"நான் ஏன் எழுதுகிறேன்?" & "கண்ணியம்"
2008-03-28 by விருபா - Viruba |
0
கருத்துகள்
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன். 1990 முதல் இன்று வரையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு "கண்ணியம்" இதழில் பதிவு செய்யப்பட்டவற்றை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற புத்தக வடிவில் முதலில் வெளியிட உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளராக - ஒரு பதிப்பாளராக தான் செய்யாத அரிய பணியை செய்கின்ற "கண்ணியம்" குலோத்துங்கனை வெகுவாகப் பாராட்டிய ச.மெய்யப்பனின் வாழ்த்துக்களுடன் "நான் ஏன் எழுதுகிறேன்?" இதுவரையில் 13 தொகுதிகள் வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது.
"கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களினது எழுத்துக்கான காரணத்தையும் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் வெளியிட ஆர்வாமாக உள்ளார்.
தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.
2008-03-22 by விருபா - Viruba |
0
கருத்துகள்
விருபா தளமானது தமிழ் வாசகர்களின் தேடல்களிற்கு உதவுமாறு கட்டமைக்கப்பட்டது. விருபா தளத்தை இயக்கிக்கொண்டிருக்கும் "விருபா வளர் தமிழ்" செயலியானது நாளிற்கு நாள் மெருகூட்டப்பட்டு வருகின்றது. புதிய வித தேடல்கள், தேவைகளுக்கேற்ப அதன் கட்டமைப்பில் மாறுதல்களை நாம் செய்து வருகின்றோம். சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியான புதிய புத்தகங்களை தனியாக அறிமுகப்படுத்தியிருந்தோம். அதேபோன்று இந்த ஆண்டின் தை மாதத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தகங்களிற்கான தமிழக அரசின் பரிசு வழங்கும் நிகழ்வுடன், இதுவரை காலமும் தமிழக அரசினால் பரிசு வழங்கப்பட்ட நூல்களின் பட்டியலை தொகுக்கும் பக்கத்தை தனியாக ஏற்படுத்தியிருக்கின்றோம்.
கடந்த வாரம் ஒரு மாறுபட்ட சந்திப்பில், விருபா தளத்தைப்பற்றி அறிமுகத்தையும், விளக்கத்தையும் கொடுத்த வேளையில், ஒரு தமிழாசிரியர், உங்கள் "விருபா வளர் தமிழ்" செயலியால், தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்களின் பட்டியலை தர முடியுமா என வினா எழுப்பினார்.
அவருடைய வினாவிற்கு விடையாக மறு நாளே "தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை" என்ற புதிய பக்கத்தை விருபா தளத்தில் ஏற்படுத்தி "விருபா வளர் தமிழ்" செயலியின் திறனை உறுதி செய்துள்ளோம். இப்புதிய பக்கம் வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கு உதவும் என்பதில் மகிழ்ச்சியே.
இதற்காக, கேள்வியை எழுப்பிய தமிழாசிரியருக்கு எமது நன்றிகள்.
அதேபோன்று இலக்கிய கூட்டங்களில் எம்மைச் சந்திக்கும் வேளைகளில் 'விருபா தளத்தின் Hits என்ன?' என்று வெறுப்பேற்றும் உள்ளங்களிற்காக இம்மாதத்திற்குரிய விருபா தளத்தின் Hits பொதுவில் வைக்கப்படுகிறது.
அகிலனின் "தனிமையின் நிழல் குடை"
2008-03-01 by விருபா - Viruba |
2
கருத்துகள்
தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, குறும்பட, ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில்.
"கனவுகளின் தொலைவு" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல் நேர்நிரை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
"எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது" என்று கவித்துவம் பேசும் அகிலன் தனது நூலிற்கு "தனிமையின் நிழல் குடை" என பெயரிட்டுள்ளார்.
"நம்மைக் கடந்த நிலையில் வலிய காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெருஞ்சுழலாக அது நம்மை அதற்குள் இழுத்துப் போட்டு விடுகின்றது. அகிலன் இதெல்லாவற்றையும் சரியாகவே அடையாளப்படுத்துகிறார். அவருடைய உலகம் கசப்புகளாலும் நிராகரிப்புகளாலும் ஆனவை. கனிவும் கருணையும் அன்பும் நிரம்பிய இதயத்தை நிராகரிக்கும் காலம் விரிந்திருப்பதை அகிலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. அகிலனின் மொழிதல் எளிமையும் தீவிரமும் கூடியது" என்று இவருடைய புத்தகத்திற்கான அறிமுகத்தை தந்திருப்பவர் கருணாகரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)