இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராகவும் நல்லதொரு சமயவாணராகவும் திகழ்ந்தவர் கே.பி.ஹரன். தனது 23வது வயது முதல் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும் பின்னர் "வீரகேசரியில்" (1939-1959) 20 ஆண்டுகள், "ஈழநாட்டில்" (1959-1979) 20 ஆண்டுகள் என்று தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இரு இதழ்களிலுமே அவர் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.
1906.10.17 இல் தஞ்சைமாவட்டம் திருவையாற்றில் பிறந்த இவருடைய இயற்பெயர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் என்பதாகும்.
1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் டாக்டர் சண்முகரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.
1979 இல் சென்னை திரும்பிய அவர் தனது 75 ஆவது வயதில் 1981.10.14 அன்று சென்னை மயிலாப்பூரில் காலமானார்.
"சுயநலப் பற்றற்று நாட்டிற்கு நற்பணிபுரியும் பரந்த மனப்பான்மையுடன் பத்திரிகையாளன் செயற்படும்போதுதான் பத்திரிகைகள் நாட்டுக்கு பயனுள்ள சேவை செய்ய முடியும்" என்ற மகாத்மா காந்தியின் வரைவிலக்கணத்தை தாரக மந்திரமாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் நற்பணியாற்றியவர் கே.பி.ஹரன்.
இனிது நீடூழி வாழியவே என்ற தலைப்பில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ஈழநாடு பத்திரிகையின் பத்தாண்டு நிறைவையொட்டி எழுதிய வாழ்த்துச் செய்தி.
இலங்கையில் தமிழர் இலங்குறும் வளஞ்சார்
யாழ்ப்பாண நன்னகர்க் கண்ணே
துலங்குறும் ஈழ நாடெனும் பெயரைச்
சூடியே நாளித ழாக
நலங்கொள்ச் செய்தி விரித்தறி வினையே
நயம்பெற விளங்குகட் டுரைகள்
கலங்களு ரொழிக்கும் சமயத்தின் விளக்கம்
காட்டியே மலர்வதொன் றுண்டால்
பன்னெடுங் காலம் நாளிதழ் சமைக்கும்
பணியினில் அணிபெற ஓங்கி
நன்னய முறவே தலையங்கம் சமய
நலஞ்சொலும் கட்டுரை யாதி
இன்னிய லுடனே எழுதுதல் வல்லார்
இயற்பெயர் அரனெனும் பெரியார்
மன்னிய நல்லா சிரியரென் றமைந்து
வளர்வதிந் நாளிதழ் இனிதே!
இத்தகு பெயர்கொள் ஈழநா டிப்போ
திலகிய பத்தாண்டு நிரம்பி
வித்தக முடனே தமிழர்கள் போற்ற
விளங்கியே நலம்செய்து வளரும்
சத்தியங் கரந்தான் முருகவேள் அருளால்
தாரணி யிற்புகழ் பெருக்கி
எத்திசை யினரும் போற்றமே லோங்கி
இனிது நீ டூழிவா ழியவே