2006-12-30
புலமை - தமிழ் ஆய்விதழ் (Journal of Tamilology)

தமிழில் வெளியாகும் ஆராய்ச்சி/ஆய்வுரை இதழ் புலமை ஆகும்.
1970களில் முனைவர் பொற்கோ அவர்கள் இலண்டன் பல்கலைக் கழகத்தில் கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவேளையில் அங்குள்ள பல நூலகங்களில் பல்வேறு மொழிகளுக்கான ஆராச்சி இதழ்கள் உலகளாவிய உயர்ந்த தரத்துடன் இருந்த நிலையில், இலண்டன் பல்கலைக் கழகத்திலும், பிபிசி வானொலியிலும், ஆக்ஸ்போர்டு நூலகத்திலும் தமிழ்
இடம்பெற்றிருந்தாலும்,தமிழிற்காக எந்த ஒரு ஆராய்ச்சி இதழும் இல்லாத குறையைக் கண்டு மனம்வருந்தி, இந்தியா திரும்பிய பின்னர், 1975 இல் தனது நண்பர்களின் துணையுடன் அறிஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் புலமை என்னும் ஆராய்ச்சி இதழாகும்.
ஆரம்ப நாட்களில் காலாண்டிதழாக வெளிவந்த புலமை சில வருடங்களின் பின்னர் அரையாண்டிதழாக மாறியது. பின்னர் இருமொழி இதழாக மாறியது,இதனால் தமிழ் தெரியாத ஆங்கிலமறிந்த மொழி ஆராச்சியாளர்களின் கவனத்தையும் பெற்றது. இதழ் வெளிவரும் கால இடைவெளி மாறினாலும் கட்டுரைகளின் தரத்திலும் இதழ் அமைப்பிலும் எந்தவித குறைகள் இன்றி மேலும் மேலும் பொலிவு பெற்று வளர்ந்து வந்துள்ளது.
இப்படியொரு இதழ் வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தை முனைவர் பொற்கோ அவர்களின் மனதில் ஏற்படுத்திய இடமான பிரிட்டிஷ் நூலகத்திலும் புலமை இடத்தைப் பெற்றுளது.
புலமை இதழ் வெளிவருவதில் தமிழ் ஆர்வலர்கள்,அறிஞர்களின் பங்கு அளப்பரியது.
திரு.மெய்யப்பன்,
முனைவர் கி.அரங்கன்,
முனைவர் கே.எஸ்.கமலேஸ்வரன்,
முனைவர் சூ.க.சுப்பிரமணியன்,
முனைவர் இராம சுந்தரம்,
முனைவர் ஆர்.பெரியாழ்வார்,
பேராசிரியர் சி.மெய்கண்டன்,
முனைவர் சாமி,
அறவாணன்,
பொறியிலாளர் அ.மெய்யப்பன்,
மு.கந்தசாமி
ஆகியோரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
ந.அரணமுறுவல் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து புலமையை அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் முத்துசண்முகனார், பேராசிரியர்.மெ.சுந்தரம், மேராசிரியர் வ.சுப.மாணிக்கம், பேராசிரியர் அகத்தியலிங்கனார், பேராசிரியர் செ.வை.சண்முகம் முதலான் அறிஞர் பெருமக்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். தமிழாராச்சியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும், அறிஞர்களும், ஆய்வாளர்களும் பலமை இதழைப் போற்றிப் பாராட்டிப் பயன்படுத்தினர்.
புலமை ஆய்வுரைக் கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் சில அரிய நூல்களையும் வெளியிட்டுள்ளது. சில அரிய கட்டுரைகளையும், அரிய குறுநூல்களையும் புலமை மறுவெளியீடு செய்துள்ளது. புலமையின் சார்பில் 1980 இல் புலமை வட்டம் என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டு,அவ்வமைப்பு மூலம் பல கருத்தரங்குகளும் சிறப்புரைகளும் நடத்தப்பட்டன.
புலமைக்கு பின்னர் சில ஆராய்ச்சி இதழ்கள் தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு சில காலங்களுக்கு வெளிவந்துள்ளன. அவையாவன -
"மொழியியல்",
"நாட்டுப்புறவியல்",
"கலை",
"இமயமும் குமரியும்".
புலமைக்கு முன்னராக வானமாமலை அவர்களால் தொடங்கப்பட்ட "ஆராய்ச்சி" என்னும்
ஆய்விதழும் சில காலங்களுக்கு வெளிவந்துள்ளமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலமை தற்போது புலமை மன்றமாக மாற்றமடைந்துள்ளது, புலமை மன்றம் இப்பொழுது "தமிழியல் ஆராய்ச்சி" என்ற பெயரில் ஆய்வுரைத் தொகுப்புகளை நூல் வடிவில் ஆண்டிற்கு இரண்டு முறை வெளியிட்டு வருகிறது. இதுவரையில் பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளது. புலமையின் பணி தொடர்கிறது.
2006-12-21
தமிழ்க்கொடை
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ் மண் பதிப்பகத்தார் தமிழிற்கு தொண்டாற்றிய பல அறிஞர்களின் நூல்களை புதிதாக பதிப்பித்து வருகிறார்கள். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, நுண்கலைஞ் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன், ஈழத்து தமிழறிஞர் ந.சி.கந்தையா, வெ.சாமிநாத சர்மா,புலவர் இரா.இளங்குமரனார் ஆகிய தமிழறிஞர்க்ளின் அனைத்து நூல்களையும் தொகுப்புக்களாக ஏற்கனவே பதிப்பித்துள்ளார்கள்.
தற்சமயம் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களுடைய காலம் போற்றும் 54 நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாக புதிய பதிப்பாக வெளியிடவுள்ளார்கள்.

2007.01.08 அன்று இந்நூல்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் சென்னை தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படவுள்ளன.
3800.00 ரூ பெறுமதியான இந்நூல்களை முன் பதிவுத் திட்டத்தில் 31.12.2006 இற்கு முன்னராக பதிவு செய்வதன் மூலம் 2500.00 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இந் நூல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மண் பதிப்பகத்தாருடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்.
தற்சமயம் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களுடைய காலம் போற்றும் 54 நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாக புதிய பதிப்பாக வெளியிடவுள்ளார்கள்.

2007.01.08 அன்று இந்நூல்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் சென்னை தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படவுள்ளன.
3800.00 ரூ பெறுமதியான இந்நூல்களை முன் பதிவுத் திட்டத்தில் 31.12.2006 இற்கு முன்னராக பதிவு செய்வதன் மூலம் 2500.00 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இந் நூல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மண் பதிப்பகத்தாருடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்.
2006-12-16
ஈழம் - சோலையின் புதிய புத்தகம்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.
தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே.
புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர்.
இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்ட பத்திரிகைகள் பல உண்டு. மக்கள் பிரச்சனைகளில் இவர் எழுதிய எழுச்சி மிகு எழுத்துக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டோரும் மதிக்கும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் எழுதுவது
இவரது சிறப்பு. ஆளுவோரின் கோபங்களுக்கு அஞ்சியோ அல்லது வேறு எவரின் தயவை நாடியோ இவர் தனது எழுத்துக்களை முடக்கியதில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் இவருடன் பழகாதவர்கள் என்று எவரையும் கூறிவிடமுடியாது.
ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு கோணங்களில் விமர்சித்து கட்டுரைகள் எழுதியுள்ள நிலையில் இவர் ஈழம் குறித்து தெளிவான முறையில் "ஈழத் தமிழர்கள் யார்?" என்ற கேள்வியுடன் கட்டரையை ஆரம்பித்து தற்போது ஈழத்தில் நிகழும் போர் நிறுத்த மீறல்கள் வரை என்ன நடக்கின்றது? அதன் காரணங்கள் என்ன? என்று அலசி ஆராய்நது விளக்கியுள்ளார்கள்.
சோலை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நந்தன், தமிழ் ஓசை, குமுதம் ரிப்போட்டர் ஆகிய இதழ்களில் ஈழம் குறித்து எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்ட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. 96 பக்கங்கள் கொண்ட இந்நூலை தணல் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதனை விலை 25.00 ரூபா ஆகும்.

முன்னுரையில் பழ. நெடுமாறன்
.... தமிழ்நாட்டில் ஊடகங்களும், எழுத்தாளர்களும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டவர்களாக பெரும்பாலும் இருப்பதால் தமிழீழப் பிரச்சனை மிகவும் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை எந்த அளவிற்கு திரித்துக் கூறவேண்டுமோ அந்த அளவிற்கு திரித்தும், மறைத்தும் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் நண்பர் சோலை அவர்கள் நடுநிலையுடன் நின்று ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக உள்வாங்கி அதனுடைய முப்பரிமாணத்தையும் தமிழக மக்கள் நடுவில் கொண்டு சென்றிருக்கிறார். அதற்காக அவரை தமிழர்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஊடகங்கள் மட்டுமல்ல அகில இந்தியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட இந்தப் பிரச்சனையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே அதற்கு எதிர்நிலை எடுத்திருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் நண்பர் சோலையின் எழுத்துக்கள் அவர்களைப் போன்றவர்களை நிச்சயமாகத் தெளிவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் தனது எழுத்தின் மூலம் தக்க வழியைக்காட்டியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது வலிமையான எழுத்தின்மூலம் ஆதரவு திரட்டிவரும் அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றி கூறக் கடமைப் பட்டவர்கள்.
இந்த நூலில் அவர் அவ்வப்போது பல பத்திரிகைகளில் தமிழீழப் போராட்டம் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டு மக்கள் ஈழப் பிரச்சனையை தெளிவாகப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவியிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டால் இந்தியாவின் பிற்பகுதிகளில் வாழ்பவர்களும் இந்தப் பிரச்சனையை உணர்ந்து கொள்ள வழிபிறக்கும்.
முதிர்ச்சி பெற்ற எழுத்தாளரான நண்பர் சோலை அவர்களின் இந்த நூலினை வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்குப் பரப்புரை செய்ய வேண்டும் என தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.
2006-12-15
மணாவின் புதிய 3 நூல்கள்.
தற்பொழுது புதிய பார்வை இதழின் ஆசிரியராகக் கடமையாற்றும் எழுத்தாளர் மணா தமிழில் பிரபலமான பல பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளவர்.
தமிழகம்; பிரச்சனைக்குரிய முகங்கள்,
தமிழகத் தொழில் முகங்கள்,
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்
என்ற இவரது மூன்று நூல்களுமே இரண்டாம் பதிப்பைக் கண்டவை.
இவரது மூன்று புதிய நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.
1.ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள்

புதிய பார்வைக்காகவும், இதற்கு முன் அவர் பணியாற்றிய தீராநதிக்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில், சமூக கலை, இலக்கியம் சார்ந்த ஆளுமைகளுடன் (தொ.பரமசிவன், கே.ஏ.குணசேகரன், மு.கருணாநிதி, கமலஹாசன், பாரதிராஜா, கோவை ஞானி, பொன்.சத்தியநாதன், என்.வி.சுப்பராவ், கி.வீரமணி, பா.செயப்பிரகாசம், சுந்தர ராமசாமி, பிரேமிள், ஜெயமோகன், கவிஞர் சேரன், ஆ.சிவசுப்ரமணியன், காஞ்சனா தாமோதரன், மருது, பிரபஞ்சன், ஆதிமூலம், சுப்பு ஆறுமுகம், தொல்.திருமாவளவன், தமிழண்ணல், ஜவாஹிருல்லாஹ், இரா.செழியன், கொளத்தூர் மணி, தா.பாண்டியன், அருள்மொழி, தமிழருவி மணியன், கி.பி.அரவிந்தன், நல்லகண்ணு.) தான் பேட்டி கண்டு எழுதியவற்றை ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள் என்ற பெயரில் நூல் வடிவில் தந்துள்ளார்.
இவ்வுரையாடல்கள் அனுபவம் சார்ந்தும், கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன.
2.ஊர்மணம்

தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்து அம்மண்ணின் மைந்தர்கள், பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள் தங்களின் மனப்பதிவுகளை இந்நூலின் மூலம் முன்வைக்கிறார்கள்.
3.தமிழ் மண்ணின் சாமிகள்

உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்திய பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழக மண்ணின் பன்முக பண்பாட்டுவேர்களைத் தேடிச்செல்கிறது.
2006-12-12
செந்தமிழ்ச் செல்வி

பல ஆண்டுகளாக பல்வேறு அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்த பெருமை மிக்க திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளர் தாமரைச்செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த பெருமைக்குரிய செந்தமிழ்த் திங்கள் இதழ் செந்தமிழ்ச் செல்வி ஆகும்.
தமிழகத்தில் வெளிவரும் இதழ்களில் அதிக வயதுடைய இதழ் இதுவேயாகும்.
தற்பொழுது வ.சுப்பையா பிள்ளை அவர்களின் மருமகனுமமாகிய இரா.முத்துக்குமாரசுவாமி அவர்கள் செந்தமிழ்ச் செல்வியின் ஆசிரியராக இருந்து இதழினை தரம்குறையாமல் சிறப்பாக வெளியிடுகின்றார்.
பொற்கோ என்று அன்புடன் அழைக்கப்படும் முனைவர் பொன்.கோதண்டராமன்,
முனைவர் தமிழண்ணல்,
முனைவர் க.ப.அறவாணன்,
முனைவர் கு.சுந்தரமூர்த்தி
இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரன்,
முனைவர் கவிமாமணி வேலூர் ம.நாராயணன்,
டாக்டர் புரட்சிதாசன்
ஆகியோரின் வழிகாட்டுதலில் இவ்விதழ் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.
2006-12-11
பாரதியின் 125 வது பிறந்ததினம்

படம்:வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனின்(கே.எஸ்.ஆர்) கரிசல் காட்டின் கவிதைச்சோலை பாரதி நூலின் அட்டையிலிருந்து ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியம் - நன்றி
2006-12-10
"ஈ" பிரச்சனைக்குரியதா?


எமது தளத்திலும் தீர்வு காணப்படமுடியாத பிரச்சனை என்றால் அது "ஈ" பிரச்சனைதான். சுந்தரவடிவேலும் அண்மையில் "ஈ" பற்றி ஒரு விளக்கம் கேட்டிருந்தார். சரி அது அச்சில்/வடிவத்தில் உள்ள பிரச்சனை என்றால், நாங்கள் பாதிக்கப்படுவது இணைய "ஈ" ஒழுங்காக வரிசையில் வர மறுக்கும் அதன் பிடிவாத குணத்தால்.
நாங்களும் எங்கள் தளத்தில் யாரையும் முன்னிலைப்படுத்தாமல் அகர வரிசையில் எல்லாவற்றையும் பட்டியலிட்டுள்ளோம். ஆனால் இந்த "ஈ" எங்களின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் தான் விரும்பும் இடத்தில் போய் நின்றுகொள்கிறது. பல தடவைகள் எங்கள் செயலியின் அகர வரிசை ஆணையை பல வடிவங்களில் மாற்றி அமைத்தாலும் "ஈ" சரிவர இயங்க மறுத்து தன் விருப்பப்படியே இயங்குகின்றது. அத்தோடு "ஈ" தன்னுடன் சேருபவர்களையும், உதாரணமாக "க" சேரும் போது உருவாகும் "கீ", "சீ",..... போன்றவர்களையும் கெடுக்கின்றது.
புத்தகங்களைத் தேடும் பகுதியிலும், வாசகர் கருத்துக்கள் பகுதியிலும் உள்ள இந்தப் பிரச்சனைக்கு யாரவது தீர்வு தருவீர்களா?
Labels: இணையம்
2006-12-07
தாயகம்
யாழ்ப்பாணம் கொக்குவிலில் இருந்து வெளிவரும் கலை, இலக்கிய,சமூக, விஞ்ஞான காலாண்டிதழ் தாயகம் ஆகும்.

இதன் ஆசிரியர்:க.தணிகாசலம்

இதன் ஆசிரியர்:க.தணிகாசலம்

