தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.
தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே.
புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர்.
இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்ட பத்திரிகைகள் பல உண்டு. மக்கள் பிரச்சனைகளில் இவர் எழுதிய எழுச்சி மிகு எழுத்துக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டோரும் மதிக்கும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் எழுதுவது
இவரது சிறப்பு. ஆளுவோரின் கோபங்களுக்கு அஞ்சியோ அல்லது வேறு எவரின் தயவை நாடியோ இவர் தனது எழுத்துக்களை முடக்கியதில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் இவருடன் பழகாதவர்கள் என்று எவரையும் கூறிவிடமுடியாது.
ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு கோணங்களில் விமர்சித்து கட்டுரைகள் எழுதியுள்ள நிலையில் இவர் ஈழம் குறித்து தெளிவான முறையில் "ஈழத் தமிழர்கள் யார்?" என்ற கேள்வியுடன் கட்டரையை ஆரம்பித்து தற்போது ஈழத்தில் நிகழும் போர் நிறுத்த மீறல்கள் வரை என்ன நடக்கின்றது? அதன் காரணங்கள் என்ன? என்று அலசி ஆராய்நது விளக்கியுள்ளார்கள்.
சோலை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நந்தன், தமிழ் ஓசை, குமுதம் ரிப்போட்டர் ஆகிய இதழ்களில் ஈழம் குறித்து எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்ட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. 96 பக்கங்கள் கொண்ட இந்நூலை தணல் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதனை விலை 25.00 ரூபா ஆகும்.
முன்னுரையில் பழ. நெடுமாறன்
.... தமிழ்நாட்டில் ஊடகங்களும், எழுத்தாளர்களும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டவர்களாக பெரும்பாலும் இருப்பதால் தமிழீழப் பிரச்சனை மிகவும் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை எந்த அளவிற்கு திரித்துக் கூறவேண்டுமோ அந்த அளவிற்கு திரித்தும், மறைத்தும் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் நண்பர் சோலை அவர்கள் நடுநிலையுடன் நின்று ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக உள்வாங்கி அதனுடைய முப்பரிமாணத்தையும் தமிழக மக்கள் நடுவில் கொண்டு சென்றிருக்கிறார். அதற்காக அவரை தமிழர்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஊடகங்கள் மட்டுமல்ல அகில இந்தியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட இந்தப் பிரச்சனையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே அதற்கு எதிர்நிலை எடுத்திருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் நண்பர் சோலையின் எழுத்துக்கள் அவர்களைப் போன்றவர்களை நிச்சயமாகத் தெளிவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் தனது எழுத்தின் மூலம் தக்க வழியைக்காட்டியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது வலிமையான எழுத்தின்மூலம் ஆதரவு திரட்டிவரும் அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றி கூறக் கடமைப் பட்டவர்கள்.
இந்த நூலில் அவர் அவ்வப்போது பல பத்திரிகைகளில் தமிழீழப் போராட்டம் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டு மக்கள் ஈழப் பிரச்சனையை தெளிவாகப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவியிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டால் இந்தியாவின் பிற்பகுதிகளில் வாழ்பவர்களும் இந்தப் பிரச்சனையை உணர்ந்து கொள்ள வழிபிறக்கும்.
முதிர்ச்சி பெற்ற எழுத்தாளரான நண்பர் சோலை அவர்களின் இந்த நூலினை வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்குப் பரப்புரை செய்ய வேண்டும் என தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக