இணையத்தில் தமிழில் எழுதும் பலருக்கும் சில தவறான புரிதல்கள் உள்ளன. வலைப்பதிவு(Blog) எழுதுகிறேன் என்றால் தமிழ்மணத்தில் எழுதுகிறீர்களா? என்று கேட்கும் அளவிற்கு வலைப்பதிவும் - தமிழ் மணமும் ஒரே பொருள்படும்படி பலராலும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
இந்நிலைமை கடந்த மூன்று வருடங்களாக உள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற பல நிகழ்வுகள் இணையத்திற்கு வெளியேயும் உள்ளது. உதாரணமாக போட்டோக் கொப்பி இயந்திரத்தின் நிறுவனப் பெயரான Xerox என்பது இன்று அச்செயலையே சுட்டுவதாக தமிழகத்தில் வழக்கில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழ்99 விசைப்பலகையை தீவிரமாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளை ரவி வலைப்பதிவுலகில் முன்னெடுத்துள்ளார்.இது உண்மையில் வரவேற்கத் தக்க ஒரு முயற்சியே. 1999 இல் பல அறிஞர்கள் கூடி ஆய்வு செய்து, தமிழக அரசின் ஆதரவுடன் தமிழ்99 விசைப் பலகையை உருவாக்கி, அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆனால் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தாமாக இதனைப் பயன்படுத்தத் தொடங்கியவர்களே அதிகம்.
இந்நிலையில் ரவி குழுவினரது பரப்புரைகளால் பலர் தமிழ்99 விசைப்பலகையை புதிதாக பயன்படுத்தத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியாதாக இருந்தது. அண்மையில் சென்னைப் பல்கலைக் கழக பவழ விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் வழங்கப்பட்ட கணிச்சுவடி என்னும் கையேட்டில்கூட தமிழ்99 விசைப்பலகை பற்றியதாக சில அறிமுகங்களை சக வலைப்பதிவரான சிந்தாநதி தந்துள்ளார். இவை யாவும் தமிழ்99 விசைப்பலகையின் பயன்பாட்டினை அதிகப்படுத்தும் என்பதில் மிக்க மகிழ்ச்சியே.
ஆனால்.....
பலர் தமிழ்99 விசைப்பலகையின் சிறப்பம்சமாக பேசுகின்ற விடயங்கள் உண்மையில் தமிழ்99 விசைப்பலகைக்கு உரித்துடையவை அல்ல.
எடுத்துக்காட்டாக ரவி, சிந்தாநதி உட்பட பலர் குறிப்பிடும் முதல் விடயம்
\\ ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும்
அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். \\ (கணிச்சுவடியில் பக்கம் 20 இரண்டாவது பந்தி)
அடுத்ததாக.....
\\அதேசமயம் ஒரே எழுத்தை மூன்று முறை தட்டினால் முதல் எழுத்து மட்டுமே புள்ளியிடப்படும் புத்திசாலித்தனமும் இந்த விசைப்பலகை
முறைக்கு உள்ளது. இந்த இலக்கண முறையிலான குறுக்கு வழிகள் தமிழ்99 விதிப்படி எ-கலப்பையில் இணைக்கப்பட்டுள்ளதால்...\\
(கணிச்சுவடியில் பக்கம் 21 இரண்டாவது பந்தி)
இவை இரண்டும் தமிழ்99 விசைப்பலகையின் இயல்புகளே அல்ல.
இவை யாவும் எ-கலப்பையின் இயல்புகள்.
இதனை உறுதிப்படுத்துவதற்கு, உங்கள் கணனியில் உள்ள எ-கலப்பையை அகற்றிவிட்டு முரசு அஞ்சலை நிறுவிக் கொள்ளவும். அதன் பின் நீங்கள் வழமைபோல் Note Pad இல் அல்லது Microsoft Word இல் அல்லது ஏதாவதொன்றில் தமிழ்99 விசைப் பலகையை பாவித்து தட்டச்சிட்டுப் பார்த்தால், மேற்கூறிய இரண்டு இயல்புகளும் அங்கு செயல்படாது. ஏனெனில் முரசு அஞ்சலில் இந்த சிறப்பு இயல்புகள் இல்லை.
இந்த மாதிரியான ஒரு மயக்கமான புரிதல் பல வலைப்பதிவாளர்களுக்கு ஏற்படக் காரணம், அவர்களுக்கு தமிழ்99 இற்கு முன்னராக எ-கலப்பை அறிமுகமானமை ஆகும். பலரும் எ-கலப்பை யை நிறுவி முதலில் பயன்படுத்தியது Phonetic விசைப்பலகையைத்தான்.
பின்னர்தான் Phonetic விசைப்பலகையில் இருந்து தமிழ்99 விசைப்பலகைக்கு மாறியுள்ளனர்.
இதனால்தான் எ-கலப்பையின் இயல்புகளை தமிழ்99 இன் இயல்புகளாக எண்ணும் போக்கு உருவாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
எப்படியோ தமிழில் அடித்தால் சரி.
கீழ் கண்ட மாதிரி அடித்து படிப்பவனை நோகச் செய்யாமல் இருந்தால் சரி.
"enna Naan sol vathu sariyaa?"
உங்கள் கருத்துடன் வேறுபட விரும்புகிறேன். நீங்கள் கூறுவது போல் 'தானியக்க ஒற்றுச் செயல்பாடு' எ-கலப்பையின் அம்சம் மட்டுமல்ல. தமிழ்நெட் 99 தர விவரிப்பிலேயே அவ்வாறு இருக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது. (காண்க) அதனைத் தொடர்ந்துதான் எ-கலப்பை போன்ற மென்பொருட்களில் அந்தச் செயல்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. முரசு அஞ்சலில் தமிழ்நெட் 99 பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும்.
வணக்கம்
நானும் அவ்வாறு தான் நினைத்திருந்தேன். ரவிசங்கர் பின்னர் தெளிவு படுத்தினார். வாய்ஸ் ஆன் விங்ஸ் தந்துள்ள இணைப்பினூடே
http://www.tamilvu.org/Tamilnet99/annex2.htm
இந்த பகுதியில் பாருங்கள். தெளிவாக இந்த விதிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
voice on wings சொல்வது தான் சரி. முரசு அஞ்சல் தமிழ்99 வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை. அவ்வளவு தான். தமிழ்மணம் = பதிவுகள் போல், எ-கலப்பை = தமிழ்99 என்ற பிழையான புரிதலுக்கு இங்கு வாய்ப்பில்லை :) தமிழ்99க்கு இல்லாத சிறப்பைச் சொல்லிப் பரப்பத் தேவை இல்லையே? அதை விட சிறப்பாக இன்னொரு வடிவமைப்பு, அதைச் செயற்படுத்தும் மென்பொருள் வந்தால் அதை தமிழ்07 என்றே பரப்ப விரும்புவேன் :) ஆனால், ஒரு கட்டத்தில் standardise பண்ணுவது அவசியம் என்பதால் தமிழ்99ஏ போதுமானது.
இ-கலப்பையே இன்னும் தகராறாக உள்ளது எனக்கு...இதில் புதிதாக ஒன்றை சொல்லுகிறீர்கள்...இந்த தமிழ் சேவைகளுக்கு நாம் ஏன் ஒரு எக்ஸ்பர்ட் அணி ஒன்றை உருவாக்கி (தனியாக ஒரு வலை தளத்தில் ) அதில் அவர்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க கூடாது... ஏன்னா ஒரு பதிவர் கிட்டே நேற்றைய தினம் நாம் அனுகிய போது அவர் சொன்னவாறு செய்த பின்னும் என்னால் இ-கலப்பையய் பயன் படுத்த முடியவில்லை...
http://www.tamilvu.org/Tamilnet99/annex2.htm
தமிழ்99 விசைப்பலகையில் அழுத்தப்படும் விசைத்தொடர்களை எவ்வாறு உள்ளீடு மென்பொருள் மாற்ற வேண்டும் என்பது பற்றி இங்கே வரையறுத்திருக்கிறார்கள். சில மென்பொருள்கள் இவ்விதிகளை சரியாக நடைமுறை படுத்துவதாலும்/படுத்தாததாலும், அவை தமிழ்99இன் இயல்பல்ல என்றாகிவிடாது. அது அம்மென்பொருள் உருவாக்கியவர்களின் புரிதலை மட்டுமே உணர்த்துகிறது.
கருத்துரையிடுக