்றும் எதிர்வு கூறினார்.
கண்காட்சியில் வைக்கப்ட்டிருந்த சில ஆரம்ப கால இதழ்கள், அகராதிகள் படங்களாக...
1.காந்தி
2.தமிழன்
3.சதுரகராதி
காண்காட்சி அழைப்பிதழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சென்னை தினம் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை http://www.themadrasday.in இணைய தளத்தில் பார்வையிடலாம்.
நண்பரே,
நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய
உங்கள் பதிவு, மிக சுவாரஸ்யமாக
இருந்தது. புலம் பெயர்ந்துள்ளத் தமிழ்ர்களுக்கு ஆர்வமுள்ள தகவல்களைக் கொடுத்தமைக்கு மிக்க
நன்றி.
ஜீவி
கருத்துரையிடுக