"எஸ்.பொ" என்று அன்புடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் இலக்கியப் போராளி எஸ்.பொன்னுத்துரை அவர்களின் இரண்டு புத்தகங்கள் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளன.
"?" என்பதுதான் ஒரு நூலின் பெயர் (அங்கதம் இழையோடும் புனைவு). அதற்குள் பந்த நூல் மூலமும் நச்சாதார்க்குமினியார் உரையும் இணைந்துள்ளது.
இது தமிழ் இலக்கியத்திற்கு, படைப்பிலக்கியத்திலே புதிய வடிவங்களையும், பரிணாமங்களையும் தரும் எஸ்.பொ தந்துள்ள இன்னொரு புதிய வடிவம்.
இந்த நூல் 31.10.1972 இல் இலங்கையில் இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் அவர்களின் அரசு வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்டது.
மீண்டும் இருபத்தியிரண்டு வருடங்களின் பின்னர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் காந்தாளகம் மூலம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்நூல் சென்னையில் வெளிவந்த பொழுதுதான் தமிழ்நாட்டில் பல பேராசிரியர்களின் பார்வையில் பட்டு பாராட்டைப் பெற்றது.
தமிழக் கவிதைகளை மக்கள் மயப்படுத்திய த.பழமலய், அசோகமித்திரன் மற்றும் தமிழ்ப் பல்கலைக் மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசன் ஆகியோர் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள்.
144 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மித்ர வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது.
இரண்டாவது நூல் "ஈடு"
இதனை எஸ்.பொ வுடன் சேர்ந்து அ.சந்திரஹாசன் எழுதியுள்ளார்.
ஈடு - ஈழத் தமிழ் இனம் அடிமையான வரலாற்றையும் அதன் எதிர்வினையான போராட்ட எழுச்சியையும் சொல்லும் முதல் நாடகம்.
"ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை, அதன் உன்னதத்தை, அதன் அவலத்தை நாடகமாக்கியுள்ளது ஈடு. சந்தர்ப்பவாத அரசியலின் அவலங்கள், சாணக்கிய அரசியலின் கொடுமைகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஏக்கங்கள் ஆகியவற்றை ஈடு வரலாற்று வரிசையில் முன் வைக்கிறது. உலகளாவிய துயர்கண்ட ஈழத்தமிழர்களின் உண்மை வரலாற்றை எள்ளலும் துள்ளலுமாக ஈடு முன்வைக்கும் படைப்புப் பாங்கம் உயர் ரசாநுபாவத்திற்குரியது" என்கிறார் முன்னுரையில் சித்தன்
இந்நூல் புலம்பெயர்ந்த நாடுகளிலே அந்நிய கலாச்சாரத்தின் மத்தியில் தமிழ் நாடகக் கலையை முன்னெடுத்து வாழும் தமிழ் உணர்வாளர், உறவாளர், உபாசகர் ஆகிய இனியவர்களுக்கு படையல் செய்யப்பட்டுள்ளது.
19.12.1992 இல் சிடனி மக்குவாரி பல்கலைக்கழக அரங்கில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்ட நாடகமாகும்.இதில் சிட்னியில் வாழும் தமிழர்கள் நாடக மாந்தர்களாக தோன்றியுள்ளார்கள். செந்தமிழ்க் கலா மன்றத்தின் ச.தேவராசா, சிவகுரு மனோகரன் குறிப்பிடக்கூடியவர்கள்.
96 பக்கங்களைக் கொண்ட இந்நூலும் விரைவில் வெளிவரவுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக