வானத்திலே திருவிழா
2007-10-25 by விருபா - Viruba |
2
கருத்துகள்
வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!
எட்டுதிசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!
தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே!
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!
பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!
அகண்டவெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!
ஏறத்தாளப் பத்து ஆண்டுகள் மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்று இலட்சக் கணக்கான குழந்தைகளால் பாடப் பெற்று புகழ் பெற்ற பாடல்.
தமிழக வலைப்திவாளர்கள் பலருக்கும், தங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படித்ததில், மிகவும் விரும்பிய பாடலாக உள்ளதும் இப்பாடலே.
குழந்தைகளிற்காக பல பாடல்களைத் தந்த அழ.வள்ளியப்பா தான் இப்பாடலை எழுதியதாக இன்னமும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகளாக இருந்த காலத்தில் நெஞ்சில் பதிந்த இப்பாடல் தொடர்பில் வலைப்பதிவாளர் கார்த்திகேயன் சுப்பிரமணியம் தனது வலைப்பதிவான எழுதுவது சுகாவில் 2006 இல் எழுதிய குழந்தைக் கவிஞர்...?? என்ற பதிவும் அதற்கான பின்னூட்டங்களுங்கூட இப்படலை எழுதியவர் அழ.வள்ளியப்பா என்ற எண்ணப்பாட்டையே தருகின்ற வகையில் இட்டுச் செல்கின்றன.
ஆனால் இப்பாடலை எழுதியவர் அழ.வள்ளியப்பா அல்லர்.
இப் பாடலை எழுதிய கவிஞர் முனைவர் பொன்.செல்வகணபதி ஆவார்.
கவிஞர் பொன்.செல்வகணபதி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1972 இல் தமது மாணவப் பருவத்தில் "செல்வணபதி கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டு இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாமக்கல் கவிஞர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோராரின் பாராட்டைப் பெற்றவர். "நிழல்களை நோக்கிய போராட்டங்கள்", "கைது செய்யப்பட்ட நியாயங்கள்", "சுதந்திர சோகங்கள்", "ஞாபகப் பிசகு", "முதல் வெளிச்சம்" ஆகிய கவிதை நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் "வானத்திலே திருவிழா" என்ற மழலைப் பாடல்கள் நூல் ஒன்றினைத் தந்துள்ளார்.
"வானத்திலே திருவிழா" நூலிற்கான அறிமுகவிழா 27.10.2007 மாலை 5.30 மணிக்கு சென்னை கன்னிமார நூலகத்தில், முனைவர் கம்பம் சாகுல் அமீது அவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் முனைவர் இராம.குருநாதன், இலக்குவனார் இலக்கியப் பேரவை கவிஞர் செம்பை சேவியர், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
அன்று "வானத்திலே திருவிழா" பாடலை விரும்பிப் பாடி மகிழ்ந்து இன்று பெரியவர்களாக உள்ளவர்கள், தங்களுடைய குழந்தைகளுக்காக இன்றைய "வானத்திலே திருவிழா" மழலைப் பாடல்கள் நூலினை வாங்கி ஆதரிப்பார்களாக!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)